வரதட்சணையால் பெருகும் மிரட்டல் திருமணங்கள்
வரதட்சணையால் பெருகும் மிரட்டல் திருமணங்கள்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக வரதட்சணை வாங்குவதன் மூலம் சாதி, மத பேதமின்றி அனைவராலும் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். திருமணம் ஆகி ஆண்டுகள் பல ஆன பின்பும் கூட வரதட்சணை கேட்டு பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், ஸ்டவ் வெடித்து கொல்லப்படுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல குற்றங்களை குற்றம் என மக்கள் ஒத்துக்கொண்டாலும், வரதட்சணையை மட்டும் இன்னும் இந்திய சமூகம் குற்றமாகக் கருதுவதில்லை. அதனை சமூக அந்தஸ்தாகக் கருதுகிறது.
அதனால் தான் குற்ற உணர்வே இல்லாமல் வரதட்சணையாக வழங்கப்படும் பொருள்கள் சில சமுதாய திருமணங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்படுகிறது. தமிழகத்தில் தவ்ஹீத் பிரசாரத்தின் வாயிலாக வரதட்சணை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தாலும், இஸ்லாமியர்களது சில திருமணங்களில் பள்ளிவாசல்களில் வரதட்சணை அளிக்கும் பொருள்கள் பற்றிய விபரங்கள் இஸ்லாம் தடுத்திருந்தாலும் வாசிக்கப்படுகிறது. வரதட்சணைக்கு எதிரான வழக்குகள் பதியப்பட்டாலும் நடைமுறைச் சிக்கல்களால் அரசாங்கத்தால் செயல்படுத்த முடியவில்லை.
வரதட்சணை காரணமாக திருமணம் தடைபட்ட பெண்களின் எண்ணிக்கையும், விபச்சாரமும் பெருகி வருவது ஒருவகை என்றால் பீகார் மாநிலத்தில் வரதட்சணை வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை கொடுக்கக் கூறி மணமகன் வீட்டார் மிரட்டல் விடுப்பது தான் வழக்கமானது. பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இது எல்லை மீறி போனதன் காரணமாக, மிரட்டல் திருமணங்கள் பெருகி வருகின்றன. இத்திருமணத்தை பீகாரில் “பகத்வா விவாஹ்” என்கிறார்கள். திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட பின்பு மணமகனையோ, மணமகன் குடும்பத்தினரையோ உறவினர், நண்பர்கள் மூலம் மணமகள் வீட்டார் கடத்தி சென்று துப்பாக்கி முனையில் கட்டாயத் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
சில பெண் வீட்டார் மாபியா கும்பலை வைத்து மாப்பிள்ளையைக் கடத்தி திருமணம் செய்து வைக்கின்றனர். நாள் ஒன்றுக்கு ஒன்பது மிரட்டல் திருமணங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. பிஹாரின் மேற்கு பகுதி மாவட்டங்களிலும், உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதி மாவட்டங்களிலும் இது அதிகமாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது. ஸ்டீல் பிளான்ட் ஒன்றில் இளநிலை மேலாளராகப் பணியாற்றும் 29 வயது பொறியாளர் வினோத்குமார் திருமணம் ஒன்றிற்காக பாட்னா சென்றிருந்தார். அவரை மணப்பெண்ணின் சகோதரர் சுரேந்திர யாதவ் தொடர்பு கொண்டு வேறொரு இடத்திற்கு வரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
அங்கு வந்தவரைக் கடத்தி வைத்துக் கொண்டு துப்பாக்கி முனையில் திருமணம் செய்துள்ளனர். தன்னை விட்டுவிடும்படி அழுது கெஞ்சும் வீடியோ சமூக ஊடகங்களிலும், தனியார் தொலைக்காட்சிகளிலும் சமீபத்தில் வெளியாகியது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிஹார் மாநிலத்தில் மட்டும் 3,070 இளைஞர்கள் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு மூன்றாயிரம் இளைஞர்களும், 2014 ஆம் ஆண்டு 2,526 இளைஞர்களும் கடத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கட்டாயத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2015 ஆம் ஆண்டு 18 முதல் 30 வயது ஆண்கள் 1,096 பேர் பீகாரில் அதிகம் கடத்தப்பட்டதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை கூறுகின்றது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட, ஆணின் சம்மதம் இல்லாமல் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களில் ஒன்று கூட இதுவரை செல்லாது என அறிவிக்கப்படவில்லை. திருமணம் சடங்கு போல் கருதப்படுவதன் காரணமாகவே வரதட்சணை கொடுக்க முடியாத போது மிரட்டி கட்டாயத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
திருமணத்தை ஆணும், பெண்ணும் செய்து கொள்ளும் வாழ்க்கை ஒப்பந்தம் என இஸ்லாம் வழிகாட்டி உள்ளது. திருமணத்திற்கு ஆண், பெண் இருவரது சம்மதமும் கட்டாயம் என்பதை வலியுறுத்துகிறது. இஸ்லாம் வலியுறுத்தும் திருமண நடைமுறையைச் செயல்படுத்தினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமைகள் ஒழிக்கப்படும். மிரட்டல் திருமணங்கள் நிறுத்தப்படும். இஸ்லாம் காட்டிய வழிமுறையை நோக்கி பிரச்சனைகள் நம்மை வழிநடக்க செய்கிறது….