140. விமானம் தாமதமாகி, அரஃபாவிற்கு தான் வந்தேன். ஹஜ், உம்ரா கூடுமா?
தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர் அரஃபா நாளில், அரஃபாவில் தங்குகின்ற நேரத்தில் தான் மக்காவிற்குள் வந்து சேர முடிந்தது. இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் தான் கிடைக்குமா? அல்லது ஹஜ்ஜும் உம்ராவும் சேர்த்துக் கிடைக்குமா? இனி, இவர் உம்ரா, அதற்குரிய தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ போன்றவை செய்ய முடியாதே! இவர் என்ன செய்ய வேண்டும்?
பதில்
தனது ஹஜ்ஜை கிரான் என்ற முறையில் ஆக்கிக் கொண்டு விட்டால் இவருக்கு இந்த நிலையில் ஹஜ், உம்ராவுக்கும் சேர்த்து ஒரே தவாஃப், ஸயீ செய்தால் போதுமானது. ஹஜ், உம்ரா இரண்டும் சேர்த்து இவருக்குக் கிடைத்து விடும்.
ஹஜ்ஜுக்காக அவர் இஹ்ராம் கட்டும் போது தனது ஹஜ்ஜை கிரான் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும். தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தல் தவிர உள்ள, ஹாஜிகள் செய்கின்ற மற்ற வணக்கங்களை அவர் செய்து கொள்ள வேண்டும். துப்புரவானதும் அவர் ஹஜ்ஜுக்குரிய தவாஃபும், ஸஃபா மர்வாவில் ஸயீயும் செய்து விட்டால் அவருக்கு ஹஜ்ஜும் உம்ராவும் கிடைத்து விடும்.
உம்ராவுக்கான தவாஃப் இந்த கிரான் முறையில் கடமையாக ஆகாது. சுன்னத்தாக ஆகிவிடும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “விடைபெறும்’ ஹஜ் ஆண்டில் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக “இஹ்ராம்’ கட்டினோம். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரிடம் பலிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும்” என்று சொன்னார்கள்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மக்காவிற்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடவுமில்லை.
ஆகவே, இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது அவர்கள், “உன் தலை (முடி)யை அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்’ கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடு” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் (இஹ்ராம் கட்டுவதற்காக) “தன்ஈம்’ எனும் இடத்திற்கு அனுப்பினார்கள். (அங்கிருந்து புறப்பட்டு) நான் உம்ராச் செய்தேன். “இது உனது (விடுபட்ட) உம்ராவிற்குப் பதிலாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
உம்ராவிற்காக “இஹ்ராம்’ கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறை ஹஜ்ஜுக்காகச் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தனர்.
கிரான் முறையில் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் ஒரே தவாஃப் போதுமானது என்று கூறப்படுவதால் உம்ராவுக்காக தனி தவாஃப் தேவையில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.