மே மாதம் – அன்னையர் தினமும் அன்னையர்கள் நிலையும்!

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

முன்னுரை

வருடந்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் இதற்கு ஒரு நாள் முன்பின்னாக கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்காவைச் சார்ந்த ஜார்விஸ் என்ற சமூக சேவகி இறந்த பின்பு (1904) அவர்களது மகள் அனாஜார்விஸ் என்ற பெண்மணி தன் தாய் நினைவாக தமதூரில் உள்ள தேவாலயத்தில் (1908) மே மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தன் அன்னையைப் பாராட்டி நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.

இதுவே அன்னையர் தினக் கொண்டாட்டத்திற்கு அடித்தளமிட்டதாகவும் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு அனாஜார்விஸ் என்பவரே காரணம் எனவும் வரலாறு குறிப்பிடுகிறது.

இதைப் பின்பற்றி அன்னையர் தினம் கொண்டாடும் மக்கள் அன்னை என்பவள் ஒப்புக்காக வருடத்தில் ஒருநாள் நினைவு கூரப்பட வேண்டியவளா? அல்லது வாழ்நாள் முழுவதும் மதிக்கப்பட வேண்டியவளா? என்பதை மறந்து விட்டார்கள்.

வருடத்திற்கொரு முறை தவறாமல் வெகு விமரிசையாக அன்னையர் தினம் கொண்டாடுவதால் இவர்கள் அனைவரும் அன்னையர்களை அரவணைப்பவர்கள், ஆதரிப்பவர்கள் ஆக மாட்டார்கள்.

அன்னையர் தினம் கொண்டாடும் மக்களின் நிலையைப் பார்த்தால் ஏதோ வருடத்திற்கு ஒருமுறை அவர்களைச் சந்தித்து அன்பளிப்பு கொடுத்து அன்னையர் தின வாழ்த்தைக் கூறிவிட்டால் பெற்றோருக்கு தாம் செய்ய வேண்டிய அரும்பணியைச் செவ்வனே நிறைவேற்றிவிட்டதாக தனக்குத் தானே பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள்.

இன்னும் பலர் தம் பெற்றோர்கள் உயிருடன் தம்மோடு இருக்கும் போது அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, அழகிய உபசரிப்புகளை, கவனிப்புகளை முறையாக செய்ய மாட்டார்கள். ஆனால் அன்னையர் தினம் வந்தால் மாத்திரம் ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை என மீடியாக்களில் தம் பெற்றோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள். கவிதை இயற்றி அதை வெளியிட்டு மனமகிழ்ந்து கொள்வார்கள்.

முடிவில்லா முதியோர் இல்லங்கள்

வீட்டின் பெயரோ அன்னை இல்லம், ஆனால் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் என்பார்கள். இம்மொழிக்கேற்ப தங்களைச் சிரமத்துடன் பெற்றெடுத்து, அரவணைத்து, ஆளாக்கிய பெற்றோர்களை சிரமம் என்று கருதி தங்கள் வீட்டில் இடம் தராமல் முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இழிபிறவிகளும் இப்பட்டியலில் அதிகம் உள்ளனர்.

இதுபோன்றவர்களின் வீட்டின் பெயரில்தான் அன்னை இருக்கும். ஆனால் வீட்டில் அவர்களின் அன்னையர்கள் இருக்க மாட்டார்கள்.

தான், தன் மனைவி, தன் மக்களுக்கு என சொகுசான வாழ்க்கையைத் தேர்வு செய்து அயல்நாட்டுக்குப் படையெடுத்துச் செல்லும் இன்றைய சமூகம் தமக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றார்கள். தன் தாய் இறப்புத் தருவாயில் இருக்கிறார் எனும் செய்தி வந்தால்கூட பணம் அனுப்புகிறேன். நீங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒற்றை வரியில் தம் கடமையை முடித்துக் கொள்கிறார்கள் பலர்.

பிள்ளைகள் இல்லாமல் பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் காலத்தைக் கழித்தால் அது வேறு. ஆனால் பல பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்று, அனாதையாக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றார்கள்.

