09) வஹீக்கு முரணாக சஹாபாக்கள் 1

நூல்கள்: நபித் தோழர்களும் நமது நிலையும்

வஹீக்கு முரணான நபித் தோழர்களின் நடவடிக்கைகள்

நபித்தோழர்களின் நடவடிக்கைகளை நாம் ஆய்வு செய்தால் அவர்களின் பல நடவடிக்கைகள் குர்ஆனுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் முரணாக அமைந்திருப்பதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தவைகளும், தடுத்தவைகளும் நபித் தோழர்களுக்குத் தெரியாத காரணத்தால் அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதையும் நாம் காண முடிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகவும் அவர்கள் தவறான முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதற்கும் ஏராளமான ஆதாரங்களைக் காண முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டாத பல விஷயங்களைச் சுயமாகவும் அவர்கள் செய்துள்ளனர் என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன.

இவற்றிலிருந்து சிலவற்றை நாம் பட்டியலிடுவது நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. அவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாக முடியாது என்பதை இன்னும் தெளிவாக விளக்குவதற்காகவே.

ருகூவின் போது தொடைகளுக்கிடையே இரு கைகளை வைத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் ருகூவு செய்யும் போது இரு கைகளாலும் முட்டுக் கால்களைப் பிடிப்பதற்குப் பதிலாக இரு கைகளையும் இணைத்து தொடைகளுக்கு மத்தியில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. பின்னர் இது மாற்றப்பட்டு இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

ஆனால் ஆரம்ப கால நபித் தோழரும் மிகச் சிறந்த தோழர்களில் ஒருவருமான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பும் மாற்றப்பட்ட இந்த முறையிலேயே தொழுது வந்தார்கள் என்பதை நாம் காண்கிறோம்.

என் தந்தையின் அருகில் நான் தொழுதேன். அப்போது என் இரு கைகளையும் சேர்த்து அதை என் தொடைகளுக்கிடையே வைத்தேன். என் தந்தை அதைத் தடுத்தார். “நாங்கள் இப்படிச் செய்து வந்தோம். பின்னர் தடுக்கப்பட்டோம். எங்கள் கைகளை முட்டுக்கால் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டோம் என்றும் என் தந்தை கூறினார்.

அறிவிப்பவர் : முஅப் பின் ஸஅத்,

(புகாரி: 790)

அல்கமா, அல்அஸ்வத் ஆகிய நாங்கள் இருவரும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். ருகூவு செய்யும் போது எங்கள் இரு கைகளை முட்டுக் கால்கள் மீது வைத்தோம். அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் எங்கள் கைகளைத் தட்டி விட்டார்கள். பின்னர் தமது கைகளைச் சேர்த்து அதைத் தொடைகளுக்கிடையே வைத்தார்கள். தொழுது முடிந்ததும், “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தனர் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்போர் : அல்கமா, அல்அவத்

(முஸ்லிம்: 831)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இதை அனுமதித்து பின்னர் தடுத்து விட்டார்கள் என்பதை முதல் ஹதீஸ் கூறுகிறது. அந்தத் தடை இப்னு மஸ்வூத் என்ற மிகப் பெரிய நபித்தோழருக்குத் தெரியாமலே இருந்துள்ளது என்பதை இரண்டாவது ஹதீஸ் கூறுகிறது.

மற்ற சட்டங்களை விட தொழுகை தொடர்பான சட்டங்களை அனைத்து நபித்தோழர்களும் அறிந்திருக்க முடியும். ஏனெனில் தினமும் ஐந்து நேரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டியதால் ஏதோ ஒரு தொழுகையில் கலந்து கொண்டவர் கூட இந்தச் சட்டத்தை அறிந்திட இயலும். ஆனால் அனைவரும் எதை அறிந்திருக்க முடியுமோ அந்த முக்கியமான ஒரு சட்டம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை.

மாற்றப்பட்ட விஷயம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியாததால் அவரது தொழுகைக்குப் பங்கம் ஏற்படாமல் போகலாம். அவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று சொல்வது சரி தானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வாடகைத் திருமணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத்தில் வெளியூர்களுக்குச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களைக் குறிப்பிட்ட காலம் வரை வாடகை பேசி திருமணம் செய்து வந்தனர். அதாவது ஒரு மாதம் வரை உன்னை மனைவியாக வைத்துக் கொள்கிறேன் என்பது போல் காலக்கெடு நிர்ணயித்து திருமணம் செய்வார்கள். காலக்கொடு முடிந்ததும் அப்பெண்ணை விட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுவார்கள். அரபுகளிடம் காணப்பட்ட இந்த வழக்கத்தை ஆரம்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். அதனால் நபித் தோழர்களில் சிலர் இந்த வழக்தத்தைக் கடைப்பிடித்தனர்.

கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய அறிவுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்தார்களோ (புகாரி: 75, 3756, 7270) அந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு வாடகைத் திருமணம் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மார்க்கத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.

வாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அலி (ரலி),

(புகாரி: 4216, 5115, 5523, 6691)

வாடகைத் திருமணம் பற்றி இப்னு அப்பா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். யுத்த காலத்திலும், பெண்கள் பற்றாக் குறையின் போதும் தான் இந்த அனுமதியா? என்று அவரது ஊழியர் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஜம்ரா,

(புகாரி: 5116)

முத்ஆ எனப்படும் வாடகைத் திருமணம் தடுக்கப்பட்டதை முதல் ஹதீஸ் கூறுகிறது. இந்த சமுதாயத்தின் மாமேதையான இப்னு அப்பாஸ் (ரலி) அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்ததை இரண்டாவது ஹதீஸ் கூறுகிறது.

இந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகுமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமத்துவு ஹஜ் பற்றி அறியாமை

உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை முடித்து விட்டு இஹ்ராம் இல்லாத நிலையில் மக்காவில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் மற்றொரு இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தமத்துவு ஹஜ் எனப்படுகிறது. இவ்வாறு ஹஜ் செய்வதை திருக்குர்ஆன் (2:196) அனுமதிக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதித்துள்ளார்கள்.

ஆனால் இந்தச் சட்டம் மிகப் பெரும் தோழர்களான உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருக்குத் தெரியாமல் இருந்துள்ளது. அல்லது தவறாக விளங்கிக் கொண்டு இதை எதிர்த்துள்ளார்கள்.

தமத்துவு ஹஜ் பற்றிய வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமத்துவு முறையில் ஹஜ் செய்தோம். இதை ஹராமாக்கி அல்லது தடை செய்து எந்த வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்படவில்லை. மனிதர்கள் தம் விருப்பம் போல் எதையோ (இதற்கு மாற்றமாக) கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : புகாரி, 1572, 4518

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். “எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம்,

நூல் : புகாரி, 1563

மற்றொரு அறிவிப்பில்,

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததைத் தடுப்பது தவிர உமது நோக்கம் வேறு இல்லை என்று உஸ்மான் (ரலி)யிடம் நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு இரண்டையும் சேர்த்துச் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பார்க்க(புகாரி: 1569)

தமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் “அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ்,

நூல் : திர்மிதி 753

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தது பரவலாகத் தெரிந்த நிலையில் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. அது சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள்.

அனைவருக்கும் தெரிந்த நபிவழியை மிகச் சிறந்த நபித்தோழர்கள் தடை செய்திருப்பதைக் கண்ட பின்பும் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படிச் சரியான கருத்தாக இருக்க முடியும்?

கடமையான குளிப்பு

தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, ஆணுக்கு விந்து வெளிப்பட்டால் குளிப்பது கடமை. விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பது கடமையில்லை என்று ஆரம்பத்தில் சட்டம் இருந்தது. பின்னர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்று மாற்றப்பட்டது.

ஆனால் மிகச் சிறந்த பல நபித்தோழர்கள் ‘விந்து வெளிப்படாத வகையில் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையில்லை’ என்று தீர்ப்பளித்துள்ளனர்.

ஒருவர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விந்து வெளிப்படாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “மர்மஸ்தானத்தைக் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளுச் செய்ய வேண்டும் என்று விடையளித்தார்கள். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன் எனவும் உஸ்மான் (ரலி) கூறினார்கள். இது பற்றி அலி (ரலி), ஸுபைர் (ரலி), தல்ஹா (ரலி), உபை பின் கஅபு (ரலி) ஆகியோரிடமும் நான் கேட்டேன். அவர்களும் அவ்வாறே கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் (ரலி)

(புகாரி: 179, 292)

இன்றைக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அறிந்து வைத்திருக்கின்ற சட்டம் மிகச் சிறந்த நபித்தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இப்படியெல்லாம் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

