விலங்குகளுக்கு ஒப்பான மனிதர்கள்..!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இவ்வுலகத்திலே அனைத்து படைப்பினங்களிலும் மிகச் சிறந்த படைப்பாக மனித வர்க்கத்தை அல்லாஹ் படைத்துள்ளான். ஆனால் மனிதனை படைத்து அவனுக்கு சில செயல்களை அல்லாஹ் தடுத்துள்ளான். அந்த செயல்களில் யார் ஈடுபடுகிறார்களே அவர்களை ஐந்து அறிவுள்ள மிருகத்திற்கு அல்லாஹ் ஒப்பாக்குகிறான். யாரை மிருகத்திற்கு ஒப்பாக்குகிறானே அந்த மனிதன் சபிக்கபட்டவன். நமக்கு முன்சென்ற சமுதாயத்தினர் அல்லாஹ் தடுத்த காரியங்களை செய்த காரணத்தினால் அவர்களின் உருவத்தை அல்லாஹ் மாற்றியுள்ளான்.
நமக்கு முன்சென்ற சமுதாயத்தை சனிக்கிழமை மீன் பிடிக்க கூடாது என்று தடை விதித்துள்ளான். ஆனால் அவர்கள் வரம்பு மீறியதால் அந்த கூட்டத்தில் சிலரை குரங்குகளாக மாற்றிவிட்டான். ஆனால் நமது சமுதாயத்தை உருவம் மாற்றாமல் மிருகத்திற்கு ஒப்புக் காட்டுகிறான். அல்லாஹ் தடுத்த செயலை நாம் விட்டு விலகியிருக்க வேண்டும். யாரை அல்லாஹ் மிருகத்திற்கு ஒப்பாக காட்டுகிறானே அவர்கள் மறுமை நாளில் கெட்ட இடத்திற்கு தகுதியானவர்கள். அதாவது நரகத்திற்கு செல்ல கூடியவர்கள். சுவனத்தில் நுழையாதவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் யாரையெல்லாம் விலங்குகளுக்கு ஒப்பான மனிதர்கள் என்று திருக்குர்ஆனில் கூறுகிறான் என்பதை இந்த உரையில் நாம் காண்போம்..
யார் சத்தியத்தை ஏற்க மறுக்கிறார்களே அவர்களை அல்லாஹ் கால்நடைக்கு சமமாக ஒப்பிடுகிறான். ஏனென்றால் கால்நடைகளுக்கு கண்கள் இருந்தாலும் எது நல்லது, கெட்டது என்று அதனால் பார்க்க முடியாது. காதுகள் இருந்தாலும் அதனால் சரியானதை செவியேற்க முடியாது. இதே போன்று தான் மனிதர்களுக்கு கண்கள் இருந்தாலும் எவை உண்மையான மார்க்கம், போலியான மார்க்கம் என்று பார்க்காமல் அசத்தியத்தை கண்மூடித் தனமாக பின்பற்றுகிறார்கள். காதுகள் இருந்தாலும் அதன் மூலம் சத்தியத்தை செவியேற்காமல் தனது காதுகளை மூடிக்கொள்கிறார்கள்.
இப்படி மனிதர்களை அல்லாஹ் கால்நடைக்கு சமமாக ஒப்பிடாமல் அதற்கு கீழ்த்தரமாக அவர்களை பயன்படுத்துகிறான். சத்தியத்தை ஏற்காத மனிதர்களை பார்த்து அவர்களுக்கு காதுகள் இருந்தாலும் செவிடர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்கள், நாவுகள் இருந்தாலும் ஊமைகள் என்று அல்லாஹ் கூறுகிறான். கால் நடைகள் இந்த உலகத்தில் எப்படி வைக்கோலை சாப்பிடுகிறாதே அதே போன்று தான் சத்தியத்தை ஏற்காத மனிதர்களும் உள்ளன என்று குறிப்பிடுகிறான்.
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.
வெறும் சப்தமாகவும், ஓசையாகவும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே விளங்க மாட்டார்கள்.
அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (ஏக இறைவனை) மறுத்தோர் (இவ்வுலகில்) கால்நடைகள் தின்பது போல் தின்று அனுபவிக்கிறார்கள். நரகமே அவர்களுக்குத் தங்குமிடம்.
மார்கத்தை கற்று அதன்படி நடக்காதவர் ஏடு சுமக்கும் கழுதைக்கு சமம். இஸ்லாத்தை ஏற்று அதன் படி நடக்காதவருக்கு கழுதையை உதாரணமாக கூறுகிறான். கழுதையின் மீது சுமையிருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் தன்னுடைய வழி (பானி)யிலே செல்லும். எதையும் உணராது. அதே போன்று தான் ஒருவர் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாம் கூறும் வழிமுறைகளை பின்பற்றாமல் தீமைகளை பின்பற்றினால் அவன் இஸ்லாத்தை ஏற்றுயிருப்பது எந்த நன்மையும் கிடையாது. அல்லாஹ் நமக்கு குர்ஆனில் அனைத்து காரியங்களையும் தெளிவுப்படுத்திவிட்டான்.
