வருடா வருடம் ஜகாத்தா?
உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை. இருபது தீனார் இருந்து, அதில் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அரை தீனார் (ஸகாத்) ஆகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் இதற்கு அதிகமானவைகளுக்குக் கணக்கிட வேண்டும்.
அறிவிப்பவர்: அலீ (ரழி)
நூல் திர்மிதி 1342
இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் பின் லமுரா என்பவர் பலவீனமானவராவார்.
‘இவர் மனனத் தன்மையில் மிகவும் மோசமானவராவார். தெளிவாகத் தவறு செய்யக் கூடியவர். அலீ அவர்களின் சொந்தக் கூற்றில் அதிகமானவற்றை நபியவர்கள் கூறியதாக அறிவிப்பவராவார். (இவர் அறிவித்திருப்பது அலீயின் சொந்தக் கூற்றுதான் என்பது) அறியப்படும் போது, விடப்படுவதற்கு தகுதியானவராவார்’ என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரைப் பற்றிக் குறை கூறியுள்ளார்கள்.
‘இவருடைய அறிவிப்பை வலுவூட்டக் கூடிய வகையில் உறுதியானவர்கள் எவரும் அறிவிக்காத, தவறான செய்திகளை அலீ அவர்களிடமிருந்து இவர் தனித்து அறிவிக்கிறார். குழப்பங்களே இவரிடமிருந்துதான்’ என இமாம் இப்னு அதீ அவர்களும் இவரைக் குறை கூறியுள்ளார்.
நூற்கள்: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 69
அல் மஜ்ரூஹீன் பாகம் 2, பக்கம் 125.
எனவே ஆஸிம் பின் லமுரா அறிவிக்கக் கூடிய அனைத்து அறிவிப்புகளும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.