வட்டி வாங்குபவரின் அன்பளிப்பு ஹலாலா?
வட்டி வாங்குபவரின் அன்பளிப்பு ஹலாலா?
ஆம். ஹலால் தான்.
மார்க்கத்தில் ஹராமாக உள்ளவை இரண்டு வகைப்படும்.
1 . அடிப்படையில் ஹராம்.
2 . புறக் காரணத்தால் ஹராம்.
பன்றி இறைச்சி, தாமாகச் செத்தவை எப்படி ஹராமாக உள்ளதோ அது போல் பிறரிடமிருந்து முறைகேடாகப் பெற்ற பொருளும் ஹராமாகும்.
ஆனால் இரண்டுக்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு
பன்றி இறைச்சி எந்த வழியில் நமக்குக் கிடைத்திருந்தாலும் ஹராம் என்ற நிலையில் இருந்து அது மாறப் போவதில்லை. நம்முடைய சொந்தப் பணத்தில் அதை வாங்கி இருந்தாலும் அது ஹராம் என்ற நிலையை விட்டு மாறாது.
மற்றவரிடம் வழிப்பறி செய்த ஆட்டிறைச்சியும் ஹராம் என்று நாம் விளங்கி வைத்துள்ளோம். ஆட்டிறைச்சி ஹலால் என்றாலும் அது நமக்குக் கிடைக்கும் வழி சரியாக இல்லாததால் தான் அது ஹராமாகிறது. அதுவே சரியான முறையில் நமக்குக் கிடைத்திருந்தால் ஹராமாகி இருக்காது.
அந்தப் பொருளே ஹராம் என்பது ஒரு வகை. வந்தவழி சரி இல்லாததால் ஹராமாகிப் போனது மற்றொரு வகை என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.
முதல் வகையான ஹராமைப் புரிந்து கொள்வதில் மக்களுக்குக் குழப்பம் ஏதும் இல்லை. இரண்டாவது வகையான ஹராமைப் புரிந்து கொள்வதில் அதிகமான மக்களுக்குத் தெளிவு இல்லை.
பொதுவாக ஹராமாக்கப்பட்டவை எல்லா நிலையிலும் ஹராமாகவே இருக்கும். ஒரு காரணத்துக்காக ஹராமாக்கப்பட்டவை அந்தக் காரணம் இல்லாவிட்டால் ஹராமாகாது என்பது தான் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
ஒருவர் வட்டியின் மூலமோ வேறு ஹராமான வழியிலோ பணம் திரட்டினால் அது இரண்டாம் வகையைச் சேர்ந்ததாகும். அந்தப் பணம் அவருக்குக் கிடைத்த வழி சரியாக இல்லை என்பதால் தான் அது ஹராமாகிறது. அவர் அந்தப் பணத்தை வைத்திருப்பதும் அதன் மூலம் சாப்பிடுவதும் அவருக்கு ஹராமாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்களுக்கும் இதில் குழப்பம் இல்லை.
இப்படி தவறான வழியில் பொருள் திரட்டியவர் நமக்கு அதில் இருந்து அன்பளிப்பு தருகிறார் என்றால் அப்பணம் நமக்கு ஹராமாகுமா?
அல்லது தடுக்கப்பட்ட வழியில் பொருளீட்டியவர் இறந்த பின்னர் அவரது வாரிசுகளுக்கு அந்தச் சொத்து கிடைத்தால் அதை வாரிசுகள் பெற்றுக் கொள்ளலாமா?
இந்த போன்ற விஷயங்களில் தான் மக்களிடம் குழப்பம் உள்ளது.
ஹராமான வழியில் பொருளீட்டியவரின் பொருட்கள் அவருக்கு எப்படி ஹராமாக ஆகின்றதோ அது போல் அவர் அன்பளிப்பாக நமக்குத் தந்தால் அது நமக்கும் ஹராமே என்று அதிகமான அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்தக் கருத்துக்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இல்லை.
ஒருவன் சாராயத்தை நமக்குத் தந்தால் அது நமக்கு ஹராம் தான். ஏனெனில் சாராயம் அடிப்படையிலேயே ஹராமானதாகும். ஆனால் சாராயத்தை விற்றுச் சம்பாதித்த பணத்தில் நமக்கு அன்பளிப்புச் செய்தால் அது நமக்கு ஹராமாகாது என்பதே சரியான கருத்தாகும். ஏனெனில் அந்தப் பணம் அவருக்கு வந்த வழி தான் சரியில்லை. பணமே ஹராம் அல்ல.
இந்தக் கருத்துக்குத் தான் திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் ஆதாரங்கள் உள்ளன.
முதலாவது ஆதாரம் ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்ற கருத்தில் அமைந்த வசனங்களாகும்.
அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
மேலும், ஜகாத் எனும் நிதியை வசூலித்து மேற்கண்ட எட்டுப் பணிகளுக்குச் செலவிட வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்
ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர்களில் ஹலாலான முறையில் பொருளீட்டியவர்களும் இருப்பார்கள். ஹராமான முறையில் பொருளீட்டியவர்களும் இருப்பார்கள். ஹராமான முறையில் பொருளீட்டியவர்களின் பொருளாதாரத்தை மேற்கண்ட நற்பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பார்கள்.
