வாடும் பெற்றோரும் வதைக்கும் பிள்ளைகளும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

முன்னுரை

நாகரீக உலகில் மனித சமூகத்தைப் பீடித்துள்ள மிகப்பெரும் சமூக வியாதிகளில் ஒன்று வயோதிகப் பெற்றொர்களை வதைப்பதாகும். காலூன்றி நடக்க முடியாத தள்ளாத வயதினிலே விழுதுகளாய் பெற்றோரைத் தாங்க வேண்டிய பிள்ளைகள், தங்கள் அன்னையர்களை அல்லல் படுவோராக அலைக்கழிப்பது வார்த்தைகளில் வடிக்க இயலாத மாபெரும் கொடுமையாகும்.

ஆம்! இன்றைக்குப் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மனித சமூகம் மிகப்பெரும் அலட்சியப் போக்கில் உள்ளது. அமுதூட்டி வளர்த்த பெற்றோரை அரவணைக்க வேண்டிய பிள்ளைகள், அவர்களின் மனவிருப்பங்கள் என்ன? அவர்களின் தேவைகள் என்ன? என எந்த ஒன்றையும் அறியாமல் அவர்களைத் தவிக்க விட்டுவிடுகின்றனர்.

இதற்கு இஸ்லாமிய சமுதாயமும் விதிவிலக்கல்ல. ‘பெற்றோர்களை வதைப்பது பெரும்பாவம்’ என்று எச்சரிக்கும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பலரும் பெற்றோர்களைப் பரிதவிக்க விடுகின்றனர். இதனால் வயோதிக காலத்திலே அரை ஜான் வயிற்றிற்காகக் கையேந்தும் நிலைக்கும் பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர்.

சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, கேன்சர், கண்பார்வைக் குறைபாடு, காது கேளாமை போன்ற கடும் வியாதிகளில் பாதிக்கப்பட்ட வயோதிகர்கள் தெருவோரங்களிலும், சாலையோரங்களிலும் சீரழிந்து கிடக்கின்றனர். நாளுக்கு நாள் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

சர்க்கரை வியாதியினால் ஒரு வயோதிகத் தாயின் கால்களில் ஏற்பட்ட காயத்தில் மலத்தில் மொய்க்கும் புழுக்களைப் போல் புழுக்கள் வடிந்தன. தாயைக் கவனிக்கும் மனமில்லா பிள்ளைகளைப் பார்க்கும் போது நமது உள்ளம் வெடித்துச் சிதறும் மனநிலைக்கே சென்றுவிட்டது. இந்தக் காட்சி நம்முடைய தமிழகத்தில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் கண்ட காட்சிகள். இது போன்ற அவலக் காட்சிகள் நம் கண்களைக் குளமாக்குகின்றது.

இந்தப் பிள்ளைகளுக்கு உள்ளம் என்பதே கிடையாதா? இவர்கள் மனிதர்களா? விலங்குகளா? நாளை இதே நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டால் இவர்களின் நிலை என்ன? படைத்த இறைவன் மறுமையில் விசாரிப்பானே என்கின்ற பயம் கிடையாதா? என்ற பல கேள்விகள் உள்ளத்தில் எழுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பெற்றெடுத்த பெற்றோருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும் என்றும் உபகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

உடல் உழைப்பினாலும், செல்வத்தினாலும் எப்படியெல்லாம் பெற்றோருக்குப் பாடுபடுவது சாத்தியமோ அத்தகைய அனைத்து வழிகளிலும் பெற்றோருக்காக உழைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. ஒழுக்க மாண்புகளுடன் பெற்றெடுத்த தாய் தந்தையர்களுடன் உரையாட வேண்டும் என மார்க்கம் வழிகாட்டுகின்றது.

எந்நிலையிலும் பெற்றோர்களை நோவினைப் படுத்துவதையும் அவர்களை உடலாலும், உள்ளத்தாலும் துன்புறுத்துவதையும் மிகப் பெரும் பாவமாக இஸ்லாம் எச்சரிக்கை செய்கின்றது. வயோதிகப் பருவத்தில் அவர்களுக்குப் பணிவிடை செய்வதை கட்டாயக் கடமையாக இஸ்லாம் வகுத்துள்ளது. இவ்வாறு இஸ்லாம் பெற்றோர்களை அரவணைக்கவும் பேணவும் ஏராளமான உபதேசங்கள் கூறுகிறது. அவற்றில் சில உபதேசங்களை இந்த உரையில் நாம் காண்போம்.  

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏

“என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!

 وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ‘‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 17:23,24)

 وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ‏

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

(அல்குர்ஆன்: 31:14)

 

 وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا‌ ؕ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا‌ ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا‌ ؕ حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً  ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது “என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்’’ என்று கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 46:15)

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ
قُلْتُ: يَا نَبِيَّ اللهِ، أَيُّ الْأَعْمَالِ أَقْرَبُ إِلَى الْجَنَّةِ؟ قَالَ: «الصَّلَاةُ عَلَى مَوَاقِيتِهَا» قُلْتُ: وَمَاذَا يَا نَبِيَّ اللهِ؟ قَالَ: «بِرُّ الْوَالِدَيْنِ» قُلْتُ: وَمَاذَا يَا نَبِيَّ اللهِ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ»

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் நபியே! நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?’’ என்று கூறினார்கள். “அடுத்து எது? அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டேன். அதற்கு “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். “அடுத்தது எது? அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டபோது, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்றார்கள்.

நூல்: (முஸ்லிம்: 138) 

பெற்றோருக்குப் பணிவிடை செய்வது எவ்வளவு அவசியம் என்பதை மேற்கண்ட வசனங்கள், ஹதீஸ் மனித சமூகத்திற்கு எடுத்துரைக்கின்றது.

பெற்றோர்கள் இணை வைக்குமாறு ஏவினால், அல்லது பாவமான காரியங்களைச் செய்யுமாறு நிர்ப்பந்தித்தால் அதில் அவர்களுக்குக் கட்டுப்படுவது கூடாது என்றாலும் அவர்கள் இணை வைப்பாளர்களாக இருந்தாலும் அவர்களுடன் அழகிய முறையில் உறவாட வேண்டும் என்றும் அவர்களுக்குரிய கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் திருக்குர்ஆன் பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிறது.

 وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا‌ ؕ وَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِىْ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

(அல்குர்ஆன்: 29:8)

 وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِىْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۙ فَلَا تُطِعْهُمَا‌ وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا‌ وَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ ‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

 

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

(அல்குர்ஆன்: 31:15)

عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ
قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: وَهِيَ رَاغِبَةٌ، أَفَأَصِلُ أُمِّي؟ قَالَ: «نَعَمْ صِلِي أُمَّكِ»

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என்னிடம் என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்போராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?’’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் “ஆம், நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்’’ என்று கூறினார்கள். 

நூல்: (புகாரி: 2620) 

பெற்றோர் இணை வைத்தாலும் அவர்களுடன் உறவைப் பேணி வாழ வேண்டும் என்பதே மார்க்கத்தின் வழிகாட்டுதல் என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

ஸஃது (ரலி) அவர்களுடைய தாயார், ‘அவர்  (ஸஃது) தன்னுடைய மார்க்கத்தை (இஸ்லாத்தை) மறுக்கின்ற வரை அவரிடம் நான் ஒருபோதும் பேச மாட்டேன், சாப்பிடமாட்டேன், எதையும் அருந்த மாட்டேன்’ என்று சத்தியம் செய்தார்கள். மேலும் “அல்லாஹ் பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதாக நீ கூறினாய். நான் உன்னுடைய தாய்! நான் நீ இவ்வாறு (இஸ்லாத்தை விட்டும் வெளியேற வேண்டும்) என்று கட்டளையிடுகிறேன்’’ என்றும் கூறினாள்.

இவ்வாறு அவள் மூன்று நாட்கள் (பேசாமல், சாப்பிடாமல், பருகாமல்) இருந்தாள். அவளுக்குக் கடுமையான பலவீனம் ஏற்பட்டது. அவருடைய (மற்றொரு மகனாகிய) உமாரா என்பவர் அவருக்கு நீர் புகட்டினார். அவள் ஸஃது (ரலி) அவர்களை சபிப்பவளாக ஆகிவிட்டாள்.

அப்போதுதான் அல்லாஹ் “தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.’’ (அல்குர்ஆன்: 29:8) என்ற வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: முஸ்அப் பின் ஸஃது (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4789) (4432)

பெற்றோரும் அழகிய நட்பும்
 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: «أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أَبُوكَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “உன் தாய்’’ என்றார்கள். அவர் “பிறகு யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “உன் தாய்’’ என்றார்கள். அவர், “பிறகு யார்?’’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “பிறகு, உன் தந்தை’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 5971) 

பெற்றோருக்காகச் செலவிடுதல்
يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்’’ எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 2:215)

عَنْ طَارِقٍ الْمُحَارِبِيِّ، قَالَ:
قَدِمْنَا الْمَدِينَةَ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ النَّاسَ وَهُوَ يَقُولُ: ” يَدُ الْمُعْطِي الْعُلْيَا، وَابْدَأْ بِمَنْ تَعُولُ: أُمَّكَ، وَأَبَاكَ، وَأُخْتَكَ، وَأَخَاكَ، ثُمَّ أَدْنَاكَ، أَدْنَاكَ

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது “கொடுப்பவரின் கரம் தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்’’ என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: தாரிக் (ரலி)
நூல்: (நஸாயீ: 2532) (2485)

பெற்றோர் பணிவிடையே மாபெரும் தியாகம்
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَأْذَنَهُ فِي الجِهَادِ، فَقَالَ: «أَحَيٌّ وَالِدَاكَ؟»، قَالَ: نَعَمْ، قَالَ: «فَفِيهِمَا فَجَاهِدْ»

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “ஆம் (உயிருடனிருக்கின்றனர்)’’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் “அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: (புகாரி: 3004) 

பெற்றோருக்குச் செய்யும் பணிவிடைகள் இறையுதவியைப் பெற்றுத் தரும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது, அவர்கள் மலையில் உள்ள  குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், “நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’’ என்றனர்.

