02) முன்னுரை
இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்தது’ என்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.
எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் கவனிக்கிறது!
அதில் தலையிடுகிறது!
தக்க தீர்வையும் சொல்கிறது!
அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது!
என்றெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள்.
இத்தகையவர்களின் ஐயங்களைத் தர்க்க ரீதியாகவும், அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நீக்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
ஏனெனில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.
எனவே, இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நூலைத் தயாரித்துள்ளேன்.
ஏனைய குற்றச் சாட்டுக்களுக்கான விளக்கங்கள் மற்ற இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
பெண்கள் குறித்து இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இந்த பாகத்தை வாசிப்பவர்கள் விடை காணலாம்.
மூன்று பாகங்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் உரிய விளக்கத்தைப் பெறலாம்.
முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்கள் விலக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்நூலை எழுதியுள்ளேன். அந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
P.ஜைனுல் ஆபிதீன்