முன்னொரு காலத்தில்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். 

முந்தைய காலத்தில் நடைப்பெற்ற சில நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் சில வலராற்று செய்திகளை இந்த உரையில் காண்போம்..

முற்காலத்தில் இரண்டு பெண்கள் சண்டையிட்ட தொடர்பான செய்தி
كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ صَاحِبَتُهَا: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، وَقَالَتِ الأُخْرَى: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ فَأَخْبَرَتَاهُ، فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا، فَقَالَتِ الصُّغْرَى: لاَ تَفْعَلْ يَرْحَمُكَ اللَّهُ، هُوَ ابْنُهَا، فَقَضَى بِهِ لِلصُّغْرَى
قَالَ أَبُو هُرَيْرَةَ: وَاللَّهِ إِنْ سَمِعْتُ بِالسِّكِّينِ إِلَّا يَوْمَئِذٍ، وَمَا كُنَّا نَقُولُ إِلَّا المُدْيَةُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது’ என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது’ என்று கூறினாள்.

எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர்.

அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், ‘என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்’ என்று கூறினார்கள். அப்போது இளையவள், ‘அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்’ என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் ‘அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள்.

அபூஹுரைரா (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்று தான் (கத்திக்கு) ‘சிக்கீன்’ என்னும் சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) ‘முத்யா என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்’ என்று கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 3427) 

முந்தைய காலத்தில் பனூ இஸ்ராயீலில் இருவர் தங்களுடைய பொருளை விட்டு கொடுப்பதற்காக சண்டையிடும் செய்தி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை’ என்று கூறினார்.

நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘நிலத்தை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)’ என்று கூறினார்.

(இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்’ என்று கூறினார். மற்றொருவர், ‘எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது’ என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், ‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்’ என்று தீர்ப்பளித்தார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 3472) 

முற்கால இறைதூதரின் நிலைமை
اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ، فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى العَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ، فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى العَقَارَ: خُذْ ذَهَبَكَ مِنِّي، إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ، وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ، وَقَالَ الَّذِي لَهُ الأَرْضُ: إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا، فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ، فَقَالَ: الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ: أَلَكُمَا وَلَدٌ؟ قَالَ أَحَدُهُمَا: لِي غُلاَمٌ، وَقَالَ الآخَرُ: لِي جَارِيَةٌ، قَالَ: أَنْكِحُوا الغُلاَمَ الجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا

(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. ‘அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள்.

அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, ‘இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : (புகாரி: 3477) 

பூனையை வேதனை செய்ததால் நரகம் சென்ற பெண்
عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ، فَدَخَلَتْ فِيهَا النَّارَ، لاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ سَقَتْهَا، إِذْ حَبَسَتْهَا، وَلاَ هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)
நூல் : (புகாரி: 3482) 

தன் கீழங்கியை கீழ் தொங்கவிட்டவனின் மறுமை நிலை
بَيْنَمَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ مِنَ الخُيَلاَءِ، خُسِفَ بِهِ، فَهُوَ يَتَجَلْجَلُ فِي الأَرْضِ إِلَى يَوْمِ القِيَامَةِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன் காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது (பூமி பிளந்து, அதில்) அவன் புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல் : (புகாரி: 3485) 

தற்பெருமையுடன் நடை பயணம் செய்தவனின் நிலை
بَيْنَمَا رَجُلٌ يَمْشِي فِي حُلَّةٍ، تُعْجِبُهُ نَفْسُهُ، مُرَجِّلٌ جُمَّتَهُ، إِذْ خَسَفَ اللَّهُ بِهِ، فَهُوَ يَتَجَلْجَلُ إِلَى يَوْمِ القِيَامَةِ

நபி (ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல் காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்து கொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 5789) 

பனூ இஸ்ராயீல்களிடையே வாழ்ந்த தொழுநோயாளி, குருடர், வழுக்கைத் தலையர் ஆகியோர் தொடர்பான நிகழ்ச்சி

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும், (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும், (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்’ என்று கூறினார்.

உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அவரைவிட்டுச் அந்த வியாதி சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், ‘எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடு தான்… (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)’ என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், ‘இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்’ என்று கூறினார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்’ என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், ‘எச்செல்வம் உனக்கு விருப்பமானது?’ என்று கேட்டார். அவர், ‘மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்’ என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, ‘இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்’ என்று கூறினார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், ‘உனக்கு எச்செல்வம் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த இருவரும் (ஒட்டகம் வழங்கப்பட்டவரும், மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈன்றிட பெற்றனர். இவர் (ஆடு வழங்கப்பட்டவர்) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன்.

அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்’ என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், ‘(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)’ என்றார். உடனே அவ்வானவர், ‘உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?’ என்று கேட்டதற்கு அவன், ‘(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்’ என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், ‘நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்’ என்று கூறினார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், ‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்’ என்று கூறினார்.

பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, ‘நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்’ என்று சொன்னார்.

(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ‘நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்’ என்று கூறினார்.

