7) விதியை நம்புவதால் என்ன நன்மை

நூல்கள்: விதி ஓர் விளக்கம்

விதி நம்பிக்கை மனிதனைச் சோம்பேறியாக்குமா

இஸ்லாத்தில் விதியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது போல் வேறு மதங்களிலும் தலைவிதி என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாம் சொல்லும் விதி நம்பிக்கைக்கும் மற்றவர்களின் விதி குறித்த நம்பிக்கைக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்பதால் நாம் உழைக்கத் தேவை இல்லை. நமக்கு எது விதிக்கப்பட்டதோ அது நாம் உழைக்காவிட்டாலும் நமக்குக் கிடைத்து விடும் என்று மற்ற மதங்கள் சொல்வது போல் இஸ்லாம் விதியை நம்பச் சொல்லவில்லை.

நோய் வந்தால் மருத்துவம் பார்க்கத் தேவை இல்லை. நமக்கு நோய் குணமாகும் என்று விதி இருந்தால் மருத்துவம் செய்யாமல் தானாகாவே குணமாகி விடும். குணமாகாது என்று விதியில் இருந்தால் எந்த மருத்துவம் செய்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை என்று மற்ற மதங்களில் சொல்லப்படுவது போல் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை.

மனிதனைச் சோம்பேறியாக்காத வகையிலும், மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்காத வகையிலும் விதியை நம்ப வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு.

எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயத்தில் தான் விதியை எண்ணி ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டும். நடக்க இருக்கும் விஷயங்களில் விதி இல்லை என்பது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடாகும். இவ்வாறு விதியை நம்புவது மனிதனைச் சோம்பேறியாக்காது. மனிதனின் உழைப்புக்கும் முன்னேற்றத்துக்கும் இது குறுக்கே நிற்காது.

صحيح البخاري رقم فتح الباري (6/ 170)
4945 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَقِيعِ الغَرْقَدِ فِي جَنَازَةٍ، فَقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الجَنَّةِ، وَمَقْعَدُهُ مِنَ النَّارِ»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ؟ فَقَالَ: «اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ» ثُمَّ قَرَأَ: {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالحُسْنَى} [الليل: 6] إِلَى قَوْلِهِ {لِلْعُسْرَى}

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அவர்கள் “உங்களில் யாராக இருந்தாலும் நரகத்திலும் சொர்க்கத்திலும் அவரது இடம் முடிவு செய்யப்படாமல் இல்லை” என்று கூறினார்கள். நாங்கள் இதன் மீது நம்பிக்கை வைத்து ஏதும் செய்யாமல் இருக்கலாமா என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் செயல்படவேண்டும் எனக் கூறிவிட்டு யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம். (92:5) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

(புகாரி: 4945, 4946, 4947, 4984, 4949, 6217, 6605, 7552, 1362),

விதியை நம்ப வேண்டும் என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியின் மீது பழி போட்டு விட்டு செயல்படாமல் இருக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்துகிறார்கள்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதால் விதி இல்லாவிட்டால் எப்படி நாம் நடந்து கொள்வோமோ அப்படி நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு வினாடிக்கு முன்னாள் வரை நடந்த அனைத்திலும் விதி இதுதான் என்பது நமக்குத் தெரிந்து விட்டதால் நடந்துவிட்ட நல்ல காரியம் குறித்தும் கெட்ட காரியம் குறித்தும் விதியின் காரணமாகவே நடந்தது என்று கருதிக் கொள்ள வேண்டும்.

மற்ற மதங்களில் உள்ள விதியின் நம்பிக்கை குறித்து எழும் கேள்விகள் இஸ்லாத்தின் இந்த நம்பிக்கைக்கு எதிராக எழாது. விதியின் மீது பழியைப் போட்டு விட்டு உழைக்காமல் சோம்பி இருக்கும் நிலை ஏற்படாது.

விதியை நம்புவதால் என்ன நன்மை

விதியை மறுப்பது இஸ்லாத்துக்கும், அறிவியலுக்கும் எதிரானது என்பதைக் கண்டோம். அத்துடன் இஸ்லாம் கற்றுத்தருகின்ற வகையில் விதியை நம்புவதால் மனிதனுக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மனிதனின் முன்னேற்றத்தை எந்த வகையிலும் பாதிக்காது. மாறாக விதியை நம்புவதால் மனிதனுக்கு மிகப்பெரும் நன்மை ஏற்படுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது. விதியை மறுப்பவர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (அல்லாஹ் விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 57:23)

இந்த உலகில் இன்பங்களையும் துன்பங்களையும் மாறிமாறி அனுபவிக்கின்றோம். சிறிய அளவிலான இன்பங்களும் துன்பங்களும் நம்மைப் பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஆனால் பெரிய அளவிலான துன்பங்களும் இன்பங்களும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

நாம் இவ்வளவு கடுமையாக உழைத்தும் நட்டமாகி விட்டதே? இவ்வளவு செலவு செய்து மருத்துவம் பார்த்தும் நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லையே? என்று நினைக்கும் போது அதுவே நமது முழு உள்ளத்தையும் ஆக்ரமித்து வேறுபணிகள் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி விடும். ஒரு கட்டத்தில் மனநோயாளிகளாகவும் மாற்றிவிடும். அல்லது தற்கொலைக்குத் தூண்டிவிடும்.

நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத துன்பத்தை அடையும் போது விதியின் மீது பாரத்தைப் போட்டால் அது சுமைதாங்கியாக நின்று நம் கவலையை இருந்த இடம் தெரியாமல் மாற்றி மறையச் செய்து விடும்.

தாங்க முடியாத துன்பம் நம்மை அணுகும் போது நம் கையில் என்ன இருக்கிறது? அல்லாஹ்வின் நாட்டம் வேறு விதமாக இருந்தால் நாம் என்ன செய்ய முடியும் என்று ஒருவன் நினைத்தால் கவலை பஞ்சாகப் பறந்து விடும்.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் தற்கொலை செய்து மரணிப்போர் அதிகமாக உள்ளனர். இது குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.

தற்கொலை செய்தவர்களில் ஆண்களின் விழுக்காடு எவ்வளவு? பெண்களின் விழுக்காடு எவ்வளவு? திருமணமானவர்களில் எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர். திருமணம் ஆகாதவர்களில் எத்தனை பேர் தற்கொலை தற்கொலை செய்துள்ளனர் என்று பலவிதமாகப் பிரித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.

அதில் மதரீதியாகவும் தகவல் திரட்டப்பட்டன. அதாவது தற்கொலை செய்தவர்களில் முஸ்லிம்கள் எத்தனை விழுக்காடு? இந்துக்கள் எத்தனை விழுக்காடு? கிறித்தவர்கள் எத்தனை விழுக்காடு? மத நம்பிக்கை இல்லாதவர்களில் எத்தனை விழுக்காடு என்று ஆய்வு செய்யப்பட்ட போது முஸ்லிம்கள் மட்டும் மிகக் குறைந்த அளவில் தற்கொலை செய்திருப்பதும் மற்றவர்கள் தமது சதவிகிதத்துக்கும் அதிகமாக தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்த போது முஸ்லிம்களின் மத நம்பிக்கை தான் அவர்களைத் தற்கொலை செய்யாமல் தடுக்கின்றது. எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் எல்லாம் இறைவன் விட்ட விதி என்றும், அவனை நம்மால் எதிர்த்து நிற்க முடியாது என்றும், இறைவனின் தீர்ப்பில் குறைகாணக் கூடாது என்றும் கருதிக் கொள்கின்றனர். சிறு பிராயம் முதல் அவர்களுக்கு ஊட்டப்பட்ட இந்தப் போதனைதான் அவர்களை தற்கொலை செய்யாமல் தடுக்கின்றது என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

அது போல் ஒரு மனிதனுக்கு அவன் நினைத்துப் பார்க்காத அளவுக்கு செல்வம் வந்து குவிகிறது; அல்லது பெரும்பதவி அவனை வந்து அடைகின்றது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த மனிதனுக்கு அகந்தையும் கர்வமும் அதிகரிக்கும். இதற்கு முன் அவனிடம் காணப்பட்ட பல நற்குணங்கள் அவனிடமிருந்து காணாமல் போகும். இதனால் அவனுக்கும் கேடுகள் ஏற்படும். மற்றவர்களை அவன் துச்சமாகவும் இழிவாகவும் கருதுவதால் மற்றவர்களுக்கும் இதனால் கேடுகள் ஏற்படும்.

எனக்குக் கிடைத்த இந்தச் செல்வமும் பதவியும் எனது திறமையாலும் ஆற்றலாலும் எனக்குக் கிடைத்து விடவில்லை. இறைவன் எனக்காக விதித்திருந்த அடிப்படையில் தான் எனக்குக் கிடைத்தது என்று அவன் நம்பினால் இது அவனுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய நன்மையாக அமைந்து விடுகிறது.

விதியை நம்புவதால் இவ்விரண்டு நன்மைகளும் கிடைப்பதாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

விதியை நம்புவதால் கிடைக்கும் இந்த மாபெரும் இரண்டு நன்மைகளும் மற்றவர்களுக்குக் கிடைக்காமல் முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (8/ 227)
7692 – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ – وَاللَّفْظُ لِشَيْبَانَ – حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ ».

முஸ்லிமின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவனுக்கு எல்லாமே நன்மையில் முடிகின்றது. அவனுக்குத் துண்பம் நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்கிறான். எனவே அது அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. அவனுக்கு இன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. இந்த நிலை முஸ்லிமைத் தவிர யாருக்கும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

(முஸ்லிம்: 5726)

எனவே விதியை சரியான முறையில் நம்பி அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இவ்வுலகில் பெறக்கூடியவர்களாகவும், நம்ப வேண்டியவைகளை சரியான முறையில் நம்பி மறுமையில் வெற்றி பெறும் கூட்டத்தினராகவும் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக.