மூடநம்பிக்கையால் பலியான பாகன்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

மூடநம்பிக்கையால் பலியான பாகன்

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மஸ்னி, பழம் கொடுத்து ஆசி வாங்க வந்த ஒரு பெண்ணை துதிக்கையால் தள்ளி விட்டதோடு மதம் பிடித்த யானையை அடக்க வந்த பாகன் கஜேந்திரன் என்பவரை உதைத்துக் கொன்றதோடு, பக்தர்களையும் தாக்க முயன்றது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடும் போது கீழே விழுந்ததில் பலர் காயமுற்றனர். இது குறித்து தமிழக மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். யானை என்பது காட்டு விலங்கு. இது காட்டில் இருக்க வேண்டுமே தவிர யானையைப் பிடித்து கொண்டு நாட்டில் வளர்க்கக் கூடாது.

முன்பு சர்க்கஸ்களில் யானை வளர்க்கப் பட்டு வந்தது. இந்த சர்க்கஸ் யானை மதம் பிடித்து மனிதர்களைத் தாக்கியதாக எந்த செய்தியும் இல்லை. ஆனாலும் தமிழக அரசு சர்க்கஸ்களில் யானையை வளர்க்க தடை செய்து, இப்போது சர்க்கஸ்களில் யானை பயன்படுத்தப்படுவது கிடையாது. இப்படி சர்க்கஸ் யானைக்கு தடை விதித்த போதே கோவில் யானைக்கும் தடை விதித்திருந்தால் இப்போது இந்த அசம்பாவித சம்பவமே நடந்திருக்காது. சர்க்கஸ் யானை மனிதர்களுக்கு மத்தியில் நடமாடியது கிடையாது.

ஆனால் கோவில் யானை மனிதர்கள் புடைசூழ நடந்து வருகிறது. காலை, மாலையில் கடை மற்றும் வீடுகளில் அது பிச்சையெடுக்கவும் செய்கிறது. இந்நிலையில் அந்த யானைக்கு மதம் பிடித்தால் மனிதர்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படவே செய்யும். அந்த பாதிப்பு தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏற்பட்டுள்ளது. திருவிழாவில் யானையை பயன்படுத்த வேண்டும் என நினைப்பது ஒரு மூடநம்பிக்கையாகும். இந்த மூடநம்பிக்கை தான் இவ்வளவு களேபரங்களுக்கும் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.

யானை ஐந்தறிவு பிராணி. இந்த ஐந்தறிவு பிராணியிடம் ஆசி வாங்க வேண்டும் என ஆறறிவு படைத்த மனிதன் நினைக்கலாமா? யானையிடம் ஆசி வாங்கினால் என்ன நன்மை நடந்து விடும். ஆசி வாங்கா விட்டால் என்ன தீமை ஏற்பட்டு விடும். இதை மனிதன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்திட வேண்டாமா? முதலில் ஆசி கொடுக்கிறோம் என அந்த யானைக்கு தெரியுமா? யானையிடம் ஆசி வாங்கினால் நல்லது என்று நினைத்து ஆசி வாங்கிய பெண்ணை யானை தும்பிக்கையால் தள்ளி விட்டுள்ளது. இதன் மூலம் யானையிடம் ஆசி பெறுவது பாதகத்தை தான் ஏற்படுத்தும். நன்மையை ஏற்படுத்தாது என அறிய வேண்டாமா?

சிலர் யானையின் மூக்கில் தண்ணீரை ஊற்றி, அதை தங்கள் மீது அடிக்கச் சொல்கிறார்கள். யானை மூக்குச் சளி கலந்த நீரை தான் பீச்சுகிறது என இவர்களுக்குத் தெரிய வேண்டாமா? இது எவ்வளவு அசிங்கம். மனிதனிடம் மூடநம்பிக்கை இருப்பதால் இந்த அசிங்கம் கூட தெரிவதில்லை. இப்படி யானையைக் கொண்டு மூடநம்பிக்கைக்கு மேல் மூடநம்பிக்கையை வளர்த்துக் கொண்டதால் தான் பாகன் கஜேந்திரன் தனது உயிரை மாய்த்துள்ளான் என்பதை மக்கள் அறிய வேண்டும். மூடநம்பிக்கை என்பது சாதாரணமான ஒன்றல்ல.

அது மனிதனின் உயிரையும் எடுத்து விடும் என்பதை இப்போதாவது மக்கள் அறிந்து, அந்த மூடநம்பிக்கையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். மக்கள் மூடநம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அதை அகற்றுவது அரசின் பொறுப்பு என தமிழக அரசு நினைக்க வேண்டும். இந்தப் பொறுப்பு தனக்கு இருப்பதாக தமிழக அரசு நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் சர்க்கஸில் யானையை பயன்படுத்த தடை விதித்த போதே கோவில்களிலும் யானையை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்து,

அதன் மூலம் இப்போது பாகன் கஜேந்திரனின் உயிரை காத்திருக்கும். இதைச் செய்ய தமிழக அரசு தவறி விட்டது. பாகன் கஜேந்திரனின் மரணம் இயற்கையானதல்ல. மாறாக இது திட்டமிட்ட படுகொலை என்று தான் சொல்ல வேண்டும். எனவே இது மாதிரியான படுகொலைகள் இனி நடக்காது இருக்க கோவில் விழாக்களில் யானைகளை பயன்படுத்த தமிழக அரசு உடனே தடை விதிக்க வேண்டும் என தமிழக மக்கள் கோருகிறார்கள். தமிழக மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனே ஏற்று, மனித உயிர்ப் பலிகளை தடுக்க வேண்டும். தடுக்குமா?

 

Source : unarvu ( 01/6/18 )