மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும்

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும்

இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் ஒன்று திருமறை குர்ஆனும், மற்றொன்று  ஆதாரப்பூர்வமான நபிவழியும் தான் என்பதில் துளிகூட நமக்கு ஐயம் இல்லை.  இதைத்தவிர மார்க்கத்தின் பெயரால் சொல்லப்படும் அனைத்தும் வழிகேடு என்பதைப் பல வருடங்களாக உலகெங்கும் நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அதில் முக்கியமான ஒன்றாக, திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய செய்திகளை ஏற்று கொள்ளக் கூடாது என்றும் அதன் முரண்பாடுகள் நீங்கும் வரை (ஹதீஸ் கலையின் விதிபடி) அதைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் நாம் செய்து வருகிறோம்.

அந்த அடிப்படையில் சில ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படுவதன் காரணத்தாலும், அதற்கு எந்த அடிப்படையிலும் விளக்கம் சொல்ல முடியாது என்பதாலும்  திருக்குர்ஆனுக்கு முரண்பாடாக நபிகளார் பேசமாட்டார்கள் என்பதாலும் நாம் சில ஹதீஸ்களைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து இருக்கிறோம்.

அதில் ஒன்றுதான் மூஸா (அலை) அவர்கள் தொடர்பான, திருக்குர்ஆனுக்கு நேரடியாக  முரண்படுகிற ஒரு செய்தி. அதைக்குறித்த ஒரு சிறிய நினைவூட்டலையும்  அதைத்தொடர்ந்து  அதற்கு எதிர் தரப்பினர் வைக்கக்கூடிய வாதங்களையும் அதனுடைய மறுப்பையும் பார்போம்.

மூஸா(அலை) அவர்கள் மலக்கை அடித்தார்களா?

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 113)

1339- حَدَّثَنَا مَحْمُودٌ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ ابْنِ طَاوُوسٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى – عَلَيْهِمَا السَّلاَمُ – فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَاذَا ؟ قَالَ : ثُمَّ الْمَوْتُ قَالَ فَالآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَلَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ.

உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரது கண் பிதுங்கும் அளவுக்கு அடித்துவிட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், “இறைவா! இறக்க விரும்பாத ஒரு அடியாளிடம் நீ என்னை அனுப்பி விட்டாய்” என்றார். பிறகு அல்லாஹ் அவரது கண்ணைச் சரிப்படுத்தி விட்டு, நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி, அவரது கை எத்தனை ரோமங்களை அடக்கிக்கொள்கின்றதோ அத்தனை வருடங்கள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும் என அனுப்பிவைத்தான்.

(அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறிய போது) மூசா (அலை), “இறைவா, அதற்குப் பிறகு?” எனக் கேட்டதும் அல்லாஹ், “பிறகு மரணம் தான்” என்றான். உடனே மூசா (அலை) அவர்கள் “அப்படியானால் இப்பொழுதே (தயார்)” எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத்தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது, “நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூசா (அலை) அவர்களது அடக்கவிடத்தைக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1339)

இந்த செய்தி பல வழிவழிகளில் திருமறை குர்ஆனுக்கு முரண்படுவதை நம்மால் காண முடிகிறது. எப்படி இந்தச் செய்தி திருக்குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

இறைக் கட்டளையை மீறும் வானவர்?

மேற்கண்ட செய்தியில் ஒரு வானவர் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றாமல் திரும்பி செல்கிறார். இது இறைவன் வானவர்களுக்கென்று வகுத்துள்ள இலக்கணங்களுக்கு மாற்றமானது. வானவர்கள் ஒருபோதும் அவர்களுக்கு ஏவப்பட்ட விஷயங்களுக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்பது திருக்குர்ஆனின் கூற்று.

நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் (நரக நெருப்பைவிட்டும்) காப்பாற்றிக் கொள்ளுங்கள், அதன் எரிபொருள்      மனிதர்களும், கற்களுமாகும், அதில்  கடுமையும் பலமும் நிறைந்த வானவர்கள் உள்ளனர், அல்லாஹ்விற்கு  அவர்களுக்கு ஏவியவற்றில் அவர்கள் மாறுசெய்யமாட்டார்கள், (இறைவன்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுவதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன்: 66:6)

இதே கருத்து 16:49,50, 21:26,27 ஆகிய வசனங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இறைக் கட்டளையை ஏற்க மறுக்கும் நபி?

