மென்மையை தேர்வு செய்த மேன்மை நபி

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
மென்மையும் பொறுமையும்

 

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன்: 3:159)

நபிகளாரைப் பற்றிய இதே கருத்து தவ்ராத்திலும்கூட கூறப்பட்டுள்ளது.

عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ لَقِيتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي التَّوْرَاةِ قَالَ أَجَلْ وَاللَّهِ إِنَّهُ لَمَوْصُوفٌ فِي التَّوْرَاةِ بِبَعْضِ صِفَتِهِ فِي الْقُرْآنِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَحِرْزًا لِلأُمِّيِّينَ أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكِّلَ لَيْسَ بِفَظٍّ ، وَلاَ غَلِيظٍ ، وَلاَ سَخَّابٍ فِي الأَسْوَاقِ ، وَلاَ يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَيَفْتَحُ بِهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا تَابَعَهُ عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ عَنْ هِلاَلٍ وَقَالَ سَعِيدٌ عَنْ هِلاَلٍ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ سَلاَمٍ غُلْفٌ كُلُّ شَيْءٍ فِي غِلاَفٍ سَيْفٌ أَغْلَفُ وَقَوْسٌ غَلْفَاءُ وَرَجُلٌ أَغْلَفُ إِذَا لَمْ يَكُنْ مَخْتُونًا

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, தவ்ராத்தில் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!” என்றேன். அவர்கள், ‘இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களுடைய சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. ‘நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியம் அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் எனது அடிமையும் எனது தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!’

(இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) ‘அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார்!

தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்! வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாதவரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்” என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!’ என பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர்: அதா பின் யஸார் (ரஹ்) 
நூல்: (புகாரி: 2125) 

வளாலால் மிரட்டப்பட்ட நபிகளார்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ
غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- غَزْوَةً قِبَلَ نَجْدٍ فَأَدْرَكَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى وَادٍ كَثِيرِ الْعِضَاهِ فَنَزَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- تَحْتَ شَجَرَةٍ فَعَلَّقَ سَيْفَهُ بِغُصْنٍ مِنْ أَغْصَانِهَا – قَالَ – وَتَفَرَّقَ النَّاسُ فِى الْوَادِى يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ – قَالَ – فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ رَجُلاً أَتَانِى وَأَنَا نَائِمٌ فَأَخَذَ السَّيْفَ فَاسْتَيْقَظْتُ وَهُوَ قَائِمٌ عَلَى رَأْسِى فَلَمْ أَشْعُرْ إِلاَّ وَالسَّيْفُ صَلْتًا فِى يَدِهِ فَقَالَ لِى مَنْ يَمْنَعُكَ مِنِّى قَالَ قُلْتُ اللَّهُ. ثُمَّ قَالَ فِى الثَّانِيَةِ مَنْ يَمْنَعُكَ مِنِّى قَالَ قُلْتُ اللَّهُ . قَالَ فَشَامَ السَّيْفَ فَهَا هُوَ ذَا جَالِسٌ ». ثُمَّ لَمْ يَعْرِضْ لَهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (‘தாத்துர் ரிகாஉ’ எனும்) போருக்காக ‘நஜ்த்’ நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்துசேர்ந்தார்கள். (மதிய ஓய்வு கொள்ளும் நண்பகல் நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே இறங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்கள் தமது வாளை அந்த மரத்தின் கிளையொன்றில் தொங்கவிட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று, நிழல் பெற்று (ஓய்வெடுத்து)க்கொண்டிருந்தனர்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களை அழைத்துக்) கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் என்னிடம் வந்து (எனது) வாளை (தமது கையில்) எடுத்துக்கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் தலைமாட்டில் நின்றிருந்தார். (உறையி ருந்து) உருவப்பட்ட வாள் அவரது கையில் இருப்பதை உடனே உணர்ந்தேன். அப்போது அவர், ”என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?” என்று என்னிடம் கேட்டார்.நான், ‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். பிறகு மீண்டும் அவர், ”என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?” என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்றேன். உடனே அவர் வாளை உறையிட்டுவிட்டார். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்.

பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை.(கண்டிக்கவில்லை)

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 4585) 

நபிகளாரை சபித்த யூதர்கள்

நபிகளார் காலத்தில் இருந்த யூதர்கள் நபிகளாருக்கு பல வகையில் துன்புறுத்திவந்தார்கள். அதில் ஸலாம் கூறும்போதுகூட வார்த்தையை மாற்றி உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் என்று கூறினார்கள். அதற்கு அதிகபட்சமாக உமக்கும் அப்படியே ஆகட்டும் என்று கூறினார்களே தவிர வேறு கடுமையான வாசகங்களை பயன்படுத்தவில்லை. பயன்படுத்தியவர்களைக்கூட இவ்வாறு கூறவேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள்.

