யார் இந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்?

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

யார் இந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்?

பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட மியான்மர் நாட்டின் ‘ராக்கைன்’ பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட இன மக்கள் தான் ரோஹிங்கிய இனத்தவர்கள். கிட்டத்தட்ட 15 லட்சம் ரோஹிங்கிய மக்கள் அங்கு வசித்து வந்தனர், அனைவருமே முஸ்லிம்கள். இவர்களது பூர்வீகத்தை தலைமுறை பின்னோக்கிப் பார்த்தால், 15 ஆம் நூற்றாண்டு முதல் அவர்களது பூர்வகுடிக்கான தடயங்கள் மியான்மர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைப்பதாக இந்தியன் எக்ஸ்பிரெஸ் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கிறது.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியுடனான யுத்தகால கட்டமான 1826ஆம் ஆண்டு, ரோஹிங்கிய முஸ்லிம்கள் ‘ராக்கைன்’ பகுதியில் குடிபெயர்கின்றனர். மியான்மார் அரசு 1982 ஆம் ஆண்டு, குடியுரிமை சட்டம் ஒன்றை வகுக்கிறது. பல பகுதிகளிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்து தங்கள் நாட்டில் வாழும் பல்வேறு குழுக்களையும் மாறுபட்ட பல இனங்களையும் மியான்மர் தேசத்து குடிமக்களாக அங்கீகரிக்கும் சட்டம் அது..!

காச்சின் எனப்படும் பர்மன் இனம், கரென் இனம், சின், மோன், ராக்கைன், ஷான், கயா போன்ற பல குழுக்களை தங்கள் நாட்டு குடிமக்களாக அங்கீகரித்த அந்த சட்டமானது, இலாவகமாக ரோஹிங்கிய முஸ்லிம்களை மட்டும் தவிர்த்தது. அதற்கு வழி செய்யும் வகையில் அந்த சட்டத்தில், “1826 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த மண்ணில் குடிபெயர்ந்தவர்களாக இருக்க வேண்டும்” என்றவொரு விதியை சேர்த்துக் கொண்டது..! விளைவு, ஐந்து நூற்றாண்டுகளாக மியான்மரில் வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர்.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக, இரண்டாம் தர குடிமக்களாக வாழும் அவலம் நேர்ந்தது. ஆனால், வரலாறு அவர்களை மியான்மரின் குடிமக்களாகவே அடையாகம் கண்டு வந்துள்ளது. 1948 முதல் 2010 வரை, மியான்மரில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வந்திருக்கின்றனர். 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை (temporary scrutiny cards) ஒன்று வழங்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாராளுமன்ற தேர்தலில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சார்பில் போட்டியிட்ட 3 பேர் வெற்றி பெற்று எம்பிக்களாக பாராளுமன்றம் கூட சென்றிருக்கின்றனர். ஆனால் பின்னாளில் அவை செல்லாது என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டனர் என்பது தனி விஷயம். கடந்த 2012 ஆண்டு முதல் மிகப்பெரிய அளவில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அங்குள்ள பௌத்த மத தீவிரவாதிகளால் சொல்லணா துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினர்.

இதற்கு வித்திட்டது, அங்குள்ள பௌத்த பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட நிகழ்வு. பௌத்த வெறியர்கள் சிலரால் நிகழ்த்தப்பட்ட இந்த கற்பழிப்பு சம்பவம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது திருப்பி விடப்பட்டு, அதை காரணம் காட்டி மிகப்பெரிய இன அழிவையே ((Genocide) நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கொலை செய்யப்பட்டனர், உயிரோடு எரிக்கப்பட்டனர். மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் மியான்மர் அரசால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட ஐநா பிரதிநிதிகளும் மனித உரிமை ஆணைய நிர்வாகிகளுமான மார்சுகி ட்ரூஸ்மேன், ராதிகா மற்றும் கிறுஸ்டோஃபர் சிடோட்டி ஆகியோர், மிகப்பெரிய இன அழிவே அங்கு நடைபெற்றதாகவும், முழுக்க முழுக்க மியான்மர் இராணுவத்தின் நேரடி ஆதரவுடன் அவை நிகழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

கொலை, கற்பழிப்பு, பாலியல் வன்புணர்வு, உயிரோடு எரித்து கொலை செய்தல், துடிக்கத் துடிக்க உடற்பாகங்களை வெட்டுதல் போன்ற சகித்துக் கொள்ள இயலாத மனித உரிமை மீறல்கள் அங்கு நடந்தியிருப்பதாகவும் , மிகபெரிய இன அழிப்பிற்கான அடிப்படை உதாரணமாக (a
textbook of ethnic cleansing) அவை அமைந்திருப்பதாகவும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 50 ஆயிரம் முஸ்லிம்கள் மியான்மர் இராணுவத்தாலேயே கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். 4,50,000 பேர் வங்கதேசத்திற்கும், 40 ஆயிரம் பேர் இந்தியாவுக்கும் அகதிகளாக தப்பி வந்தனர். இந்த மக்களை தான் இரும்புக் கரம் கொண்டு எல்லையில் விரட்டியடித்தது நம் தேசம்..! மதச்சார்பற்ற நாட்டிற்கு இது அழகா..? என்பதை மனித நேயம் கொண்டோர் சிந்திக்க வேண்டும்.

Source: unarvu (20/12/2019)