மூஸா நபியின் கப்ர் தொழுகை
மூஸா நபியின் கப்ர் தொழுகை
எல்லாம் வல்ல அல்லாஹ் அல்குர்ஆனைப் பற்றிக் குறிப்பிடுகையில்,
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தான் தனது அடியார் மீது இவ்வேதத்தை நேரானதாகவும், தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு “அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள்” என நற்செய்தி கூறுவதற்காகவும், “அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளினான்.
என்று சிறப்பித்துக் கூறுகின்றான். பின்வரும் வசனத்திலும் குர்ஆனை கோணலற்றது என்று வர்ணிக்கின்றான்.
அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)
ஆனால் பரேலவிகள் எனப்படும் சமாதி வழிபாட்டுச் சிந்தனையாளர்கள், குர்ஆனை கோணலாகவே பார்க்கின்றார்கள்.
அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள், அவன் தான் என்றென்றும் உயிருள்ளவன் என்று நாம் கூறுகின்ற போது இறந்து போன அவ்லியாக்களும் உயிருடன் இருக்கின்றார்கள் என்கின்றார்கள். ஆதாரம் என்ன? என்று கேட்டால் “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்’ (அல்குர்ஆன்: 2:154) ➚ என்ற வசனத்தையும், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்’ (அல்குர்ஆன்: 3:169) ➚ என்ற வசனத்தையும் காட்டுகின்றார்கள்.
ஆனால் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் பொதுவாக நாம் புரிந்து கொள்ளும் அர்த்தத்தில் இங்கே பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இது கூட அல்லாஹ்வின் பாதையில் உயிரைத் தியாகம் செய்த ஷஹீத்கள் எனும் உயிர்தியாகிகளுக்கான சிறப்புத்தகுதி என்பதையும் இருட்டடிப்பு செய்வார்கள். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவாக விளக்குகின்றார்கள்.
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்’ (அல்குர்ஆன்: 3:169) ➚ எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷுஹதாக்களின் இந்த ஹதீஸைத் தான் கடத்தல் செய்து, இறந்து போன நல்லடியார்களுக்குக் கொண்டு போய் பொருத்துகின்றார்கள். இது ஷஹீத்களுக்குரிய ஹதீஸ் ஆயிற்றே? இதை எப்படி இறந்து விட்ட மற்ற நல்லடியார்களுக்குக் கொண்டு போய் சேர்க்க முடியும்? என்று கேட்டால் அவர்கள் சொல்கின்ற பதில் இதோ:
ஷுஹதாக்கள் தங்களுடைய இன்னுயிரை போர்க்களத்தில் மாய்த்ததைப் போன்று இந்த நல்லடியார்கள் அல்லாஹ்வை வணங்குவதில் தங்களை மாய்த்தவர்கள். எனவே இவர்களும் உயிருள்ளவர்கள். இதன் அடிப்படையில் இறந்து போன நல்லடியார்கள் உயிருடன் வாழ்கின்றார்கள். அதனால் அவர்களிடம் நமது கோரிக்கையை முன்வைத்து கேட்கலாம், துஆச் செய்யலாம் என்று சொல்கின்றார்கள்.
இறந்து போன நல்லடியார்களை ஷஹீத்கள் பட்டியலில் இவர்கள் சேர்த்தாலும் அது இவர்களின் குருட்டு நம்பிக்கையை நியாயப்படுத்த உதவாது. ஏனெனில் சொர்க்கத்தில் பறவை வடிவில் அவர்கள் உண்டு களித்து இருப்பார்கள் என்பது தான் உயிரோடு உள்ளார்கள் என்பதன் விளக்கம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கிவிட்டதால் அவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதை அந்த நல்லடியார்கள் கவனிக்காமல் இன்பத்தில் திளைத்து இருப்பார்கள்.
மேலும் ஒருவரை நல்லடியார் என்று நாம் முடிவு செய்ய முடியாது என்பதையும் இவர்கள் மக்களிடமிருந்து மறைக்கிறார்கள்.
அல்குர்ஆனின் நேரிய வழி
அல்குர்ஆன் தெளிவாக, நேரடியாகச் சொல்வதும், கட்டளையிடுதும் என்ன?
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
அல்லாஹ் தன்னிடமே நேரடியாக உதவி தேடும்படி நமக்கு இந்த வசனத்தின் மூலம் கற்றுத் தருகின்றான்.
