முஷ்ரிக்களுடன் பழகும் முறை
முஷ்ரிக்களுடன் பழகும் முறை
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம்.
ஏகத்துவத்திற்காக தனது தந்தையையே பகைத்துக் கொண்ட இப்ராஹீம் நபியை பின்பற்றச் சொல்லும் இறைவன், முஷ்ரிக்களுடன் பழகும் முறையைப் பற்றியும் நமக்கு கற்றுத் தருகிறான்.
ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)
அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.
وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ قَالَ اِنِّىْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَمِنْ ذُرِّيَّتِىْ ؕ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 2:124) ➚
அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?
தனிமை! இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு! ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.
இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார்.
(பார்க்க(அல்குர்ஆன்: 21:51-70) ➚
இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!
இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க(அல்குர்ஆன்: 29:26) ➚
நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.
பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.
குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க(அல்குர்ஆன்: 37:99-107) ➚
இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்! இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள்.
அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.
وَمَنْ اَحْسَنُ دِيْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِيْمَ خَلِيْلًا
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன்: 4:125) ➚
இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை – அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான். இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.
ثُمَّ اَوْحَيْنَاۤ اِلَيْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.
நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.
قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ؕ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ
“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை)
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன்: 9:114) ➚
இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான். ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர். முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள். இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு – நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான்.
وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ ۚ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன்: 18:28) ➚
மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் இஸ்லாத்திற்கு வந்து எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான். இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.
இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.
أُنْزِلَ : {عَبَسَ وَتَوَلَّى} فِي ابْنِ أُمِّ مَكْتُومٍ الأَعْمَى ، أَتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَقُولُ : يَا رَسُولَ اللهِ أَرْشِدْنِي ، وَعِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ عُظَمَاءِ الْمُشْرِكِينَ ، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرِضُ عَنْهُ وَيُقْبِلُ عَلَى الآخَرِ ، وَيَقُولُ : أَتَرَى بِمَا أَقُولُ بَأْسًا ؟ فَيَقُولُ : لاَ ، فَفِي هَذَا أُنْزِلَ.
هَذَا حَدِيثٌ غَرِيبٌ.
وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : أُنْزِلَ عَبَسَ وَتَوَلَّى فِي ابْنِ أُمِّ مَكْتُومٍ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَائِشَةَ.
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.
ஆதாரம் : திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா – 4848
عَبَسَ وَتَوَلّٰٓىۙ فَاَنْتَ عَنْهُ تَلَهّٰىۚ
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல்குர்ஆன்: 80:1-10) ➚
நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான். ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.
ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை. இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான். அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.
அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன்: 60:8) ➚,9)
இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை. ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.