தன் மகன் தன்னைக் காண வரமாட்டானா என்ற ஏக்கத்திலேயே, மனப்புழுக்கத்திலேயே அவர்களும் இறந்து விடுகிறார்கள்.

இன்னும் எழுத்தில் வடிக்கமுடியாத துயரங்களையும் துன்பங்களையும் தாய்மார்கள் தம் பிள்ளைகளிடமிருந்து அனுபவித்து வருகிறார்கள். ஆனால் இவர்களோ அதைப் பற்றி கொஞ்சமும் சட்டை செய்யாமல் அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள். இது தான் அன்னையர் தின கொண்டாட்டத்தின் இலட்சணமா? இதுபோன்ற மனிதர்கள் வருடாவருடம் அன்னையர் தினம் கொண்டாடுவதால் என்ன பயன்?

ஒப்புக்காக பெயரளவில் அன்னையர் தினம் கொண்டாடுவதில் இஸ்லாம் உடன்படவில்லை. பெற்றோருக்கு இது போன்ற துயரங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது, தாய் என்பவள் வருடத்திற்கு ஒருமுறை அல்ல ஒவ்வொரு நாளும் போற்றப்படவேண்டியவள் என்பதுதான் இஸ்லாத்தின் கோட்பாடு.

இறைவனுக்கு விருப்பமான செயல்

வேறு எந்த மதமும் வழங்காத அளவுக்கு இஸ்லாம் தாய்க்கு பெரும் மதிப்பையும் மரியாதையையும் வழங்குகிறது.

தாய் தந்தையர்களை உபசரிப்பது, அவர்களுக்கு நன்மை செய்து அரவணைப்பது இறைவனுக்கு மிகவும் உவப்பான செயல் என இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.

இறைவனுக்காக போர்க்களம் சென்று போரிடுவதற்கு சமமான நற்செயலாக பெற்றோர்களுக்கு உபகாரம் புரிவது இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.

527- حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ ، أَخْبَرَنِي قَالَ : سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ ، حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللهِ ، قَالَ :
سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللهِ قَالَ الصَّلاَةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيُّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيُّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي بِهِنَّ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’’ என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது’’ என்றார்கள். “பிறகு எது?’’ என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். “பிறகு எது?’’ என்றேன். அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்று பதிலளித்தார்கள். இதை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாக பதிலளித்திருப்பார்கள்.

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : (புகாரி: 527) 

5972- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ سُفْيَانَ وَشُعْبَةَ ، قَالاَ : حَدَّثَنَا حَبِيبٌ (ح) قَالَ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ، عَنْ حَبِيبٍ ، عَنْ أَبِي الْعَبَّاسِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ :
قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أُجَاهِدُ قَالَ لَكَ أَبَوَانِ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?’’ என்று கேட்டார்கள். அவர், “ஆம் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: (புகாரி: 5972) 

இஸ்லாம் தாய்க்கு எத்தகைய மதிப்பை, உயர் அந்தஸ்தை வழங்குகிறது என்பதை இதில் இருந்து அறியலாம்.

சொர்க்கத்தில் நெருக்கும் செயல்

தாயை அரவணைப்பது இறைவனுக்கு உவப்பான செயல் என்பதோடு மறுமையில் சொர்க்கத்தின் பால் நெருக்கும் செயலும் ஆகும்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ

قُلْتُ: يَا نَبِيَّ اللهِ، أَيُّ الْأَعْمَالِ أَقْرَبُ إِلَى الْجَنَّةِ؟ قَالَ: «الصَّلَاةُ عَلَى مَوَاقِيتِهَا» قُلْتُ: وَمَاذَا يَا نَبِيَّ اللهِ؟ قَالَ: «بِرُّ الْوَالِدَيْنِ» قُلْتُ: وَمَاذَا يَا نَبِيَّ اللهِ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ»

நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் நபியே! செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது’’ என்று கூறினார்கள். “அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!’’ என்று கேட்டேன். அதற்கு, “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். “அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!’’ என்று கேட்டபோது, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : (முஸ்லிம்: 138) 

நட்புக்கு முதலிடம்

தாய் என்றால் இளக்காரமானவள் என்ற சிந்தனையே இன்றைக்கு அதிகம் காணப்படுகிறது. உலகில் உள்ள அனைவரிடமும் நட்பாக, இனிக்க பேசி, பழகும் பலர் தாயிடம் மாத்திரம் எரிந்து விழுபவர்களாகவும் ஏதோ ஒரு அடிமையை நடத்துவதைப் போன்று நடந்து கொள்கிறார்கள்.

அக்கம் பக்கத்தினர் ஏதேனும் ஒரு வேலையைச் செய்யச் சொன்னால் அதையெல்லாம் சிரித்த முகத்துடன் நிறைவேற்றித்தரும் இவர்கள் தாய் ஒன்றைச் சொன்னால் கரடுமுரடான வார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள்.

ஆனால் இஸ்லாம் ஒருவன் அழகிய முறையில் நட்புறவு கொள்வதில் தாயே மிகவும் தகுதி படைத்தவள் என்று உரைக்கிறது.

5971- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ بْنِ شُبْرُمَةَ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ أَبُوكَ.
وَقَالَ ابْنُ شُبْرُمَةَ وَيَحْيَى بْنُ أَيُّوبَ ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்’’ என்றார்கள். அவர், “பிறகு யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்’’ என்றார்கள். அவர், “பிறகு யார்?’’ என்றார். “உன் தாய்’’ என்றார்கள். அவர், “பிறகு யார்?’’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “பிறகு, உன் தந்தை’’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : (புகாரி: 5971) 

நல்ல முறையில் நடந்திடு

நமது அன்னையர்கள் கொள்கையளவில் வேறுபட்டு இருந்தாலும் அவர்கள் கூறும் தீமையான விஷயங்களைத் தவிர்த்து உலக விவகாரங்களில் அவர்களிடத்தில் இனிய முறையில் நடக்க வேண்டும் என்று குர்ஆன் எடுத்துரைக்கின்றது.

وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِىْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۙ فَلَا تُطِعْهُمَا‌ وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا‌ وَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ ‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும்படி அவ்விருவரும் (தாய் தந்தை) உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்!

அல்குர்ஆன் (31 : 15)

2620- حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ ، عَنْ أَبِيهِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ
قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهْيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قُلْتُ { إِنَّ أُمِّي قَدِمَتْ } وَهْيَ رَاغِبَةٌ أَفَأَصِلُ أُمِّي قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் என்னிடம், என் தாயார் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?’’ என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்துகொள்’’ என்று கூறினார்கள்.

நூல் : (புகாரி: 2620) 

பெரும்பாவம்

நம்மை பெற்றெடுத்த தாயின் மனம் புண்படும்படி எந்தவகையிலும் நம்முடைய செயல் அமைந்து விடக்கூடாது.

இஸ்லாம் சில தீமைகளைப் பட்டியலிட்டு பெரும்பாவங்கள் என்று குறிப்பிடுகிறது. இறைவனுக்கு இகைற்பிப்பது, கொலை போன்ற பெரும்பாவங்களின் பட்டியலில் தாயை நோவினை செய்வதையும் அல்லாஹ் இணைத்துள்ளான்.

தாயின் மணம் புண்படும்படி நடப்பது கொலை போன்ற பெரும் பாவம் என்பதாக இஸ்லாம் பார்க்கின்றது.

6871- حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ سَمِعَ أَنَسًا ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
الْكَبَائِرُ وَحَدَّثَنَا عَمْرٌو ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنِ ابْنِ أَبِي بَكْرٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : أَكْبَرُ الْكَبَائِرِ الإِشْرَاكُ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَوْلُ الزُّورِ ، أَوْ قَالَ وَشَهَادَةُ الزُّورِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், “பொய் கூறுவதும்‘ அல்லது “பொய்ச் சாட்சியம் சொல்வதும்‘ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: (புகாரி: 6871) 

ஆனால் பெற்றெடுத்த தாயை சர்வ சாதாரணமாய் அடிப்பதையும் உதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் கேடு கெட்ட ஜென்மங்களை என்னவென்பது?

