முஸ்லிம்களில் சிலர் ஒரு முஸ்லிமை கொன்ற போது…
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது:
ஒரு மனிதர் தனது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். (தப்பிப்பதற்காக வேண்டுமென்றே சலாம் கூறத் தெரியாமல் கூறுகிறார் என்று எண்ணி) அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது ஆட்டுமந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
”இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறை வழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறை நம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள். (4:94) (இங்கே உலகப் பொருள் என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.22
அறிவிப்பாளர் அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இந்த வசனத்தில் சலாம் எனும் வார்த்தையை) சலாம் என்றே ஓதினார்கள். (சலம் என்று உச்சரிக்கவில்லை.)