மேற்கண்ட செய்தியில் அல்லாஹ் சொன்ன ஒரு கட்டளைக்குச் செவிசாய்க்காமல் மூசா (அலை) அவர்கள் வானவரை அடித்தது, இறைக்கட்டளை எந்நிலையிலும் ஏற்று நடக்கும் நபிமார்களுக்குரிய உயரிய அந்தஸ்தை உடைத்தெறிகிறது. எல்லா நபிமார்களும் இறைவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டுதான் நடந்தார்களே தவிர மாறு செய்யவில்லை. அப்படி அல்லாஹ்வுடைய வார்த்தையைக் கேட்காமல் நடந்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதை யூனுஸ் (அலை) அவர்களின் வரலாற்றின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.

(நபியே!) நீர் உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! மேலும், மீனுடையவரைப் போன்று நீர் ஆகிவிட வேண்டாம்.  அப்போது அவர் துக்கம் நிறைந்தவராக  அழைத்தார். அவரது இறைவனின் அருட்கொடை அவரை அடையாதிருந்தால், வெட்டவெளியில் பழிக்கப்பட்டவராக அவர் எறியப்பட்டு இரு(ந்திரு)ப்பார்.

(அல்குர்ஆன்: 68:49)

படைத்தவனின் கட்டளைக்கு உடனே கட்டுப்படுவதுதான் இறைத்தூதர்களின் பண்பு. ஆனால் மேற்கண்ட மூஸா நபி செய்தியில் இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களின் கட்டளைக்கு அவர் கட்டுப்பட மறுப்பதும் அவரைத் தாக்குவதும் திருக்குர்ஆன் காட்டும் வழிமுறைக்கு மாற்றமாக அமைந்திருக்கிறது.

தோல்வியைத் தழுவும் வானவர்?

ஒரு பணிக்கு இறைவன் வானவர்களை அனுப்புகிறான் என்றால் அதற்க்கான எல்லா ஆற்றல்களையும் கொடுத்து தான் இறைவன் அனுப்புவான். அந்த அடிப்படையில் வானவர் அடிவாங்கி விட்டுத் தோல்வியுடன் திரும்புவது என்பது அல்லாஹ்வுடய தோல்வியாகத் தான் அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதுபோன்ற காரணங்களால் இந்தச் செய்தி திருக்குர்ஆனின் செய்திகளுக்கு முரணாக அமைவதால் இதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினோம்.

ஆனால் சிலர் இந்த வாதங்களுக்கு சில பதில்களைச் சொல்லியுள்ளார்கள். அவை நியாயமானதாக இருந்தால் அவற்றை நாம் ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை.

அவர்களின் வாதம் நியாயமாக உள்ளதா? என்பதைப் பார்ப்போம்.

எதிர்வாதம்: 1

மூஸா (அலை) அவர்கள் தமக்குப் பிடிக்காத சில காரியங்களைக் காணும்போது கோபப்படுபவர்களாக இருந்துள்ளார்கள்.

மூஸா (அலை) ஆரம்பத்தில் தனது இனத்தைச் சேர்ந்த ஒருநபருக்கு ஆதரவாக மற்றொரு மனிதரை அடித்துக் கொன்று விடுகிறார். (அல்குர்ஆன்: 28:14)

அதேபோன்று மூசாவுக்கு வேதத்தை வழங்குவதற்காக அல்லாஹ், அழைத்த நேரத்தில் அவருடைய சமூகம் வழிகேட்டை நோக்கிச் சென்றது. மூஸா (அலை) திரும்பி வந்து பார்த்து, கடுமையாகக் கோபப்பட்டு தன்னுடைய சகோதரரையே அடிக்கச் செல்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 7:150)

மேலும் மூஸா (அலை) அவர்கள், ஹிழ்ர் (அலை) அவர்களுடன் சென்ற நேரத்தில் பொறுமையை இழந்த நபராகக் காணப்படுகிறார். (அல்குர்ஆன்: 18:67)

எனவே மூஸா (அலை) அவர்கள் இயற்க்கையாகவே கோபப்படக்கூடியவர் ஆவார். பொறுமை இல்லாதவர் ஆவார். அந்த அடிப்படையில் மூஸா, வானவரை அடித்திருப்பார்.

வாதம்: 2

உயிரை எடுக்க வந்த வானவரை மூஸா (அலை) அறியாத காரணத்தினால் தான் வானவரை அடித்துள்ளார்கள். ஏனென்றால் சில நபிமார்கள் வானவர்களை அறியாமல் இருந்துள்ளார்கள்.

இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா? அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறியபோது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் (அவருக்கு) அறிமுகமில்லாத சமுதாயம்! தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். அதை அவர்களின் அருகில் வைத்து “சாப்பிட மாட்டீர்களா?’’  என்றார். அவர்களைப் பற்றிப் பயந்தார். “பயப்படாதீர்!’’ என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.

(அல்குர்ஆன்: 51:24-28)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் வானவர்களை சில நேரங்களில் நபிமார்கள் அறியமாட்டார்கள் என்பது தெளிவாகிறது .

இன்னும் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் சிறந்த அந்தஸ்தில் இருந்ததால் தான் வானவர் மூஸா (அலை) அவர்களைத் திருப்பி அடிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

என் இறைவா! உன் அடிமை மூஸா என் கண்ணை பிதுங்கச் செய்து விட்டார். உன்னிடம் அவர் அந்தஸ்திற்குரியவராக இல்லாவிட்டால் அவரை கஷ்டப்படுத்தி இருப்பேன் என மலக்குல் மவ்த் கூறினார்.

(அஹ்மத்: 10484)

வாதம் : 3

பொதுவாக நபிமார்களுக்கு அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் வாழ்வு, மரணம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இறைவன் வழங்குகிறான.

“உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன்

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி( 4435)

எனவே மூஸா (அலை) அவர்களுக்கும் அல்லாஹ் அவருக்கென்று உள்ள உரிமையை வழங்குகிறான். ஆனால் வந்தவர் வானவர் என்பதை அறியாத காரணத்தாலும் வந்த வானவர் “உமது இறைவனுக்கு பதிலளி” என்று சொன்ன காரணத்தாலும் மூஸா அலை) வேறு யாரோ என்று நினைத்து அடித்து விட்டார்கள்.

இவை தான் இந்த ஹதீஸை நியாயப்படுத்த இவர்கள் முன்வைக்கும் வாதங்கள்.

வாதங்கள் நியாயமானவையா?

நம்பகமான அறிவிப்பாளர்களின் வழியாக ஒரு செய்தி வந்து, அது திருமறைக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக இருக்குமானால் அதற்கு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சரியான விளக்கம் கொடுப்பது தவறில்லை. அந்த மாற்று விளக்கம் சரியாக இருந்தால் அதை நாம்தான் முதலில் ஏற்றுக் கொள்வோம். ஆனால் மாற்று விளக்கமே இன்னும் சில அடிப்படைகளுக்கு முரண்படுமானால் அதை எவ்வாறு ஏற்று கொள்ள இயலும்? அந்த அடிப்படையில்தான் குறிப்பிட்ட செய்திக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கமும் அமைந்துள்ளது.

அவர்களின் முதல் வாதம்

நபி மூஸா (அலை) அவர்கள் கோபக் காரராகவும் நிதானமற்றவராகவும் இருந்ததால் தான் வானவர்களை அடித்தார்கள் என்று வாதிக்கிறார்கள்.

இந்த வாதம் நபிமார்களுக்குரிய நற்பண்புகளை இழிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. விளக்கம் சொல்கிறேன் என்ற பெயரில் இவர்கள் கொடுக்கும் விளக்கம் “மூஸா (அலை) அவர்களை முரடராகச் சித்தரிக்கின்றது. மூஸா (அலை) அவர்கள் அறியாமைக் காலத்தில் செய்த ஒரு தவறை ஆதாரமாக வைத்து அவர்களுக்கு முரடர் பட்டத்தை கொடுப்பது நியாயமா?

மூஸா (அலை) அவர்கள்  தம்முடைய சமூகம் வழிகேட்டிற்குச் செல்லும் போது, அதற்க்கு பொறுப்பாளியாக இருந்த ஹாரூனிடம் கோபப்படுகிறார்கள். இதை வைத்து கொண்டு மூஸா இயற்கையாகவே கோபப்படக்கூடியவர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நபிகளாரே இதுபோன்று பல இடங்களில் கோபப்பட்டுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் பார்த்தால் நபிகளாரின் இயற்கையான குணமும் கோபப்படுவதுதான் என்று சொல்வார்களா?

இதிலும் உச்சக்கட்டம் என்னவென்றால் மூஸா (அலை) அவர்களை பொறுமை இல்லாதவர்கள் என்று சொன்னதுதான். நபிகளார், மூஸா (அலை) அவர்களைப் பற்றி புகழ்ந்து சொன்ன ஒரு விசயத்தையே மறுத்துவிடுகிறார்கள்.

‘மூஸா(அலை) அவகளுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர்  புண்படுத்தப்பட்டார். இருப்பினும் அவர் (பொறுமையுடன்) சகித்துக் கொண்டார்” என்று கூறினாகள்.