عَنْ عَائِشَةَ قَالَتِ
اسْتَأْذَنَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ. فَقَالَتْ عَائِشَةُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِى الأَمْرِ كُلِّهِ ». قَالَتْ أَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ « قَدْ قُلْتُ وَعَلَيْكُمْ

யூதர்களில் ஒரு குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (ஸலாம் என்ற வார்த்தை சற்று மாற்றி) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு ”வ அலைக்குமுஸ்ஸாமு வல்லஅனஹ் (அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)”என்றேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று சொன்னார்கள். அப்போது நான், ”அல்லாஹ் வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நான்தான் ‘வஅலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 6024) 

பள்ளிவாசலில் சிறுநீர்கழித்த கிராமவாசி
 حَدَّثَنِى أَنَسُ بْنُ مَالِكٍ – وَهُوَ عَمُّ إِسْحَاقَ – قَالَ
بَيْنَمَا نَحْنُ فِى الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذْ جَاءَ أَعْرَابِىٌّ فَقَامَ يَبُولُ فِى الْمَسْجِدِ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- مَهْ مَهْ. قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تُزْرِمُوهُ دَعُوهُ ». فَتَرَكُوهُ حَتَّى بَالَ. ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- دَعَاهُ فَقَالَ لَهُ « إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لاَ تَصْلُحُ لِشَىْءٍ مِنْ هَذَا الْبَوْلِ وَلاَ الْقَذَرِ إِنَّمَا هِىَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالصَّلاَةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ ». أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم قَالَ فَأَمَرَ رَجُلاً مِنَ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ فَشَنَّهُ عَلَيْهِ

ஒரு முறை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசல் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் ‘நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து ”இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும், குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்” என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 480) 

நபிகளாரிடம் கடுமைகாட்டியவர்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللهِ : وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الْبُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ‘நஜ்ரான்’ நாட்டுன் சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக்கண்டேன்.

பிறகு அந்தக் கிராமவாசி, ”முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்: (புகாரி: 5809) 

நபிகளாரின் கட்டளையில் தவறு செய்தவர்கள்
عَنِ ابْنِ عُمَرَ قَالَ
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَنَا لَمَّا رَجَعَ مِنَ الأَحْزَابِ لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلاَّ فِي بَنِي قُرَيْظَةَ فَأَدْرَكَ بَعْضُهُمُ الْعَصْرَ فِي الطَّرِيقِ فَقَالَ بَعْضُهُمْ لاَ نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي لَمْ يُرَدْ مِنَّا ذَلِكَ فَذُكِرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ

அகழ்ப் போரிலிருந்து திரும்பியபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், ”பனூகுறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழவேண்டாம்” என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ர் நேரத்தை மக்கள் அடைந்தனர்.

அப்போது சிலர், ”பனூகுறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழுகையை தொழவேண்டாம்” என்று கூறினர். மற்ற சிலர், ”(தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் (அவ்வாறு) கூறவில்லை; (‘வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்’ என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்). எனவே, நாம் தொழுவோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 946) 

நபிகளாரை முள்ளில் தள்ளியவர்கள்

சிலர், நபி (ஸல்) அவர்களிடம் தர்மம் கேட்கும் போது நபிகளாரை முள்மரத்தில் தள்ளிவிடும் அளவிற்கு நடந்துக் கொண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மேலும் சிலர் நேர்மையாக பங்கிடவில்லை என்று கடுமையான வாசத்தை கூறியபோது கோபப்பட்ட நபிகளார், நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை நினைத்துப்பார்த்து பொறுமையாக இருந்து கொண்டார்கள்.

أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ
أَنَّهُ بَيْنَمَا هُوَ يَسِيرُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَمَعَهُ النَّاسُ مَقْفَلَهُ مِنْ حُنْيَنٍ فَعَلِقَهُ النَّاسُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ فَخَطِفَتْ رِدَاءَهُ فَوَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ أَعْطُونِي رِدَائِي لَوْ كَانَ لِي عَدَدُ هَذِهِ الْعِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ ثُمَّ لاَ تَجِدُونِي بَخِيلاً ، وَلاَ كَذُوبًا ، وَلاَ جَبَانًا

நபி (ஸல்) அவர்கள், ‘ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; ‘சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளி விட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, ”என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காண மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி),
நூல் : (புகாரி: 2821)

 قَالَ عَبْدُ اللهِ
قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم قِسْمَةً كَبَعْضِ مَا كَانَ يَقْسِمُ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ وَاللَّهِ إِنَّهَا لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللهِ قُلْتُ أَمَّا أَنَا لأَقُولَنَّ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ وَهْوَ فِي أَصْحَابِهِ فَسَارَرْتُهُ فَشَقَّ ذَلِكَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَتَغَيَّرَ وَجْهُهُ وَغَضِبَ حَتَّى وَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ أَخْبَرْتُهُ ثُمَّ قَالَ قَدْ أُوذِيَ مُوسَى بِأَكْثَرَ مِنْ ذَلِكَ فَصَبَرَ

நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ”அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார்.

நான், ”நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் சொல்வேன்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன்.

அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது. அவர்களுடைய முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்களிடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ”(இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக்கொண்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி),
நூல் : (புகாரி: 6100) 

இலகுவையே தேர்வு செய்யும் நபிகளார்

பொதுவாக நபிகளார் அவர்கள் எது இலகுவானதாக இருக்கிறதோ அதையே தேர்வு செய்வார்கள். கடுமையானதை அவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள். மென்மையாக நடக்க முடிந்த அனைத்திலும் மென்மையாகவும் பொறுமையாகவும் இருப்பார்கள்.

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّهَا قَالَتْ
مَا خُيِّرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللهِ فَيَنْتَقِمَ لِلَّهِ بِهَا

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே – அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் – எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 3560) 

இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!