“என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
இந்த வசனத்திலும் அல்லாஹ் தன்னிடமே கேட்க வேண்டும் என்று அடியார்களுக்கு உத்தரவிடுகின்றான்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)
இதிலும் அடியார்கள் தன்னிடமே கேட்க வேண்டும் என்று கூறுகின்றான். தான் என்றென்றும் உயிருள்ளவன், நிர்வாகம் செய்து கொண்டிருப்பவன் என்று தன்னுடைய ஆற்றலையும் தெளிவுபடுத்துகின்றான். இப்படி உயிருள்ள ஒருவனிடம் நேரடியாகக் கேட்பதை விட்டு விட்டு இறந்து போனவர்களிடம் கேட்பதற்காக என்னென்ன குறுக்கு வழிகளை, கோணல்வழிகளைக் கையாளுகின்றார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோணல் புத்தியும் குறுக்கு வழியும்
யூத, கிறித்தவர்கள் இப்படித்தான் குறுக்கு வழியைக் கையாண்டார்கள். நேரிய வழியை விட்டும் மக்களைத் தடுத்தார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
“வேதமுடையோரே! நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்? தெரிந்து கொண்டே அதைக் கோணலா(ன மார்க்கமா)கச் சித்தரிக்கின்றீர்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அதைக் கோணலாகச் சித்தரிக்கின்றனர். அவர்களே மறுமையை மறுப்பவர்கள்.
இந்த பரேலவிசப் பேர்வழிகள் இத்தகைய பிரிவைச் சார்ந்தவர்கள் தான். யூத, கிறித்தவர்கள் செய்த அதே வேலையைத் தான் இவர்களும் செய்கின்றார்கள். இவர்களின் இந்தக் குறுக்கு வழிகளில் உள்ள ஒன்று தான் மூஸா நபி உயிருடன் இருக்கின்றார் என்ற வாதமும், அதற்காக அவர்கள் சமர்ப்பிக்கின்ற ஆதாரமும். அந்த ஆதாரம் என்ன? முஸ்லிமில் இடம் பெறக்கூடிய பின்வரும் செய்திதான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தின் போது நடந்த இந்த நிகழ்வை ஆதாரமாகக் காட்டி, மூஸா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள், எனவே நபிமார்களை, நல்லடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்று கூறுகின்றார்கள்.
இவ்வாறு கூறுகின்ற இந்தப் பரேலவிகள் யாரும் மூஸா நபியை அழைத்துப் பிரார்த்திப்பதில்லை. அது போல நூஹ், ஹூத், ஸாலிஹ், இப்றாஹீம் போன்ற நபிமார்களை அழைப்பதில்லை. மாறாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்து நீண்ட காலத்திற்குப் பிறகு தோன்றி மறைந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஹ்யித்தீன், ஷாகுல் ஹமீது போன்ற அடியார்களைத் தான் அழைக்கின்றார்கள். இவர்களின் நோக்கம் மூஸா நபியின் இந்த ஹதீஸை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இவர்களாக நல்லடியார்கள் பட்டம் கொடுத்துக் கொண்டவர்களை அழைப்பது தான்.
நபிமார்களை அழைப்பது இவர்களது நோக்கமல்ல. குறைந்த பட்சம் அவர்கள் நபிமார்களை அழைத்தாலாவது ஓரளவுக்குத் தங்கள் வாதத்தில் சரியாக இருக்கின்றார்கள் என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு இவர்கள் அழைப்பது கிடையாது. இதன் மூலம் அவர்கள் குறுக்கு வழியிலும் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இப்போது அவர்கள் காட்டுகின்ற மூஸா நபியின் கப்ர் தொழுகை ஹதீஸைப் பார்ப்போம்.
மூஸா நபி தனது கப்ரில் தொழுது கொண்டிருப்பதை நபிகள் நாயகம் கண்டது உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது. மிஃராஜ் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியை அவர்களது கப்ரில் மட்டும் காணவில்லை. அவர்களைப் பல இடங்களில் காணுகின்றார்கள். அவற்றை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பைத்துல் முகத்தஸில் மூஸா நபி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
மண்வெளியில் மூஸா நபி
நபிகள் நாயகம் அவர்களுக்கு இதற்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர்.
விண்வெளியில் மூஸா நபி
அங்கிருந்து விண்வெளிக்கு செல்லும் போது மூஸா அங்கேயும் நபியைப் பார்க்கின்றார்கள்.
அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வாவனர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை “ஸம்ஸம்” தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் “ஈமான்” எனும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழையபடியே நெஞ்சை) மூடிவிட்டார்கள்.
பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், “திறங்கள்” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், “யார் இவர்?” எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அவர், “உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா?” எனக் கேட்டார். அவர்கள், “ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், “(அவரை அழைத்துவரச் சொல்-) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் “ஆம்” என்று கூறினார்கள்.
(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “இவர் யார்?” எனக் கேட்டேன்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம்மக்களைப்) பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் “திறங்கள்” என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தபின்) அவர் கதவைத் திறந்தார்.
அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
“நபி (ஸல்) அவர்கள், வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் தங்கியிருந்த இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன?” என்பது பற்றி அவர்கள் (என்னிடம்) குறிப்பிட்டுக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் தொடர்கிறார்கள்:
“என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் இத்ரீஸ்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், “நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜீப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்கள் தாம் மூசா” என்று பதிலளித்தார்கள்.
நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் “நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக!” என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜிப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர்தாம் ஈசா” என்று பதிலளித்தார்கள்.
பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், “நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் இப்ராஹீம்” என்று கூறினார்கள்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்-ம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறிவந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும்) மேலே ஏறிச் சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் விதிகளை பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுது கோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
(புகாரி: 349)(ஹதீஸின் ஒரு பகுதி)
திரும்பும் போது ஒரு சந்திப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர் மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களை கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், “உங்களிடம் உங்கள் சமுதாயத்தாருக்காக அல்லாஹ் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள்.
நான், (என் சமுதாயத்தார் மீது) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்” என்று பதிலளித்தேன். அவர்கள், “அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும்படி சொ)ல்லுங்கள்! ஏனெனில் உங்கள் சமுதாயத்தாரால் அதைத் தாங்க முடியாது” என்று கூறினார்கள்.
உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கேட்டபோது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் நான் திரும்பிச்சென்று “அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்து விட்டான்” என்று சொன்னபோது மீண்டும் அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்).
ஏனெனில், இதையும் உங்கள் சமூதாயத்தாரால் தாங்க முடியாது” என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் திரும்பிச் சென்று (இறுதியில்) “இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும் (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்த சொல் (இனி) மாற்றப்படாது” என்று கூறிவிட்டான்.
உடனே நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்றார்கள். நான், “என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்” என்று சொன்னேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) “சித்ரத்துல் முன்தஹா”வுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பல வண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு என்னை சொர்க்கத்துக்குள் பிரவேசிக்கச் செய்யப்பட்டது. அங்கே முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.
(புகாரி: 349)(ஹதீஸின் ஒரு பகுதி)
இது எதைக் காட்டுகின்றது? நபி மூஸா (அலை) அவர்கள் மண்ணுலகில் கப்ரில் மட்டும் தொழுது கொண்டிருக்கவில்லை. மாறாக விண்ணுலகில் நபி (ஸல்) அவர்கள் வரவேற்கவும் செய்கின்றார்கள், வழியனுப்பவும் செய்கின்றார்கள். மூஸா நபியின் பாத்திரம் கப்ரில் மாத்திரம் அடங்கி இருக்கவில்லை. விண்ணுலகு வரை விரிந்திருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.
ஈஸா நபியுடன் சந்திப்பு
மேலே இடம் பெற்ற ஹதீஸில் நபிகள் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகிய நபிமார்களைச் சந்திக்கின்றார்கள். இதில் ஈஸா நபியைத் தவிர மற்ற எல்லா நபிமார்களும் இறந்தவர்கள். ஈஸா நபியவர்கள் வானத்தில் தான் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களையும் சேர்த்தே நபியவர்கள் பார்த்திருக்கின்றார்கள். சந்தித்திருக்கின்றார்கள்.
பிலால் (ரலி) அவர்களுடன் சந்திப்பு
நபி (ஸல்) அவர்கள் நபிமார்களை மட்டும் பார்க்கவில்லை. சுவனத்தில் பிலால் (ரலி) அவர்களின் நடமாட்டத்தையும் காண்கின்றார்கள்.
ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.
அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ)செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இங்கு நாம் கவனிக்க வேண்டியது நபி (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் போது, “நான் உலகில் தானே இருக்கின்றேன். சுவனத்திற்கு எப்படி வந்திப்பேன்’ என்று பிலால் (ரலி) கேட்கவில்லை. அப்படியானால் இதன் பொருள் என்ன?
பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை அங்கு காட்டுகின்றான். இறந்தவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்று இந்தப் பரேலவிகள் நம்புவதைப் போன்று, உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களாக ஆகிவிடுவார்களா? ஒரு போதும் இல்லை. இங்கு நாம் காணவேண்டியது அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலைத் தான்.
பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை சுவனத்தில் நடமாட விடுவது போன்று, இறந்தவர்களை மிஃராஜின் போது எழுப்பிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றான். அதாவது எடுத்துக் காட்டியிருக்கின்றான். இந்த அற்புதம் தான் இதிலிருந்து நாம் அறிய வேண்டிய விஷயமும் படிப்பினையுமாகும்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், ஒருவர் சுவனத்திற்குச் செல்ல வேண்டுமானால் அவர் இறந்து, மறுமை நாளில் அவர் எழுப்பப்பட்டு, விசாரணை முடிந்து தான் சுவனத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் பிலால் (ரலி) முந்தியே சென்றிருக்கின்றாரே! எப்படி? இது எடுத்துக்காட்டப்பட்ட நிகழ்வு!