என்றென்றும் நினைவு கூரத்தக்கவள்

யாருக்கும் வழங்காத அளவில் தாய்க்கு இவ்வாறான சிறப்புகளை எல்லாம் இஸ்லாம் வழங்கியதற்கு அதிமுக்கிய காரணம் அவர் நம்மால் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதே.

உலகில் உள்ள உறவுகளில் நம்மால் அதிகம் நினைவு கூரத்தக்க ஒருவர் இருக்கிறார் எனில் அது நம்மை அதிக சிரமத்துடன் ஈன்றெடுத்த தாயே என்பதில் கடுகின் முனையளவும் சந்தேகமில்லை.

 وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا‌ ؕ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا‌ ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا‌ ؕ حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً  ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள்.

(அல்குர்ஆன்: 46:15)

தாயின் கருவறையில் உருவாகியதிலிருந்து நாம் வளர்ந்து பெரியவராகும் வரை தாய் எனும் உயிர் படும் அவஸ்தை, வேதனை கொஞ்ச நஞ்மா?

முதன் முதலில் உலகில் நம்மை ஈன்றெடுக்க தாய் படும் பாட்டை, அவளது வலியை விவரிக்க வார்த்தைகள் உண்டா?

அந்த வலியினாலே நம்மை வெறுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாய் பேரன்பை வெளிப்படுத்தி தன் நலன் பாராமல் நம் நலமே பெரிது என்றெண்ணி தனது அத்தனை செயல்பாடுகளையும் ஏன் தன்னையே நமக்காக மாற்றிக் கொண்டவள்தான் தாய். இத்தாய்க்கு ஈடான உறவு உலகில் எதுவும் இல்லை.

அந்தத் தாயை வருடத்தில் 364 நாட்களும் பலவித செயல்பாடுகளால் நோவினை செய்துவிட்டு ஒருநாள் மட்டும் அன்னையர் தினம் கொண்டாடுவதால் ஒருபோதும் அவள் திருப்தியுறப் போவதில்லை. அவள் திருப்தியுற்றாலும் நமக்காக அவள் செய்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒருபோதும் இது ஈடாகாது.

மெழுகுவர்த்தி போன்று தன்னை உருக்கி, வருத்தி நமக்கு வாழ்க்கை எனும் ஒளியை ஏற்றிவைத்த தாய் வருடத்திற்கொரு முறை ஒப்புக்காக நினைவு கூரப்பட வேண்டியவளா? அல்லது ஒவ்வொரு நாளும் உண்மையாய் சேவையாற்றப்படவேண்டியவளா? என்பதை சிந்தித்து பாருங்கள்.

கனிவுடன் நடந்திடு

இன்றைக்கு பலவீட்டில் வயது முதிர்ந்த அன்னையர்களின் பெயர்கள் சனியன்கள். ஆம் பாசத்திற்குரிய(?) பிள்ளைகளால் அப்படித்தான் அழைக்கப்படுகிறார்கள்.

நமக்கு அழகான பெயரிட்டு, அகமகிழ்ந்து தங்கமே! செல்லமே! என செல்லப்பெயர் சூட்டி அழைத்த தாய்க்கு கிடைத்த பெயர் சனியன். இப்பெயருக்கு காரணம் முதுமை.

தாய் முதுமையடைந்து எதுவும் சுயமாக செய்ய இயலாத்தன்மையை அடைந்துவிட்டால் சிறு குழந்தைகளைப் போன்று அவர்கள் மாறிவிடுகிறார்கள்.

ஒரு குழந்தை எவ்வாறு தனக்குரியதை தானே செய்து கொள்ள இயலாதோ இன்னொரு நபர் அதன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டுமோ அத்தகைய நிலையை அவர்கள் அடைந்து விடுகிறார்கள்.

