வரிசையின் வலது புறம் நிற்பது சிறந்ததா?
வரிசையின் வலது புறம் நிற்பது சிறந்ததா?
தொழுகை வரிசையின் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வும், மலக்குமார்களும் (தொழுகை) வரிசைகளில் வலதுபுறத்தார்கள் மீது ஸலவாத்துக் கூறுகின்றனர்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் “உஸாமா பின் ஸைத்’ என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.
”இவர் ஒரு பொருட்டாக மதிக்கத் தக்கவர் அல்ல” என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார்கள்.
யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரைப் பலவீனமாக்கியுள்ளார்கள்.
”இவருடைய ஹதீஸ்கள் எழுதிக் கொள்ளப்படும். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது” என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்கள்.
”இவர் உறுதியானவராக இல்லை” என இமாம் நஸாயீ கூறுகிறார்.
”இமாம் முஸ்லிம் இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. இவருடைய ஹதீஸ்களை துணைச் சான்றாகவே பதிவு செய்துள்ளார்கள்” என இப்துல் கத்தான் அல்ஃபாஸி கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 1 பக்கம் 183)
மேலும் மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் ”முஆவியா இப்னு ஹிஸாம்” என்றொரு அறிவிப்பாளரும் இடம்பெறுகிறார். இவரையும் இமாம்கள் குறைகூறியுள்ளனர். எனவே இவரும் பலவீனமானவர் ஆவார்.
வரிசைகளில் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாக இருப்பதால் வலது புறத்தில் நிற்பதும், இடது புறத்தில் நிற்பதும் சமமே.