04) வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது

நூல்கள்: நபித் தோழர்களும் நமது நிலையும்

வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது

நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகுமா என்பதை அறிவதற்கு முன் சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் கோடிக்கணக்கான படைப்புகளில் மனிதன் சிறந்த படைப்பாகத் திகழ்கிறான்.

சிந்தித்து உணரும் ஆற்றலையும், தான் உணர்ந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றலையும் மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள அறிவைக் கொண்டு மனிதன் படைத்த சாதனைகள் மகத்தானவை. தனது கண்டுபிடிப்புகளைப் பார்த்து தானே பிரமிக்கும் அளவுக்கு மனிதனின் அறிவாற்றல் சிறந்து விளங்குகிறது.

இது மனிதனின் ஒரு பக்கமாக இருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் மனிதனின் அறிவு மிகவும் பலவீனமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

தனக்குப் பயன்படும் பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும், இவ்வுலகில் சொகுசாக வாழ்வதற்கான சாதனங்களைக் கண்டுபிடிப்பதிலும் மனிதனின் அறிவு மகத்தானதாக இருந்தாலும் சரியான கொள்கை, கோட்பாட்டைக் கண்டறிவதில் பெரும்பாலும் மனிதன் தவறாக முடிவு செய்பவனாகவே இருக்கிறான். இதைப் பல்வேறு சோதனைகள் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

மாமேதைகள், பண்டிதர்கள் என்று வரலாற்றில் போற்றப்படுபவர்களும் நம் கண் முன்னே வாழ்ந்து வருபவர்களும் தாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு கல்லுக்கு முன்னால் கூனி, குறுகி நின்று வழிபாடு நடத்துகின்றனர். இது நாம் செதுக்கிய கல் தானே! இதற்கு எந்த சக்தியும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லையே என்று இவர்களின் அறிவு இவர்களுக்கு வழிகாட்டவில்லை.

பெரிய பெரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கிய பலர் கடவுளுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் பிறவிப் பாவத்தை அந்த மகன் சுமந்து கொண்டார் என்றும் நம்பி அவரை வழிபடுவோராக இருந்தனர் என்பது வரலாறு.

ஒருவரது பாவத்தை இன்னொருவர் சுமக்க முடியாது என்ற சாதாரண உண்மையைக் கூட இவர்களின் சக்தி வாய்ந்த மூளையால் கண்டறிய முடியவில்லை.

மற்ற மனிதர்களை ஏமாற்றக் கூடாது; சுரண்டக் கூடாது என்ற சாதாரண உண்மையை படிக்காதவர்கள் அறிந்து கொண்ட அளவுக்கு படித்தவர்கள் அறியவில்லை.

வரதட்சணை வாங்குவது, கலப்படம் செய்வது, மக்களைச் சீரழிக்கும் சினிமாக்களைத் தயாரிப்பது, பெற்றோரைக் கவனிக்காமல் விரட்டியடிப்பது உள்ளிட்ட கொடுஞ்செயல்களை அதிக அறிவு உள்ளவர்கள் தான் அதிக அளவு செய்து வருவதைக் காண்கிறோம்.

மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு சரியான நேர்வழியைக் கண்டறிய முடியாது என்பதற்கு இதை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம்.

கம்யூனிஸம், சோஷலிஷம், கேப்பிட்டலிசம், புதிய கேப்பிட்டலிசம் என்று பல்வேறு பொருளாதாரக் கொள்கைகள் உலகில் உள்ளன. ஒவ்வொரு கொள்கையையும் உலகிற்குத் தந்தவர்களும், அவற்றை இன்றளவும் தூக்கிப் பிடிப்பவர்களும் யார்? நல்ல அறிவாளிகள் தான்.

மேற்கண்ட கொள்கைகளில் ஏதோ ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும். ஆனாலும் அனைத்து அறிவாளிகளும் ஒன்று கூடி அந்த ஒரு கொள்கை எது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படி ஆயிரமாயிரம் விஷயங்களில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. ஒவ்வொருவரும் தத்தமது நிலை தான் சரியானது என்று சாதிக்கின்றனர். முரண்பட்ட இரண்டு விஷயங்களில் ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும் என்பது தான் அறிவுப்பூர்வமான முடிவாகும்.

அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள விஷயங்களில் ஏதோ ஒன்று தான் சரியானது; மற்றவை தவறானவை என்றால், அறிவுடையவர்கள் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பது பொய் என இதிலிருந்து தெரிகிறது.

சரியான முடிவைக் கண்டறிய முடியாமல் மனிதன் தடுமாறும் தன்மையுள்ளவனாக இருப்பதால் நேர்வழியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை மனிதன் கையில் ஒப்படைக்க முடியாது.

மனிதனைப் படைத்த ஏக இறைவன் தான் அனைத்திலும் சரியான முடிவை அறிபவனாக இருக்கிறான். மனிதனுக்கு நேர்வழி காட்டும் பொறுப்பு அவனிடம் இருப்பது தான் மனிதனுக்குப் பாதுகாப்பானது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

சில விஷயங்களில் மனிதன் சரியான முடிவைக் கண்டறிந்து விட்டாலும் தனது சுயநலம் காரணமாக அந்த வழியை மறைப்பவனாகவும் மனிதன் இருக்கிறான்.

ஆட்சியாளர்களால் தனக்கு ஆபத்து ஏற்படுமோ, தீய செயலைத் தீமையென்று தெளிவுபடுத்தினால் அத்தீமையைச் செய்பவர்களால் தனக்கு எதிர்ப்பு வருமோ என்று அஞ்சி, தான் கண்டறிந்த சரியான பாதையை மற்றவர்களுக்குச் சொல்லாமல் மனிதன் மறைத்து விடுகிறான்.

தனக்குக் கிடைக்கும் ஆதாயத்துக்காக தீமை தான் என்று திட்டவட்டமாகத் தெரியும் ஒன்றை நன்மை தான் என்று பிரச்சாரம் செய்பவனாகவும் மனிதன் இருக்கிறான்.

இத்தகைய பலவீனம் கொண்டவனிடம் நேர்வழி காட்டும் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.

எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாகிய இறைவன் மட்டும் தான் மனிதனுக்குச் சரியான வழியைக் காட்ட முடியும் என்ற கொள்கையை இஸ்லாம் உலகுக்குச் சொல்கிறது.

எனவே இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற இயலாத எந்த அறிஞரையோ, எந்த நபித்தோழரையோ பின்பற்றக் கூடாது என்பதை இந்த அடிப்படைத் தத்துவத்தில் இருந்து அறியலாம்.