5) விதியை நம்பாமல் இறைவனை நம்ப முடியாது

நூல்கள்: விதி ஓர் விளக்கம்

விதியை நம்பாமல் இறைவனை நம்ப முடியாது.

எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது என்று நம்பாமல் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால் அந்த நம்பிக்கை உண்மையானதாக இருக்காது. இறைவனாக இருப்பதற்குத் தகுதியற்றவனை இறைவனாக கருதியதாகத் தான் அந்த நம்பிக்கை அமையும்.

ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின்படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை ஏற்படும்.

””நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்” என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.

நாளைய தினம் ஒருவர் சென்னை வரவிருக்கிறார். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை.

அந்த மனிதர் நாளை சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்று நாம் நம்பினால் அப்போது நாம் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்பதும் அதனுள் அடங்கியுள்ளது.

ஏனெனில் எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.

அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நாம் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.

அவனுக்குத் தெரியாது என்று நாம் நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.