இஹ்ராம் நிலையில் திருமணம் செய்தல்

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)

(முஸ்லிம்: 2522, 2524, 2525, 2526)

இந்தத் தடையை இப்னு அப்பாஸ் (ரலி) அறியாமல் இருந்ததுடன் தமது சின்னம்மா மைமூனா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் திருமணம் செய்தார்கள் எனவும் கூறி வந்தார்கள்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 1837, 4259, 5114)

ஆனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டாத நிலையில் தான் என்னைத் திருமணம் செய்தார்கள்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி)

(முஸ்லிம்: 2529)

ஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்டவரின் கூற்றும் சம்பந்தப்படாதவரின் கூற்றும் முரண்பட்டால் சம்பந்தப்பட்டவரின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரமும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தனது சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.

தவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா?

குளிப்பு கடைமையான நிலையில் நோன்பைத் துவக்குவது

ஒருவருக்கு குளிப்பு கடைமையாகி விட்டால் அந்த நிலையிலேயே சஹர் செய்து நோன்பு நோற்கலாம்.சுபுஹ் நேரம் வந்ததும் தொழுகைக்காகக் குளித்துக் கொள்ள லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.

ஆனால் அதிகமான ஹதீஸ்களை அறிந்திருந்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்து பின்னர் திருத்திக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் பஜ்ரு நேரத்தை அடைவார்கள். பின்னர் குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள் என்று ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் தன்னிடம் கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் மதீனாவின் ஆளுநரான மர்வானிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட மர்வான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக இதைப் பற்றி அபூ ஹுரைராவிடம் நீ கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும் எனக் கூறினார். ஆனால் அப்துர் ரஹ்மான் அபூ ஹுரைராவிடம் இது பற்றி பேச விரும்பவில்லை. பின்னர் துல்ஹுலைபா எனும் இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அங்கே அபூ ஹுரைராவுக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. அப்போது அப்துர் ரஹ்மான் “நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவுள்ளேன். மர்வான் உம்மிடம் கூறுமாறு சத்தியம் செய்திராவிட்டால் அதை உம்மிடம் நான் கூற மாட்டேன் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறினார். பின்னர் ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைராவிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் “எனக்கு பழ்ல் பின் அப்பாஸ் தான் இதைக் கூறினார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரே இது பற்றி நன்கறிந்தவர்கள் என்று விடையளித்தார்கள்.

(புகாரி: 1926)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை மகனான பழ்ல் பின் அப்பாஸ் அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை தெரியாமல் இருந்துள்ளது. அவர்கள் கூறியதை அபூ ஹுரைரா (ரலி) நம்பியும் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் நபித்தோழர்கள் சிலரிடம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

லுஹாத் தொழுகை

முற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கும் ஆர்வமூட்டியதற்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் சில நபித்தோழர்களுக்கு இதைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

எனது தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை வலியுறுத்திக் கூறினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விட மாட்டேன். அவைகளாவன : ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது; லுஹா தொழுவது; வித்ரு தொழுத பின்னர் உறங்குவது என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 1178, 1981)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் எனது வீட்டுக்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுதனர். அந்த நேரம் லுஹா நேரமாக இருந்தது என்று அபூ தாலிபின் மகள் உம்மு ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 357, 3171, 6158)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் தொழுது மற்றவருக்கும் வலியுறுத்திய ஒரு தொழுகையை சில நபித் தோழர்கள் அடியோடு மறுத்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

(புகாரி: 1128, 1177)

நீங்கள் லுஹா தொழுவதுண்டா? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றனர். உமர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் தொழுததாக நான் நினைக்கவில்லை என்றார்கள். இதை முவர்ரிக் என்பார் அறிவிக்கிறார்.

(புகாரி: 1175)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்கம் தொடர்பான செய்தி அவர்களின் மனைவிக்கும் தெரியாமல் இருந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுவதில் தனித்து விளங்கிய இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

நபித்தோழர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியாமல் இருந்துள்ளதால் நபித்தோழர்கள் எந்த நடவடிக்கைக்கு நபிவழியை ஆதாரமாகக் காட்டுகிறார்களோ அதை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவற்றையோ, சொன்னவற்றையோ பின்பற்றும் அவசியம் நமக்கு இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

பிறரது இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டல்

அபூ மூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் “அபூ மூஸாவின் குரல் கேட்டதே! அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் “இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது எனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.

வயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்டார்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே எனக் கூறினார்கள்.

(புகாரி: 2062, 6245, 7353)

உமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர் என்றாலும் அவர்களால் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை. வியாபாரம் தொடர்பான பணிகளில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர் என்பதற்கு அவர்களே வாக்குமூலம் தந்து விட்டனர்.

இந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் நபிவழியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று வாதிடுவது சரியாகுமா?

தயம்முமை மறுத்த உமர் (ரலி)

மிகச் சிறந்த நபித்தோழரான உமர் (ரலி) அவர்கள் குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் இருந்துள்ளார்கள்.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்தார். “எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அவர் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “(தண்ணீர் கிடைக்காவிட்டால்) நீ தொழக் கூடாது என்று விடையளித்தார்கள். அப்போது அம்மார் (ரலி) அவர்கள் “முஃமின்களின் தலைவரே! நானும், நீங்களும் ஒரு சிறு படையில் சென்றோம். நம் இருவருக்கும் குளிப்பு கடமையானது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது நீங்கள் தொழவில்லை. நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது, “உமது இரு கைகளால் தரையில் அடித்து வாயால் ஊதிவிட்டு கைகளால் முகத்திலும் முன் கைகளிலும் தடவிக் கொள்வது உமக்குப் போதுமே! என்று கூறினார்கள். இது உங்களுக்கு நினைவில்லையா? என்று உமர் (ரலி) அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். அப்போது உமர் ரலி) அவர்கள் “அம்மாரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று கூறினார்கள். “உங்களுக்கு விருப்பமில்லா விட்டால் இது பற்றி நான் அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 553)

கடமையான குளிப்புக்காகவும் தயம்மும் செய்யலாம் என்று திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அந்தச் சட்டம் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. அம்மார் அவர்கள் சுட்டிக் காட்டியதையும் உமர் (ரலி) அவர்கள் நம்பவில்லை என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து தெரிகிறது.

மிகச் சிறந்த நபித்தோழருக்கே இது பற்றிய சட்டம் தெரியவில்லை எனும் போது நபித்தோழரின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும்?

தயம்மும் சலுகையை மறுத்த இப்னு மஸ்வூத்

நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் “ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார் கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன? என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் “அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர்? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் “நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.

(புகாரி: 346, 347)

உளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மவூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

தக்க ஆதாரங்கள் கிடைக்காத நேரத்தில் தவறான தீர்ப்பு அளிப்பது மனிதர்களின் பலவீனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய தவறுகள் நிகழாத மனிதர்களை நாம் காண முடியாது.

ஆனால் மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் தக்க ஆதாரங்களை அபூ மூஸா (ரலி) எடுத்துக் காட்டிய பிறகு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தமது கருத்தை உடனே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தமது கருத்துக்கு ஆதரவான ஆதாரத்தை எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.

சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித் தோழரிடம் காணப்பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? நபித்தோழர்களின் நடவடிக்கைகளும் மார்க்க ஆதாரங்கள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையதாகும்?

பிளேக் ஏற்பட்ட ஊருக்குள் நுழைவது

உமர் ரலி) அவர்கள் சிரியாவை நோக்கிப் பயணமானார் கள். சரக் என்ற இடத்தை அடைந்த போது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் ஏற்பட்டதாகக் கூறினார்கள். இதற்கு என்ன செய்வது? என்று முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிடம் உமர் (ரலி) ஆலோசனை கேட்ட போது யாருக்கும் இது பற்றிய விளக்கம் தெரியவில்லை. எனவே சிரியாவுக்குச் செல்ல உமர் (ரலி) ஆயத்தமானார்கள். வெளியூர் சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தார்கள். உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிய நபிமொழி தமக்குத் தெரியும் என்றார்கள். ஒரு ஊரில் பிளேக் நோய் வந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் ஊரில் பிளேக் ஏற்பட்டால் ஊரை விட்டு வெளி யேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு திரும்பி விட்டார்கள்.

