முஹம்மது என்று பெயர் வையுங்கள்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

சுவனத்தில் நுழைந்து கொள்

  1. மறுமை நாளில் இறைவன் மனிதப் படைப்பைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் பெயரான முஹம்மத் என்ற பெயரை யார் வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் சுவனத்தில் நுழைந்து கொள்ளுங்கள் என்று கூறுவான்.

(ஹதீஸே குத்ஸி) 

2. மேலும் யாருடைய வீட்டில் முஹம்மத் என்ற பெயர் இருக்கின்றதோ அந்த வீட்டில் வறுமை உண்டாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

3. அல்லாஹ்வின் முன்னிலையில் இரண்டு அடியார்கள் நிறுத்தப்படுவார்கள்.இவ்விருவரையும் நோக்கி சுவனத்திற்குச் செல்லுங்கள் என்று அவன் சொல்வான். “எங்கள் இறைவா! நாங்கள் சுவனத்தில் நுழைவதற்கு என்ன தகுதி இருக்கின்றது? சுவனத்தை எங்களுக்குக் கூலியாக நீ அளிப்பதற்கு நாங்கள் எந்த ஒரு அமலையும்செய்யவில்லையே!” என்று கேட்பார்கள். “என்னுடைய இவ்விரு அடியார்களையும்(சுவனத்தில்) நுழையுங்கள். அஹ்மது, முஹம்மது பெயரைக் கொண்டவர்கள் நரகத்தில் நுழையலாகாது என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன்” என்று அல்லாஹ்சொல்கின்றான்.

இப்படி சில பொய்யான செய்திகள், ஹதீஸ் குத்ஸீ என்ற பெயரில் நூற்களிலும் ஆலிம்களின் நாவுகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றது.

இமாம் சுயூத்தி, தமது நூலான அல்லஆலீ மஸ்னுஅத் ஃபில் அஹாதீஸில் மவ்லூஆத்(புனையப்பட்ட பொன்மணிகளில் இணைக்கப்பட்ட போலி முத்துக்கள்) என்ற நூலில்பதிவு செய்து இந்தச் செய்தியை இனம் காட்டுகின்றார்.

இதில் உள்ள அபாயமும் ஆபத்தும் இதை அறிவிக்கின்ற இப்னு புகைர் என்பவரின் ஆசிரியரிடத்தில் அடங்கியிருக்கின்றது. அவர் பெயர் அஹ்மத் பின் அப்துல்லாஹ் தர்ராஃ. இவர் ஒரு பொய்யர். இதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பாளர் ஸதகா பின் மூஸா என்பவர் நம்பத்தகுந்தவர் அல்லர்; செய்திகளில் புரட்டு செய்பவர் என்று தஹபீ அவர்கள் குறிப்பிட்டதாக இமாம் சுயூத்தி குறிப்பிடுகின்றார்கள்.

முஹம்மது என்று பெயர் வைப்பதைச் சிறப்பித்து நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வருகின்ற ஹதீஸ்கள் எதுவுமே உருப்படியானதல்ல. அவற்றில் எதுவும் சரியான ஹதீஸ் அல்ல என்ற கருத்தில் அபூஹாத்தம் அர்ராஸி, இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கய்யூம் ஆகிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.