1) முன்னுரை
முன்னுரை
இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறும் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஜகாத் எனும் கடமை அமைந்துள்ளது.
ஜகாத்தை வலியுறுத்தும் ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன.
ஜகாத் கட்டாயக் கடமை என்பதில் முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லாவிட்டாலும் ஜகாத் உட்பிரிவுச் சட்டங்கள் பலவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
* எந்தெந்த பொருட்களில் ஜகாத் கடமையாகும்?
* தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஜகாத் கடமையில் விதிவிலக்கு உள்ளதா?
* குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை ஜகாத்திலிருந்து விதிவிலக்கு பெறுமா?
* அழுகும் பொருட்கள் மற்றும் இதர விளை பொருட்களில் எவற்றுக்கு ஜகாத் உண்டு?
என்பன போன்ற பல்வேறு சட்டங்களில் அறிஞர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவை திறந்த மனதுடன் தான் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுக் கருத்துடையவர்களை இஸ்லாத்தின் விரோதிகளாகப் பார்க்கும் மனப் போக்கு இருந்ததில்லை.
திருக்குர்ஆனையும், நபிவழியையும் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ‘சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் எத்தனை காலம் நடைமுறையில் இருந்தாலும் அது திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் அமைந்துள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் கடமையும் உரிமையும் உண்டு’ என வலியுறுத்தி வருகின்றது.
அந்த அடிப்படையில் தான், ‘ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா?’ என்பதையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.
இவ்வாறு ஆய்வு செய்த போது தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியில் ஆரம்பத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக அறிஞர்கள் மத்தியில் பல்வேறு அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
ஒவ்வொரு கருத்துடையவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆதாரமும், ஒவ்வொரு வாதமும் திறந்த மனதுடன் பரிசீலனை செய்யப்பட்டன.
இறுதியாக, கடந்த 29.08.2005 அன்று கடையநல்லூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ‘ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது கடமையில்லை’ என்ற கருத்து தான் சரியானது என அனைத்து அறிஞர்களும் ஒத்த கருத்துக்கு வந்தனர்.
அந்த அமர்வில் பி. ஜைனுல் ஆபிதீன், மவ்லவி எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா, மவ்லவி எம். ஷம்சுல்லுஹா, மவ்லவி எம்.ஐ. சுலைமான், மவ்லவி எம்.எஸ். சுலைமான், மவ்லவி பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானி, எஸ். கலீல் ரசூல், பி. அன்வர் பாஷா, மவ்லவி எஸ்.ஏ. பஷீர் அஹ்மத் உமரி, மவ்லவி யூசுஃப் ஃபைஜி, மவ்லவி ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி, மவ்லவி கே. அப்துந்நாஸிர், மவ்லவி ஆர். ரஹ்மத்துல்லாஹ், ஏ. ஸய்யது இப்ராஹீம், மவ்லவி எம்.எம். ஸைபுல்லாஹ், மவ்லவி எஸ்.எம். அப்பாஸ், மவ்லவி எஸ். அப்பாஸ் அலீ ஆகியோர் பங்கு கொண்டனர்.
ஒரு தடவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுப்பது அவசியமில்லை என்பது தான் சரியான கருத்து என்றாலும் இந்தக் கருத்தை எடுத்து வைக்கும் போது சில அறிஞர்கள் எடுத்து வைத்த சில வாதங்களும், ஆதாரங்களும் ஏற்புடையதல்ல என்றும் அந்த அமர்வில் சுட்டிக் காட்டப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தவறான இத்தகைய வாதங்களை இனி மேல் எடுத்துக் கூறக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தவிர்க்கப்பட்ட ஆதாரங்கள்
*ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பவர்கள் ஏழையாகி விடுவர்’ என்பன போன்ற காரணங்களைக் கூறக் கூடாது.
*’ஒருவருக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை அப்பொருளுக்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன; ஆயினும் ஒரேயொரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமாக உள்ளது’ என்று சில அறிஞர்கள் கூறி வந்தனர். ஆனால் ஆய்வின் இறுதியில் அந்த ஒரு ஹதீஸும் பலமானது அல்ல என்பது தான் சரியான நிலை என்றும் முடிவு செய்யப்பட்டது.
* ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்ற முடிவின் காரணமாக ஜகாத் கடமையான அனைவரும் ஜகாத் கொடுப்பார்கள் என்ற வாதத்தையும் எடுத்து வைக்கக் கூடாது.
இவ்வாறு அனைவரும் முடிவு செய்தனர்.
அனைவரும் ஒப்புக் கொண்ட ஆதாரங்களையும், வாதங்களையும் தான் நூல் வடிவில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
இது குறித்து விமர்சனங்களையும், கருத்துக்களையும் வரவேற்கிறோம். – நபீலா பதிப்பகம்
நூல் ஆசிரியர் : பீ.ஜெய்னுல் ஆபிதீன்