இந்நேரத்தில் பிள்ளைகள் தாம் அவர்களைக் கனிவுடன் பராமரித்து நடந்திடல் வேண்டும்.

அவர்களுக்கு உடை உடுத்திவிட்டு, அசுத்தம் நீக்கிவிட்டு, இன்ன பிற தேவைகளை நிவர்த்தி செய்து கொடுக்கும் கடமை பிள்ளைகளுக்கு உண்டு. ஆனால் பிள்ளைகளோ இந்நேரத்தில்தான் தம்மைப் பராமரித்த தாயை தாம் பராமரிக்க மறுத்து சனியன் போன்ற தடித்த வார்த்தைகளால் திட்டுகிறார்கள். தாய் மனம் வேதனையுறும்படி கனிவற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்.

இதுபற்றி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏

“என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி “சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்ததுபோல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!’’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்:), 24)

சிறுவனாக இருக்கும்போது அவர்கள் நம்மைப் பரமாரித்ததை நினைவு கூர்ந்து தாய்க்கு சேவையாற்றும்படி இறைவன் அறிவுறுத்துகிறான்.

ஆம். நாம் குழந்தையாக இருக்கும்போது தாயின் பராமரித்தலை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

நம்முடைய மலம், வாந்தி, பிற அசுத்தம் என அனைத்தையும் தம் கையிலும் உடலிலும் ஏந்திக்கொண்டு, அந்நேரத்திலும் சிரித்துக் கொண்டிருந்தாளே அத்தகைய தாய்க்கு இதுபோன்ற நிலையில் நாம் சேவையாற்றுவதைத் தவிர வேறு வேலை இல்லை என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

அரவணைக்க வேண்டிய நாமே அவர்களை அதட்டுவதும் விரட்டுவதுமாய் இருந்துவிட்டு பிறகு அன்னையர் தினத்தில் மாத்திரம் தாயைப் புகழ்ந்து ஒரு கவிதை சொன்னால் நாம் அன்னையர்களை மதித்தோம் என்றாகி விடுமா?

அருமை நபித்தோழர்கள் தம் பெற்றோர்களை அரவணைப்பவர்களாகவும், பெற்றோர்களின் உறவுகளிடத்தில்கூட நல்லிணக்கத்தோடு நடப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இதைப் பின்வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

6677 – حَدَّثَنِى أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنِى سَعِيدُ بْنُ أَبِى أَيُّوبَ عَنِ الْوَلِيدِ بْنِ أَبِى الْوَلِيدِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ
أَنَّ رَجُلاً مِنَ الأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ وَأَعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأْسِهِ فَقَالَ ابْنُ دِينَارٍ فَقُلْنَا لَهُ أَصْلَحَكَ اللَّهُ إِنَّهُمُ الأَعْرَابُ وَإِنَّهُمْ يَرْضَوْنَ بِالْيَسِيرِ. فَقَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَإِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ ».

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களை, கிராமவாசிகளில் ஒருவர் மக்கா செல்லும் சாலையில் சந்தித்தபோது, அவருக்கு அப்துல்லாஹ் முகமன் (சலாம்) கூறி, அவரைத் தாம் பயணம் செய்துவந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும், அவருக்குத் தமது தலை மீதிருந்த தலைப்பாகையை (கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம், “அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும்! இவர்கள் கிராமவாசிகள். இவர்களுக்குச் சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள்’’ என்று கூறினோம். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் அன்புக்குரியவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்‘ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்’’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் தீனார்

(முஸ்லிம்: 4989)

தம்மைப் பெற்றெடுத்த தாயையே கண்டுகொள்ளாமல் இருக்கும் இக்காலச் சூழ்நிலையில் பெற்றோரின் உறவினர்களை உபசரிப்பதைப் பற்றி விளக்கிக் கூறத்தேவையில்லை.

சொத்துப்பங்கீடா? பெற்றோர் பங்கீடா?