(புகாரி: 5729)

சில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் இந்த நபி மொழியை எடுக்காட்டியிருக்கா விட்டால் உமர் (ரலி) உட்பட நபித்தோழர்கள் சிரியாவுக்குச் சென்றிருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுதல்

ஹஜ், உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம். இஹ்ராம் அணிவதற்கு முன்னர் நறுமணம் பூசி, அந்த நறுமணம் நீங்குவதற்கு முன் இஹ்ராம் அணியலாமா?

இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள். இவ்வாறு முடிவு செய்வதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இஹ்ராம் அணிந்த பின்னர் நறுமணம் பூசக் கூடாது என்பதால் முன்னர் பூசிய நறுமணமும் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் கருதியதே இதற்குக் காரணம்.

இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது “இப்னு உமருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசி விடுவேன். பின்னர் தமது மனைவியரிடம் செல்வார்கள். பின்னர் அவர்கள் மீது நறுமணம் வீசும் நிலையில் காலையில் இஹ்ராம் அணிவார்கள் என்று விடையளித்தார்கள்.

பார்க்க :(புகாரி: 267, 270, 1754)

நேரடி ஆதாரங்கள் இல்லாத போது நபித் தோழர்கள் சுயமாகக் கருத்து கூறியுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகும் போது நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று எப்படிக் கூற முடியும்?

ஒரே நேரத்தில் கூறப்படும் மூன்று தலாக்

மனைவியைப் பிடிக்காத கணவர்கள் தாமாகவே மனைவியை விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆண்களைப் பொருத்த வரை இவ்வாறு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதல் தடவை விவாக ரத்து செய்து, மனைவிக்கு மூன்று மாதவிடாய் முடிவதற்குள் மனமாற்றம் ஏற்பட்டால் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மூன்று மாதவிடாய் கடந்து விட்டால் மனைவி சம்மதித்தால் மீண்டும் அவர்கள் தமக்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது தடவை விவாகரத்து செய்தாலும் மேற்கண்ட அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.

மூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் அதன் பின்னர் மனைவியுடன் சேரவோ, திருமணம் செய்யவோ அனுமதி இல்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மற்றொருவனை மணந்து அவனும் விவாகரத்து செய்திருந்தால் முதல் கணவன் அவளைத் திருமணம் செய்ய அனுமதி உண்டு.

ஒரு கணவன் முதல் தடவை விவாகரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும், உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்ன? என்று கூறி அதை உமர் (ரலி) அவர்கள் சட்டமாகவும் ஆக்கினார்கள்.

(முஸ்லிம்: 2689)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா?

நபிவழியை அறிந்து கொண்டே அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்திருக்கும் போது நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆகும்?

தொழுகையிலும் மாற்றங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் நபித்தோழர்களிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தினமும் ஐந்து தடவை தொழுது பழக்கப்பட்டிருந்த நபித்தோழர்கள் அதிலும் கூட நிறைய விஷயங்களை மாற்றி விட்டனர் என்ற விமர்சனம் நபித்தோழர்கள் காலத்திலேயே எழுந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்றையும் என்னால் காண முடியவில்லை என்று அன (ரலி) கூறினார்கள். “ஏன் தொழுகை இருக்கிறதே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “தொழுகையிலும் பாழ்படுத்த வேண்டிய அளவுக்குப் பாழ்படுத்திவிட்டீர்களே என்று திருப்பிக் கேட்டார்கள்.

(புகாரி: 529, 530)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நடைமுறை அனைத்தும் அனைவரிடமும் அப்படியே நீடிக்கவில்லை எனும் போது நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரம் எனக் கூறுவது தவறல்லவா?

இரண்டு அத்தியாயங்களை மறுத்த இப்னு மஸ்வூத்

திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளதை உலக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.

ஆனால் மிகச் சிறந்த நபித்தோழரான இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களை மறுத்து வந்தார்கள். தமது ஏட்டில் இவ்விரு அத்தியாயங்களையும் அவர்கள் பதிவு செய்யவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் இரண்டு பிரார்த்தனைகள் தான். குர்ஆனின் அத்தியாயங்கள் அல்ல என்று கடைசி வரை சாதித்து வந்தார்கள்.

நூல் : முஸ்னத்(அஹ்மத்: 20244, 20246)

நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் ஆகும் என்றால் திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் 112 தான் என்று நாமும் கூறலாமா? திருக்குர்ஆனின் விஷயத்திலேயே நபித்தோழருக்கு பிழை ஏற்பட்டது என்றால் நபித்தோழரின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?