குர்ஆன் கூறிய அடிப்படையில் நாம் நடைமுறை படுத்த வில்லையென்றால் நாம் கழுதைக்கு ஒப்பாக இருக்கிறோம். வரதட்சனை, வட்டி, விபச்சாரம், மது, சூதாட்டம் இது போன்ற செயல்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்துள்ளார்கள். இந்த செயல்களை இஸ்லாம் தடுத்துள்ளன என்று தெளிவாக நாம் அறிந்து வைத்துள்ளோம். இச்செயல்களில் நாம் ஈடுபட்டோமென்றால் சுமை தூக்கும் கழுதை போன்று தான். நமக்கு முன்னால் உள்ள சமுதாயத்தை உதாரணமாக கூறுகிறான்.
தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.
நாம் தொழுகும் போது சரியாக தொழுவில்லையென்றால் நம்முடைய உருவத்தை கழுதை உருவமாக அல்லாஹ் மாற்றிவிடுகிறான். இமாம் தக்பீர் கட்டும் போது நாமும் தக்பீர் கட்டவேண்டும். இமாம் ருகூ செய்யும் போது நாம் ருகூ செய்ய வேண்டும். அவர் ருகூவிலிருந்து எழுந்த பிறகு தான் நாம் ருகூவிலிருந்து எழுந்திருக்க வேண்டும். இமாம் ஆமீன் கூறிய பிறகு தான் நாமும் ஆமீன் கூற வேண்டும். தொழுகையில் இமாமை விட எதாவது ஒரு செயலை முந்தி செய்தாலும் அல்லாஹ் நம்முடைய உருவத்தை கழுதையாக மாற்றிவிடுவான்.
أَمَا يَخْشَى أَحَدُكُمْ أَوْ لَا يَخْشَى أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை உயர்த்துவதால் அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தை கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கிவிடுவதை அஞ்ச வேண்டாமா?
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 691)
நாம் மக்களிடத்தில் பேசும் போது மெதுவாகவும் அல்லது நடுத்தரமாகவும் பேச வேண்டும். சப்தமிட்டுபேசினால் நம்முடைய குரலை கழுதையுடைய குரலுக்கு அல்லாஹ் ஒப்பு காட்டுகிறான். கழுதையின் சப்தம் கடுமையாகவும் மிகவும் மோசமானதாகும். அந்த குரலை யாரும் விரும்பி கேட்க மாட்டார்கள். கழுதை சப்தம் போடும் போது அனைவரும் அதை விட்டு விளகி சென்று விடுவார்கள்.
நமக்கு கோபம் வரும் போது நம்மை அறியாமல் சப்தமிட்டு பேசுகிறோம். நாம் சப்தமாக பேசும் போது யாரும் நம்முடைய பேச்சை விரும்பி கேட்க மாட்டார்கள். நம்முடைய பேச்சை விட்டும் திரும்ப தான் செய்வார்கள். நாம் சப்தமிட்டு பேசாமல் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பொறுமையை கடைபிடிக்காமல் சப்தமிட்டு பேசினால் நாம் கழுதைக்கு ஒப்பானவர்களாக ஆகிவிடுவோம்.
“நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்).
விபச்சாரத்தை பகிரமாக செய்பவர்களையும், மக்களுக்கு நன்மை செய்யாமல் தீமை செய்ய கூடியவனுக்கும், மக்களுக்கு நன்மை நாடாதவனும், மக்களுக்கு நன்மை செய்பவனை தடுப்பவனையும், மக்களிடம் மோசடி செய்ய கூடியவனையும், வட்டி வாங்குபவனையும். தொழுபவர்களை தடுப்பவனையும், பிறரை பற்றி அவதூறு பேசுபவர்களையும் அல்லாஹ் கழுதைக்கு ஒப்புக் காட்டுகிறான். இப்படிப்பட்டவர்கள் இருந்தால் மறுமை நாளின் அடையாளமாகும். நாம் அனைவரும் இந்த செயலை செய்யாமல் மக்களுக்கு நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும்.
நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சியிருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள்மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும்.