தாய், தந்தையர் இருக்கும்போதே இக்காலகட்டத்தில் சொத்துப்பங்கீடு நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. நிலம் உனக்கு வீடு எனக்கு என்ற பாணியில் நிலம், காசு பணத்தை பிள்ளைகள் பங்கீடு செய்யும் போதே தம்மைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் அப்பா எனக்கு அம்மா உனக்கு என்று கூறுபோடத் தயங்குவதில்லை. அதாவது அண்ணண் தம்பிகளில் அப்பா ஒருவரிடத்திலும் அம்மா ஒருவரிடத்திலும் இருப்பார்களாம். அல்லது எனக்கு 1 மாசம் உனக்கு 1 மாசம் என நாள் கணக்கிட்டு பெற்றோரைப் பங்கிட்டுக் கொள்வார்களாம்.

மெய்சிலிர்க்கச் செய்கிறது இவர்களின் நேர்மைமிகு (?) பங்கீடு.

பெற்றோரைப் பாரமாக கருதும் இதுபோன்றவர்களுக்கு இஸ்லாம் கூறுவதைப் பாருங்கள்.

6675 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ». قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ « مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ ».

நபி (ஸல்) அவர்கள், “மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்‘’ என்று கூறினார்கள். “யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் சேவை செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத்தான்)’’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 4987) 

(25182) 25697- حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عَمْرَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ :
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : نِمْتُ ، فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ ، فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ ، فَقُلْتُ : مَنْ هَذَا ؟ قَالُوا : هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : كَذَاكَ الْبِرُّ ، كَذَاكَ الْبِرُّ وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒருநாள்) கனவில் சொர்க்கத்தில் என்னை நான் கண்டேன். அப்போது ஒருவர் ஓதும் குரலை (சொர்க்கத்தில்) செவியேற்றேன். இவர் யார் என்று நான் கேட்டபோது இவர் ஹாரிஸா பின் நுஃமான் என்று அவர்கள் பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நன்மை (யின் கூலி) இவ்வாறுதான். நன்மை (யின் கூலி) இவ்வாறுதான் ஹாரிஸா அவர்கள்தான் மக்களிலேயே தம் தாயாருக்கு அதிக சேவையாற்றுபவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் : (அஹ்மத்: 25182) (24026)

தாய் தந்தையர்கள் சுமையல்ல. பாரமல்ல. அவர்கள் தான் சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழி என்று நபி (ஸல்) அவர்கள் இந்த நபிமொழி மூலம் நமக்கு உணர்த்துகின்றார்கள்.

சேவை செய்வோம்

நாம் நினைத்தால் நமது அன்னையர்களுக்கு சேவையாற்றுவதன் மூலமாகவே சொர்க்கம் சென்று விட முடியும் என இஸ்லாம் அறிவுரை சொல்கின்றது.

இதை உணர்ந்து நமது அன்னையர் நம்முடன் இருக்கும்போதே அவர்களின் மனம் நோகாமல் அவர்களுக்குரிய கடமைகளைச் சரியாக ஆற்றி அவர்களின் மனம் குளிரும்படி நடந்து கொள்ள வேண்டும்.

இறப்பிற்குப் பிறகும் அவர்கள் சார்பாக தர்மம் செய்தல், அவர்கள் மீது கடமையான நோன்பு, ஹஜ், நேர்ச்சை போன்றவற்றை நிறைவேற்றுதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக எல்லா நிலையிலும் இறைவன் கற்றுத்தந்தபடி நமது தாயாருக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏

“சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்ததுபோல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!’’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்:)

இவ்வாறாக பல வழிகளில் நம் அன்னையர்களுக்காக சேவையாற்றிட வேண்டும்.

வெத்து வேட்டாய் அன்னையர் தினம் என்று கொண்டாடுவதைத் தவிர்த்துவிட்டு உண்மையாய் நம் அன்னையர்களுக்கு சேவை செய்து சொர்க்கத்தை பெறுவோமாக.