50) மொட்டையடிக்கக் கூடாது
பொதுவாக ஒருவர் மொட்டை அடிப்பதற்கும், முடி வளர்ப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆயினும் மரணத்திற்கு அடையாளமாக மொட்டை அடிப்பதற்கு அனுமதி இல்லை. கணவன் இறந்ததற்காக மனைவியும் தந்தை இறந்ததற்காக மகனும் மொட்டை அடிக்கும் வழக்கம் பலரிடம் காணப்படுகிறது. இதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.
அபூ மூஸா (ரலி) அவர்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி மூர்ச்சயைகி விட்டார். அவரது தலை அவரது மனைவியின் மடி மீது இருந்தது. அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அலறினார். அவருக்கு அபூ மூஸா அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. மயக்கம் தெளிந்ததும் ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை விட்டு நீங்கிக் கொண்டார்களோ அவர்களை விட்டு நானும் நீங்கிக் கொள்கிறேன். அலறுபவள், மொட்டை அடிப்பவள், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவள் ஆகியோரை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கிக் கொண்டார்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ புர்தா (ரலி)
கவனிக்க ஆள் இல்லாத போது சிறுவர்களின் முடிகளைச் சரியாகப் பராமரிக்க முடியாது என்றால் அதற்காக மொட்டை அடிப்பது தவறல்ல என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.