வட்டி கொடுத்தால் பிரார்த்தனை ஏற்கப்படுமா?
உணவு, உடை ஆகியவை ஹலாலாக இருக்கும் நிலையில் தான் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஒரு ஹதீஸில் பார்த்தேன். ஆனால் இன்றைய நிலையில் சிலர் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தும் சூழ்நிலை உள்ளது. கடன் கொடுப்பவர்களும் வட்டியில்லாமல் கொடுப்பதில்லை. இப்படிப் பட்டவர்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுமா?
பதில்
ஏற்கப்படும்
வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டுமே இஸ்லாத்தில் மிகப் பெரும் பாவமாகும். வட்டி கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் பாவத்தில் சம பங்கு உண்டு என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே ஒரு முஸ்லிம் எக்காரணத்தைக் கொண்டும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வட்டிக்குக் கடன் வாங்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அதே சமயம் வட்டிக்குக் கடன் வாங்கிய ஒருவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்படாது என்று மார்க்கம் கூறவில்லை. ஏனென்றால் வட்டி வாங்கி உண்பவர் தான் ஹராமான உணவை உட்கொள்கின்றார். வட்டி கொடுப்பவர், அதாவது வட்டிக்குக் கடன் வாங்கியவர் ஹராமான உணவை உட்கொள்கிறார் என்று கூற முடியாது.
“தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக் கூடிய ஒரு மனிதன், “என் இறைவா! என் இறைவா!” என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்பு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்த ஹதீஸில் ஒருவனது உணவு, குடிப்பு ஆகியவை ஹராமாக இருக்கும் நிலையில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படாது என்று கூறப்படுகிறது. வட்டிக்குக் கடன் வாங்குவதன் மூலம் மட்டுமே ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுவதில்லை என்பதால் அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.