வட்டியை பெற்று தானம் செய்யலாமா?
போஸ்ட் ஆபீஸில் சிறு சேமிப்பு அக்கவுண்ட் சேர்ந்துள்ளோம். அதற்கு சிறிதளவு வட்டி வரும். அந்தப் பணத்தை தானம் செய்தால் அதில் தவறு உள்ளதா? இது தவறு என்றால் சிறு சேமிப்பு எப்படிச் சேருவது?
பதில்
வட்டியை பெறவே கூடாது
அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 2:275) ➚
இந்த வசனத்தில் வட்டி வாங்குபவர்களுக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இது போன்று வட்டியைத் தடை செய்து ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன.
நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் கூறுகின்ற இந்த வட்டி விஷயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு சேமிப்பாக இருந்தாலும், பெரிய அளவில் வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதித்தாலும் இஸ்லாத்தின் பார்வையில் இரண்டும் சமம் தான். ஒரு பைசா அதிலிருந்து கிடைத்தாலும் அது ஹராம் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வட்டி ஹராம் என்று ஆகி விடும் போது, அது நம்முடைய பணம் இல்லை என்று ஆகி விடுகிறது. நம்முடைய பணம் இல்லை எனும் போது அதை வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதை வாங்காமலிருப்பது தான் கடமையாகும். அதை வாங்கி தர்மம் செய்யலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனெனில் அதை வாங்கி பிறருக்குக் கொடுக்கலாம் என்றால் அந்தப் பொருள் நம்முடையது என்று வாக்குமூலம் தந்ததாகவே அர்த்தம். அடுத்தவர் பொருளை நாம் தர்மம் செய்ய முடியாது. எனவே அதை வாங்கி தர்மம் செய்தாலும் வட்டி வாங்கிய குற்றத்திற்குத் தண்டனை பெற வேண்டியது ஏற்படும்.
இது போன்ற அக்கவுண்ட் தொடங்கித் தான் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே ஒரு சிறு தொகையை ஒதுக்கி வைத்து சேமிக்கலாம்.
அல்லது வங்கிகளிலேயே வட்டி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து சேமிப்பதற்கான வழிமுறைகள் உள்ளதா? என்பதை விசாரித்து அதன் படி செய்யலாம். அவ்வாறு செய்யும் போது நாம் சேமிக்கும் பணத்தை அவர்கள் வட்டிக்கு விடுவார்களா? என்பதையும் விசாரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் வட்டி வாங்காவிட்டாலும் வட்டிக்குத் துணை புரிந்த குற்றத்திற்கும் ஆளாகி விடக் கூடாது.
வட்டி எனும் பெரும் பாவத்தைச் செய்து தான் சேமிக்க முடியும் என்றால் அந்தச் சேமிப்பே நமக்குத் தேவையில்லை என்ற முடிவுக்குத் தான் இறையச்சமுள்ள ஒருவர் வர வேண்டும். சிறு சேமிப்பைக் காரணம் காட்டி வட்டியை நியாயப்படுத்த முடியாது.