அறிவிப்பவர்: அப்துல்லா பின் மாஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி (3405)

மூஸா (அலை) அவர்கள் ஒருவரைக் கொலை செய்தது, இருவர் சண்டையிட்டுக் கொண்ட சந்தர்ப்பத்தில். இந்த இடங்களில் கோபம் வருவது இயற்கையே.

ஹாரூன் (அலை) அவர்கள் மீது கோபம் கொண்டது, ஏகத்துவத்திற்கு மாற்றமாக இணை வைப்புக் கொள்கையில் மக்கள் சென்றதால்தான்.

இந்த இடங்கள் கோபம் ஏற்பட வாய்ப்புள்ளவை. இறைவனிடமிருந்து வந்த வானவர் ‘அல்லாஹ்வுக்குப் பதிலளி’ என்று சொன்னது எப்படி கோபத்தை ஏற்படுத்தும்? இது அவ்வளவு கடுமையான வாசகமா? கோபத்தை ஏற்படுத்தும் சொல்லா?

நபி மூஸா (அலை) அவர்கள் கோபட்ட இரண்டு இடங்களும் தன்னைப் பற்றி விசாரித்ததற்காக அல்ல. மக்களில் உள்ள தவறுக்காகத் தான் என்பதை கவனதில் கொள்ள வேண்டும்.

இறைவன் நபிமார்களுக்கு இரண்டு வாய்ப்புகளைத் தருகிறான். எனவே அந்த வாய்ப்பை வானவர் தரவில்லை அதனால்தான் அடித்தார்கள் என்று அடுத்த வாதத்தை வைக்கிறார்கள்.

இரண்டு வாய்ப்புகள் உள்ள விசயத்தில் வானவர் அதைத் தரவில்லையென்றால் அதற்காக அவரை அடிக்க வேண்டுமா? அல்லது இறைவன் எனக்கு இரண்டு வாய்ப்புகள் தந்துள்ளான் என்று அவரிடம் சொல்ல வேண்டுமா? இறைவன் அனுப்பிய வானவரிடம் இவ்வாறு நடப்பது இறைவனை அவமதிப்பது போல் ஆகாதா?

இரண்டு வாய்ப்பு இருக்கும் போது அல்லாஹ் ஏன் வாய்ப்பளிக்காமல் வானவரை அனுப்பினான் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இந்தக் கேள்விக்குப் பதிலாக, வந்தவர் வானவர் என்று தெரியவில்லை. எனவேதான் மூஸா (அலை) அவர்கள் அடித்துவிட்டார். வானவர் என்று தெரிந்திருந்தால் அடித்திருக்க மாட்டார் என்று வாதம் சரியாக இருந்தால் வானவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்?

‘நீங்கள் தெரியாமல் அடித்துவிட்டீர்கள். நான் இறைவானால் அனுப்பப்ட்ட வானவர்’ என்று சொல்லியிருக்க வேண்டும். அதற்கு மூஸா (அலை) அவர்கள் ‘நான் இறைத்தூதர். எனக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நீர் எப்படி உயிரை தருமாறு கேட்கலாம்’ என்றுதான் பதில் இருந்திருக்க வேண்டும்.

இதே போன்று அவர்கள் எடுத்து காட்டக்கூடிய இப்ராஹீம் (அலை) அவர்களிடத்தில் மலக்குகள் மனித வடிவத்தில் வந்ததை இப்ராஹீம் (அலை) அவர்கள் அறியாத போது வானவர்கள் தங்களை யார் என்று தெளிவு படுத்துகிறார்கள்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸிலோ அல்லது அவர்கள் எடுத்துக் காட்டும் அஹ்மதில் வரக்கூடிய செய்தியிலோ மலக்குல் மவ்த் அடிவாங்கி, பிதுங்கிய கண்ணோடு இறைவனிடத்தில் ஓடுகிறார்.

அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் எதிலும் நியாயம் இல்லை. வலிந்து சரிசெய்ய வேண்டும் என்பதற்காகச் சில வாதங்களை வைத்திருக்கிறார்கள். அவை திருக்குர்ஆனின் வசனங்களுக்கு மாற்றமாகவும், ஏற்கும் வகையில் இல்லாமலும் இருக்கிறது.

திருக்குர்ஆனுக்கு முரணில்லாமல் நியாயமான முறையில் இந்தச் செய்தியை விளக்கினால் நாமும் ஏற்கத் தயாராகவே இருக்கிறோம்.