7) வானவர்கள் மீது அவதூறு
வானவர்கள் மீது அவதூறு
இந்த மவ்லூதின் கடைசிப் பாடலாக ‘யாஸையதீ…’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலின் தலைப்பில் ‘இது ஜிப்ரீல் (அலை அவர்களால் பாடப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்க அறிவு சிறிதும் இல்லாதவர்களால் தான் மவ்லூது இயற்றப்பட்டது என்பதற்கு இந்தத் தலைப்பு ஒன்றே போதிய சான்றாக அமைந்திருக்கிறது. ஜிப்ரீல் (அலை பாடிய(? பாடலைக் கேளுங்கள்!
اِنِّيْ اِذَا مَسَّنِيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ
اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ
كُنْ لِيْ شَفِيْعًا اِلَى
الرَّحْمَانِ مِنْ زَلَلِيْ
وَامْنُنْ عَلَيَّ بِمَا
لاكَانَ فِيْ خَلَدِيْ
وَانْظُرْ بِعَيْنِ الرِّضَا
لِيْ دَائِمًا اَبَدًا
وَسْتُرْ بِطَوْلِكَ
تَقْصِيْرِيْ مَدَى الاَمَدِ
என்னை அச்சுறுத்தும் அளவு எனக்கு அநீதி இழைக்கப்பட்டால்
தலைவர்களுக்கெல்லாம் தலைவா! என் ஊன்றுகோலே! என்று உங்களை நான் அழைப்பேன்.
என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள்!
என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள்!
என்றென்றும் நிரந்தரமாக திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அருளால் எனது குறைகளைக் காலாகாலம் மறைத்து விடுங்கள்!
ஜிப்ரீல் (அலை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்து இவ்வாறு பிரார்த்தனை செய்தததாகக் கூறப்படுவது சரிதானா?
ஜிப்ரீல் (அலை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இவ்வாறு பாடியிருந்தால் இது திருக்குர்ஆனில் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டிலுமே இவ்வாறு கூறப்படவில்லை.
திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணப்படாத இந்த விபரத்தை இன்றைக்கு முன்நூறு ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடிந்தது? இந்தப் பாடல் வரிகளின் பொருளைக் கவனித்தால் கூட இது எவ்வளவு அபத்தம் என்பதை உணர முடியும்.
ஜிப்ரீல் (அலை அவர்களுக்கு அச்சுறுத்தும் அளவு அநீதி இழைக்கப்படும் என்றும் அவர்கள் தவறுகள் செய்ய முடியும் என்றும், அவர்களிடம் மறைக்கத் தக்க குறைபாடுகள் பல உள்ளன என்றும் இப்பாடல் வரிகள் கூறுகின்றன. ஆனால் மலக்குகளைப் பற்றி பொதுவாகவும் ஜிப்ரீல் (அலை அவர்களைப் பற்றிக் குறிப்பாகவும் அல்லாஹ் கூறுவது இந்தப் பாடல் வரிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.
(அல்குர்ஆன்: 66:6) ➚அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள் மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
(அல்குர்ஆன்: 21:27) ➚, 28 என்று மலக்குகளின் இயல்புகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய முடியாத இயல்பில் படைக்கப்பட்ட மலக்குகள், இந்தப் பாடலில் கூறப்படும் தவறுகளை எப்படிச் செய்திருக்க முடியும்?
பரிசுத்தமான உயிர் (அல்குர்ஆன்: 2:87, 2:253, 5:110, 16:102) ➚என்றும், நம்பிக்கைக்குரிய உயிர் (26:193 என்றும், வல்லமை மிக்கவர் (53:5 என்றும் ஜிப்ரீல் (அலை அவர்கள் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர்.
இத்தகைய சிறப்பு கொண்ட ஜிப்ரீல் (அலை அவர்கள் தவறு செய்வார்கள் என்றும், அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள் என்றும் கூறும் இந்த மவ்லூதுப் பாடலை எப்படி நம்ப முடியும்?
ஜிப்ரீல் (அலை அவர்கள் தவறு செய்வார்கள் என்று நம்பினால், அவர்கள் கொண்டு வந்த வஹியிலும் அவர்கள் தவறு செய்யக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? இது குர்ஆனிலும் சந்தேகத்தை ஏற்படுத்தாதா? ஜிப்ரீல் (அலை அவர்கள் இத்தகைய தவறுகளைச் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்கட்டும். அப்படியே இந்தத் தவறுகளைச் செய்தால் கூட அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏன் அவர்கள் உதவி தேட வேண்டும்? அல்லாஹ்வின் தூதருடைய கோரிக்கைகளைக் கூட அல்லாஹ்விடம் எடுத்துச் சொல்லக் கூடிய ஜிப்ரீல் (அலை அவர்கள் நேரடியாகவே அல்லாஹ்விடம் தமது கோரிக்கைகளை எடுத்து வைக்க முடியாதா? என்பதை மவ்லூது அபிமானிகள் சிந்தித்தால் மவ்லூதுகளை நியாயப்படுத்த மாட்டார்கள்.
ஏனெனில் துன்பம் ஏற்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேடுமாறு அல்லாஹ் நமக்குப் போதிக்கவில்லை. மாறாகத் தன்னிடம் உதவி தேடுமாறு தான் கட்டளையிடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறே நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர்.
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக!
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே! கூறு வீராக! நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ் விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன்: 72:20) ➚, 21, 22)
(முஹம்மதே! அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 46:9) ➚
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக! இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய் (என்றும் கூறுவீராக!)
என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கூறச் செய்து எல்லா அதிகாரமும் தனக்குரியதே எனத் திட்டவட்டமாக இறைவன் அறிவிக்கின்றான்.
இந்த அறிவிப்புக்கு முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் வகையில் இந்தக் கவிதை வரிகள் அமைந்துள்ளன.