நூல் : (முஸ்லிம்: 5629)
நாம் பிறருக்கு அன்பளிப்பு வழங்கி பிறகு அதை திருப்பி வாங்க நாடினால் அல்லது அதற்கு பகரமாக அவர் வேற பொருட்களை தர வேண்டும் என்று நினைத்தாலும் நாம் நாய்க்கு ஒப்பானவர்களாக ஆகிவிடுவோம். நாம் அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை திருப்பி வாங்குவதற்கு ஒருவருக்கு மட்டும் தான் அனுமதி, வேற யாருக்கும் அனுமதியில்லை. தந்தை தனது மகனுக்கு அன்பளிப்பாக ஒரு பொருளை தந்தால் அந்த பொருளை திருப்பி வாங்குவதற்கு அனுமதியுண்டு. நாம் தனது மனைவியிடம் ஒரு பொருளை அன்பளிப்பு வழங்கினால் அதை திருப்பி வாங்குகிறோம். இப்படி செய்வது கூடாது.
நாம் பல நபருக்கு அன்பளிப்பு வழங்குகிறோம். ஆனால் நமக்கு கஷ்டம் வரும் போது நாம் பிறக்கு கொடுத்த அந்த அன்பளிப்பை திருப்பி வாங்குவதற்கு நாடுகிறோம். இப்படி வாங்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நமக்கு கஷ்டம் வந்தாலும் நாம் பிறருக்கு தந்த அன்பளிப்பை திருப்பி வாங்க கூடாது. நாய் ஒரு பொருளை சாப்பிட்ட பிறகு அதை வாந்தி எடுத்தது என்றால் அந்த வாந்தியை திருப்பி சாப்பிடும். அதே போன்று தான், அன்பளிப்பு வழங்கிய பிறகு அதை திரும்ப வாங்க நாடியவனுக்கு நபி (ஸல்) அவர்கள் நாயை உதாரணமாக கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி),
நூல்: (புகாரி: 2622)
இஸ்லாம் சில சட்டங்களை கூறியிருக்கும். அந்த சட்டம் நமக்கு தோதுவாக இல்லையென்றால் நமது உள்ளம் எதை நாடுகிறதோ அதையே நாம் செய்கிறோம். வட்டி, வரதசட்னை, வியாபாரத்தில் மோசடி, அவதூறு போன்றவை கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இஸ்லாம் கூறிய இந்த சட்டத்தை விட்டு விட்டு தனது மனோயிச்சையை சிலர் பின்பற்றுகிறார்கள்.
தனது மனோயிச்சையை பின்பற்றுபவர் நாய்க்கு ஒப்பானவர். திருடன் நாய்க்கு உணவளித்தாலும் அவனுக்கு நன்றி செலுத்தும். அதே போன்று நல்லவர் உணவளித்தாலும் அவனுக்கும் நன்றி செலுத்தும். நாய் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று அறியாது.
அதே போன்று தான் நாம் மனோயிச்சையை பின்பற்றினால் எந்த செயல்கள் நல்லது, எந்த செயல்கள் கெட்டது என்று அறியாமல் செயல்படுவோம். தனது மனோயிச்சையை பின்பற்றினால் நமக்கு தான் அதிகமான பாதிப்புள்ளது. நாம் மனோயிச்சையை பின்பற்றாமல் இஸ்லாம் கூறிய சட்டத்தை பின்பற்றவேண்டும். கஷ்டமாக இருந்தாலும் அதை விட்டுவிட கூடாது.
நாம் நாடியிருந்தால் அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக!
நாம் தொழுகையில் சரியான முறையில் ஸஜ்தா செய்ய வில்லையென்றால் நம் செயலை நாய்க்கு ஒப்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஸஜ்தா செய்யும் போது இரு கைகளின் மூட்டுகளை கீழே வைக்காமலும், தொடையின் மீது வைக்காமலும், வயிற்றில் ஒட்டாமலும் சரியாக வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது அவருடைய அக்குள்கள் தெரியும் அளவுக்கு ஸஜ்தா செய்வார்கள்.
நாம் ஸஜ்தா செய்யும் போது பிறருக்கு இடையூறு இல்லாமல் அதாவது தன்னுடைய இரு கைகளையும் ஒரே அடியாக விரித்து வைக்காமல் வைக்க வேண்டும். ஒரே அடியாக கையை விரித்தால் நாம் நாய்க்கு ஒப்பானவர்களாக ஆகிவிடுவோம்.
اعْتَدِلُوا فِي السُّجُودِ وَلَا يَبْسُطْ ذِرَاعَيْهِ كَالْكَلْبِ وَإِذَا بَزَقَ فَلَا يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلَا عَنْ يَمِينِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முறைப்படி சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். நாயைப் போன்று கைகளைப் படுக்க வைக்கலாகாது. (தொழும்போது எச்சில் வந்துவிட்டால்) தமக்கு முன்புறம் துப்பலாகாது; தம் வலப்புறம் துப்பலாகாது. ஏனெனில் தொழுதுகொண்டிருப்பவர், தம் இறைவனிடமே இரகசியமாக உரையாடிக்கொண்டிருக்கிறார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: (புகாரி: 532)
தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது இரு கைளை வைப்பதற்கு முன்னால் இரு கால்களையும் வைப்பவரை ஒட்டகத்திற்கு சமமாக நபி (ஸல்) அவர்கள் ஒப்பு காட்டியுள்ளார்கள். சுன்னத் வல்ஜமாத் என்று சொல்ல கூடியவர்கள் முதலில் கையை வைக்க கூடாது. இரு கால்களையும் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஒட்டகம் தனது உணவை பல நாட்களாக வைத்து பிறகு சாப்பிடும். இது போன்று தான் ஒரு மனிதனும்.
إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ وَلَا يَبْرُكْ بُرُوكَ الْبَعِيرِ
உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (நஸாயீ: 1091) (1079)
அல்லாஹ் அல்லாதவனிடம் யார் பாதுகாப்பு தேடுகிறார்களோ அவருக்கு உதாரணம் சிலந்தி பூச்சி ஆகும். சிலந்தி பூச்சியின் கட்டடம் உறுதியாக இருக்குமா என்றால் கிடையாது. அதே போன்று தான் அல்லாஹ் அல்லாதவரை அழைத்தால் அவனுக்கு அல்லாஹ் தவிர வேற யாரும் உதவி செய்ய முடியாது. சிலந்தி பூச்சி கட்டிடம் எப்படி உறுதியாக இருக்காதே அதே போன்று தான் அல்லாஹ் அல்லாதவரை அழைப்பவனும்.
அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (அதை) அவர்கள் அறியக் கூடாதா?
கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் “இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்பதை அறிந்து கொள்கின்றனர்.
ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் “இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?” என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழி கேட்டில் விடுவதில்லை.
அல்லாஹ்வின் ஆலயத்தை இடித்தவர்களுக்கு அல்லது அல்லாஹ்வின் ஆலயத்திற்கு இடையூறு தருபவர்களுக்கு வைக்கோலுக்கு சமம் என்று அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். வைக்கோல் கால்நடைக்கு தவிர வேற எவருக்கும் உதவாது. அதே போன்று தான் பள்ளிவாசலுக்கு அல்லது பள்ளிவாசலில் இடையூறு அளிப்பவனும்.
1.(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?(2)அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா?(3)அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.(4) சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.(5) உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.
அல்லாஹ் எவரை சபித்தானே, கோபித்துவிட்டானே, உருவத்தை மாற்றினானே இவர்கள் நரகத்திற்கு செல்ல கூடியவர்கள். நமக்கு முன்சென்ற சமுதாயம் அல்லாஹ் தடுக்கப்பட்டதை செய்த காரணத்தினால் அவர்களை உருவம் மாற்றி விட்டான். ஆனால் அல்லாஹ் நமக்கு சில காரியங்களை விட்டும் நம்மை தடுத்துள்ளான்.
அதை நாம் செய்தால் நம்மை உருமாற்றமாட்டான். நபி நாயகம் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தை உருவ மாற்றாமல் கால்நடைக்கு ஒப்புக்காட்டுகிறான். அல்லாஹ் மனிதர்களை உருவம் மாற்றினாலும் அல்லது ஒப்புக்காட்டினாலும் அவர்கள் நரகத்திற்கு செல்ல கூடியவர்கள். சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
“அல்லாஹ்விடம் இதை விட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?” என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ, எவர்கள் தீய சக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்.
உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! “இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன்: 2:65)
தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறினோம்
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது.
அல்லாஹ் கால்நடைகளில் நமக்கு படிப்பினை பெற சொல்கிறான்.
கால்நடைகள் மூலம் நாம் பெரும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ்வும், அவனது தூதரும் தடுத்த காரியத்தை நாம் செய்து வரம்பு மீறினால் கடுமையான வேதனை உண்டு. நரகத்தில் செல்ல கூடியவர்களாக ஆகிவிடுவோம். நமக்கு முன்சென்ற சமுதாயத்தினர் வரம்பி மீறிய காரணத்தினால் அவர்களை உருவம் மாற்றி நரகத்திற்கு உரியவர்களாக ஆகிவிட்டான்.
நாம் நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த காரியத்தை விட்டும் விலகியிருக்க வேண்டும்.! அப்படி விலகி நன்மைகளை மட்டும் செய்யும் நன்மக்களாகவும், தீமைகளிலிருந்து விலகி வாழும் நன்மக்களாகவும் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.