உடனே அவ்வானவர், ‘உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்’ என்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 3464) 

நீர் புகட்டுவதின் சிறப்பு (மற்றும் அதற்கான பிரதிபலன்)
بَيْنَا رَجُلٌ  يَمْشِي، فَاشْتَدَّ عَلَيْهِ العَطَشُ، فَنَزَلَ بِئْرًا، فَشَرِبَ مِنْهَا، ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَشِ، فَقَالَ: لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ “، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي البَهَائِمِ أَجْرًا؟ قَالَ: «فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»

ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்’ என்று எண்ணிக் கொண்டார்.

உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 2363) 

بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ، كَادَ يَقْتُلُهُ العَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ فَغُفِرَ لَهَا بِهِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 3467)

தர்மம் செய்தவருக்கு நிச்சயம் நற்பலன் உண்டு; உரியவரின் கைக்கு தர்மம் போய்ச் சேராவிட்டாலும் சரியே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒருவர் “நான் இன்றிரவு தர்மம் செய்யப் போகிறேன்” எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்” என்று கூறினார்.

மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், “ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர். (இதைக்கேட்ட) அவர், “இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்” என்று கூறினார்.

(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது” என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், “இறைவா! விபச்சாரிக்கும், பணக்காரனுக்கும், திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது” எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது:

உமது தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 1856) 

முற்காலத்தில் ஒரு தாயும், பிள்ளையும் கேட்ட பிரார்த்தனை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் சென்ற ஒருவன் அவளைக் கடந்து சென்றான். அப்பெண், ‘இறைவா! இவனைப் போல் என் மகன் ஆகும் வரை அவனுக்கு நீ மரணத்தைத் தராதே’ என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை, ‘இறைவா! என்னை இவனைப் போல் ஆக்கி விடாதே’ என்று பிரார்த்தித்தது. பிறகு திரும்பச் சென்று (அவளுடைய) மார்பில் பால் குடிக்கலானது.

பிறகு (தரையில்) இழுபட்டுக் கொண்டே வந்த ஒரு பெண் அவளைக் கடந்து சென்றாள். அவளைப் பிறர் கேலி செய்து விளையாட்டுப் பொருளாக நடத்திக் கொண்டிருந்தனர். (தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண், ‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே’ என்று பிரார்த்தித்தாள். உடனே அக்குழந்தை, ‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு’ என்று பிரார்த்தித்து.

பிறகு அது, ‘வாகனத்தில் சென்றவன் இறைமறுப்பாளன் ஆவான். இந்தப் பெண்ணோ, இவளைப் பற்றி மக்கள் ‘இவள் விபசாரம் செய்கிறாள்’ என்று (அபாண்டமாகக்) கூறுகிறார்கள். ஆனால், இவள், ‘எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள். அவர்கள், ‘இவள் திருடுகிறாள்’ என்று (அவதூறாகக்) கூறுகிறார்கள். இவள், ‘எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள்’ என்று ((அக்குழந்தை) சொல்லிற்று.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4986) (3466) 

முற்காலத்தில் ஒருவர் தான் கடன் கொடுத்தவரின் நிலைமை அறிந்து கண்டு கொள்ள வேண்டாம் என்றார்
كَانَ رَجُلٌ يُدَايِنُ النَّاسَ، فَكَانَ يَقُولُ لِفَتَاهُ: إِذَا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللهَ يَتَجَاوَزُ عَنَّا، فَلَقِيَ اللهَ فَتَجَاوَزَ عَنْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் சென்ற)தம் ஊழியரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீர் சென்றால் (அவரைக் கண்டுகொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து)விடு. அல்லாஹ்வும் நம்மை(க் கண்டுகொள்ளாமல்) மன்னித்துவிடக்கூடும்” என்று சொல்லி வந்தார். அவர் (இறந்த பின்) அல்லாஹ்வைச் சந்தித்தபோது (அவருடைய பிழைகளைப் பொறுத்து) அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 3183) 

முற்காலத்தில் ஒருவர் தன்னை அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்று கூறிய செய்தி
أَنَّ رَجُلًا قَالَ: وَاللهِ لَا يَغْفِرُ اللهُ لِفُلَانٍ، وَإِنَّ اللهَ تَعَالَى قَالَ: مَنْ ذَا الَّذِي يَتَأَلَّى عَلَيَّ أَنْ لَا أَغْفِرَ لِفُلَانٍ، فَإِنِّي قَدْ غَفَرْتُ لِفُلَانٍ، وَأَحْبَطْتُ عَمَلَكَ ” أَوْ كَمَا قَالَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” என்று கூறினார். அல்லாஹ், “இன்ன மனிதனை நான் மன்னிக்கமாட்டேன் என என்மீது சத்தியமிட்டுச் சொன்னவன் யார்? நான் அந்த மனிதனை மன்னித்துவிட்டேன். உன் நல்லறங்களை அழித்துவிட்டேன்” என்றோ, அதைப் போன்றோ கூறினான்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5115)

எனவே மேற்கண்ட அணைத்து நிகழ்வையும் நம் வாழ்வில் பாடமாக எடுத்துக் கொண்டு வாழ்வோமாக.! அல்லாஹ் அப்படிப்பட்ட நன்மக்களாய் நம்மை ஆக்கி அருள் புரிவனாக..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.