 فَقَالَ أَحَدُهُمْ: اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى، ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ فَأَجِيءُ بِالحِلاَبِ، فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ، ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي، فَاحْتَبَسْتُ لَيْلَةً، فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ، قَالَ: فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا، حَتَّى طَلَعَ الفَجْرُ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ، قَالَ: فَفُرِجَ عَنْهُمْ

அவர்களில் ஒருவர், “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.  ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர்.

அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என்காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: (புகாரி: 2215)  

பணிவிடை செய்யாதவன் செல்லுமிடம் நரகம்தான்
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ»، قِيلَ: مَنْ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: «مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ»

“அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், (இழிவடையட்டும்!)  அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், அவனுடைய மூக்கு மண்ணாகட்டும்‘’ என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே அவன் யார்?’’ என்று கேட்கப்பட்டது. “யார் வயதான தாய் தந்தையர்களில் இருவரையுமோ, அல்லது இருவரில் ஒருவரையோ (உயிருடன்) பெற்று அவர்களுக்கு (பணிவிடை செய்வதின் மூலம்) சுவனம் புகவில்லையோ அவன்தான்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4987) (4627)

நோவினை செய்வது பெரும்பாவமாகும்
عَنِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ: عُقُوقَ الأُمَّهَاتِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பெற்றெடுத்த தாய்மார்களுக்குத் துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்’’

அறிவிப்பவர்: முகீரா பின் ஸுஃபா (ரலி)
நூல்: (புகாரி: 2408) 

سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الكَبَائِرِ، قَالَ: «الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَشَهَادَةُ الزُّورِ»

நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 2653) 

பெற்றோரைச் சபிப்பது பெரும்பாவமாகும்
لَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ، وَلَعَنَ اللهُ مَنْ سَرَقَ مَنَارَ الْأَرْضِ، وَلَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَهُ، وَلَعَنَ اللهُ مَنْ آوَى مُحْدِثًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தன் பெற்றோரைச் சபிப்பவனை அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபித்து விட்டான். பித்அத் செய்பவனுக்கு அடைக்கலம் தருபவனை அல்லாஹ் சபித்து விட்டான். நிலத்தின் எல்லைக்காக (வைக்கப்பட்ட) அடையாளக் கல்லை மாற்றியவனை அல்லாஹ் சபித்து விட்டான்’’.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4003) 

 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِنَّ مِنْ أَكْبَرِ الكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: «يَسُبُّ الرَّجُلُ أَبَا الرَّجُلِ، فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ»

“ஒரு மனிதர் தன் தாய் தந்தையர்களைச் சபிப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தன் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’’ என்று கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்.)’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: (புகாரி: 5973) 

பெற்றோர்களுக்கு விடுபட்ட நோன்புகளை நிறைவேற்றுதல்
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: ” نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பாக நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம் அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 1953) 

மரணித்து விட்ட பெற்றோருக்காக தர்மம் செய்தல்
أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَخَا بَنِي سَاعِدَةَ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، فَهَلْ يَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا

பனூ சாயிதா குலத்தைச் சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவர்களது தாயார் இறந்து விட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்து விட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம் (பலனளிக்கும்)’’ என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 2762) 

பெற்றோர்களின் மூலம் ஏற்பட்ட உறவை அவர்களுக்குப் பிறகும் இணைத்து வாழுதல்

மக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராமவாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரைத் தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள். தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக் கண்ட நாங்கள்) ‘‘அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக் கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ள வேண்டும்)’’ என்று கேட்டோம்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார். ‘(தந்தைக்குச் செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான்’ என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு தீனார்
நூல்: (முஸ்லிம்: 4991) (4629)

பெற்றோர்களுக்காகச் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏

“சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’’

(அல்குர்ஆன்: 17:24)

رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!

(அல்குர்ஆன்: 14:41)

 

 رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ 

 

“என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக’’

(அல்குர்ஆன்: 71:28)

 رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏

“என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்’’

(அல்குர்ஆன்: 46:15)

ஆகவே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய அடிப்படையில்  பெற்றோர்களை பேணி அரவணைத்து அதன் மூலம் மறுமையில் நன்மைகளைப் பெற்று சுவனத்தை அடையும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.