சுவனத்தில் உளூச் செய்யும் உமர் (ரலி) மனைவி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த போது அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூ செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீலிடம்), “இந்த அரண்மனை யாருக்குரியது?’ என்று கேட்டேன்.
அவர், “உமர் அவர்களுக்குரியது’ என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, “தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.
கியாமத் நாள் ஏற்பட்டு சுவனத்தில் நுழைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சுவனத்து மனைவியைப் பார்த்தது எப்படி?
ருமைசாவின் பிரவேசம்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, “யார் அது?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), “இவர் பிலால்’ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், “இது யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், (வானவர்), “இது உமருடையது’ என்று சொன்னார்.
ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்” என்று கேட்டார்கள்.
பூமியில் உள்ள அபூதல்ஹாவின் மனைவியை சுவனத்தில் எப்படிப் பார்க்க முடிந்தது?
நபி (ஸல்) கண்ட நரகக் காட்சிகள்
இதுபோல் நபி (ஸல்) அவர்கள் நரகத்திலும் சில காட்சிகளைக் கண்டார்கள். நரகம் எப்போது? மறுமை நாள் வந்து, கேள்வி கணக்கு விசாரணை முடிந்த பின்னர் தீயவர்கள் போய்ச் சேருமிடம் தான் நரகம். அந்த நரகத்தின் காட்சிகளை நபி (ஸல்) அவர்கள் முன்னரே கண்டார்கள்.
விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும் மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரயீலே! இவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
இந்தக் காட்சியும் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது தான்.
பெண்கள் நிறைந்த நரகம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் சுவனத்தில் அதிகமான ஏழைகளைக் கண்டதாகவும், நரகத்தில் அதிகமான பெண்களைக் கண்டதாகவும் இந்த ஹதீஸில் பார்க்கிறோம். பின்னால் நடக்கப்போகும் ஓர் உண்மையை அல்லாஹ் தனது தூதருக்கு இங்கு காட்சியாகக் காட்டியிருக்கின்றான் என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
தஜ்ஜாலின் காட்சி
இவை நபி (ஸல்) அவர்கள் சுவனத்திலும் நரகத்திலும் கண்ட சில காட்சிகளாகும். இவையல்லாமல் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலையும் நரகத்தின் காவலர் மாலிக்கையும் பார்க்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை “ஷனூஆ‘ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன்.
நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இவை அனைத்தும் பின்னால் நிகழவிருக்கும் நிகழ்வுகளையும், இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்படக்கூடிய ஆட்களையும் தன் திருத்தூதருக்கு அல்லாஹ் காட்சியாக எடுத்துக் காட்டியனவாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் தூதருக்கு இவ்வாறு மிஃராஜ் போன்று நேரிலும் எடுத்துக் காட்டுவான். கனவிலும் எடுத்துக் காட்டுவான். இது அவனுடைய மாபெரும் ஆற்றலுக்குரிய அத்தாட்சியாகும்.
ஆதம் நபி அவர்களைப் படைத்து, அவர்களிடமிருந்து தோன்றப் போகும் அனைத்து சந்ததிகளையும் அவர்களிடமே எடுத்துக் காட்டுகிறான்.
இதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். “நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)
ஆதம் நபி உருவானதிலிருந்து இறுதி நாளில் மரணிக்கவிருக்கும் மனித சந்ததி அத்தனை பேரும் அல்லாஹ்வின் முன்னிலையில் சாட்சியம் அளித்திருக்கின்றனர். நாமும் அளித்திருக்கின்றோம். ஆனால் இது நமக்கு நினைவில் இல்லை. இப்படி அல்லாஹ் பின்னால் நடக்கவுள்ளதை முன்னாலேயே தனது தூதர்களுக்கு ஒரு டிரையலாக எடுத்துக் காட்டுகிறான்.
ஒரு பொறியாளர் தான் கட்டவிருக்கும் மாபெரும் மாளிகையின் மாதிரியை முதலில் தனது ஆட்களுக்குச் செய்து காட்டி விடுகின்றார். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.
எனவே மிஃராஜ் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு நிகழ்வாகும். இதை வைத்துக் கொண்டு மூஸா நபியவர்கள், இவர்கள் சித்தரித்துக் காட்டுகின்ற அர்த்தத்தில் உயிருடன் உள்ளார்கள் என்பது தவறாகும்.