ஹலாலான முறையில் பொருளீட்டியவர்களிடமிருந்து மட்டும் ஜகாத் நிதியைத் திரட்டுங்கள். ஹராமான முறையில் பொருளீட்டியவர்களிடமிருந்து ஜகாத் நிதியை வாங்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
பொருள் வசதி படைத்தவர்களின் வருவாய் எத்தகையதாக இருந்தாலும் அதில் ஜகாத் வசூலிப்பது கியாமத் நாள் வரை கடமையாகும். ஹராமான முறையில் ஒருவர் பொருள் திரட்டி இருந்தால் அதில் கொடுக்கப்படும் ஜகாத்துக்கு மறுமையில் நன்மை கிடைக்காது என்பதற்குத் தான் ஆதாரம் உள்ளதே தவிர அதை வாங்கக் கூடாது என்பதற்கோ, அதை ஏழைகளுக்கு வழங்கக் கூடாது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
இஸ்லாமிய அரசில் செய்யப்படும் நற்பணிகள் ஜகாத் மூலம் மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களிடம் திரட்டப்படும் ஜிஸ்யா வரியின் மூலமும் செய்யப்பட்டு வந்தன.
முஸ்லிமல்லாத மக்களின் பொருளாதாரம் பெரும்பாலும் இஸ்லாம் அனுமதித்த வழியில் திரட்டப்பட்டதாக இருக்காது. ஒருவர் தவறாகப் பொருள் திரட்டினால் அதை மற்றவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலையாக இருந்தால் ஜிஸ்யா எனும் வரியே சட்டமாக்கப்பட்டிருக்காது.
அது போல் போர்க்களத்தில் முஸ்லிமல்லாதவர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்டால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் கனீமத் எனப்படும். இவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அல்லாஹ் அனுமதிக்கிறான்.
போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்து போருக்கு வந்தவர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்து இருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் அவர்களிடமிருந்து கனீமத் என்ற வழியில் நமக்கு வந்து சேர்வதால் அது நமக்கு ஹலாலாக ஆகி விடுகின்றது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் முஸ்லிமல்லாதவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியுள்ளனர். முஸ்லிமல்லாதவர்கள் பொருளீட்டுவதற்கு இஸ்லாம் கூறும் நெறிமுறைகளைப் பேண மாட்டார்கள் என்ற போதும் அந்த அன்பளிப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
அய்லா என்ற ஊரின் மன்னர் நபிகள் நயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக்கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் அணிவித்தார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்றும் அவர் எழுதிக் கொடுத்தார்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி), நூல்: (புகாரி: 1482) , 3161 ,
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“தூமத்துல் ஜந்தல்’ பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பட்டுத்துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே (பெண்களுக்கிடையே) பங்கிட்டு விடுங்கள்” என்று சொன்னார்கள் .
நூல்: (முஸ்லிம்: 4209) (1409)
தூ-யஸன் என்ற மன்னர் 33 ஒட்டகங்கள் கொடுத்து வாங்கிய ஆடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: (அபூதாவூத்: 4034) (3516)
மன்னர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்து வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. மக்களுடைய வரிப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான் மன்னர்கள். எனவே இந்தப் பணத்திலிருந்து வாங்கப்பட்ட பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட போது அதை ஏற்றுள்ளார்கள்.
ஒருவர் தவறான முறையில் பொருளீட்டி இருந்தாலும் அவர் நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அது நமக்கு ஹராமாகாது என்பதை மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
அது போல் யூதப் பெண் கொடுத்த விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.
நூல் : (புகாரி: 2617)
யூதர்களின் வருவாய் வட்டி அடிப்படையில் இருந்தும் யூதப் பெண்ணின் விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுள்ளனர்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உணவு, உடை, இன்னபிற பொருட்களை ஒருவர் ஹராமாகத் திரட்டிய பணத்தில் வாங்கி நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அதை நாம் பெற்றுக் கொள்ளலாம். அது அவருக்குத் தான் ஹராமான வழியில் வந்துள்ளது. எனவே அது அவருக்குத் தான் ஹராமாகும். நமக்கு அன்பளிப்பு என்ற முறையில் வந்துள்ளதால் அது நமக்கு ஹராம் அல்ல என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவாகக் கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக ஒருவர் கொடுத்தால் அது அவர்களுக்கு ஹலால் ஆகும். அவர்கள் மீது இரக்கப்பட்டு பரிதாபப்பட்டு கொடுத்தால் அது அவர்களுக்கு ஹலால் இல்லை. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!
பரீரா என்ற அடிமைப் பெண்ணுக்குச் சிலர் தர்மமாக இறைச்சியைக் கொடுத்தனர். அந்த இறைச்சியை அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டனர். இது எனக்கு தர்மமாக வந்தது என்று பரீரா கூறிய போது அது உனக்கு தர்மமாக வந்திருந்தாலும் நீ எனக்கு அன்பளிப்பாகத் தந்துள்ளதால் அது எனக்கு அன்பளிப்பு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல்: (புகாரி: 1495) , 2577 ,
பரீரா அவர்கள் அடிமையாகவும், பரம ஏழையாகவும் இருந்ததால் ஒருவர் அவருக்குத் தர்மம் செய்துள்ளார். அந்த தர்மத்தைப் பெற்றுக் கொண்ட பரீரா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தர்மமாகக் கொடுக்கவில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏழ்மையைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் தகுதியைக் கருத்தில் கொண்டு அன்பளிப்பாக வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பொருள் கிடைக்கும் வழி மாறியபோது சட்டமும் மாறுவதைக் காணலாம். பரீராவுக்குத் தர்மம் என்ற வழியில் கிடைத்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தர்மம் என்ற வகையில் அது கிடைக்கவில்லை. எனவே தான் அதைச் சாப்பிட்டுள்ளனர்.
மேற்கண்ட நமது கருத்தை இந்தச் சம்பவம் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதற்காக இங்கே இதைக் குறிப்பிடுகிறோம்.