01) முன்னுரை

நூல்கள்: நபித் தோழர்களும் நமது நிலையும்

நபித் தோழர்களும் நமது நிலையும்

நபித்தோழர்கள் என்போர் யார்?
நபித்தோழர்களின் சிறப்புகள்
வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது
வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்
குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டு நிலைகள்
வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
வஹீக்கு முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள்
மாற்றாரின் வாதங்கள்
சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?
முன்னுரை

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில்லை என்பதை நாம் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அல்லாஹ்வின் கூற்றையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் தவிர எவரது நடவடிக்கைகளையும் மார்க்க ஆதாரமாகக் கொள்ளக் கூடாது எனவும், எவ்வளவு பெரிய மேதையானாலும் நபித் தோழர்களேயானாலும் அவர்களின் கூற்றுகளும், செயல்களும் கூட மார்க்க ஆதாரமாக முடியாது எனவும் தெளிவுபடக் கூறி வருகிறோம்.

ஆதாரங்களையும், காரணங்களையும் எடுத்துக் காட்டியே நாம் இவ்வாறு கூறி வருகிறோம். ஆயினும் சிலர் நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைச் சிந்திக்காமல் நபித் தோழர்களை நாம் அவமதித்து விட்டதாக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நபித் தோழர்களின் சிறப்புகளைப் பேசும் குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் எடுத்துக்காட்டி இத்தகைய சிறப்பு வாய்ந்த நபித் தோழர்களை நாம் அவமதிப்பதாக அவதூறு கூறுகின்றனர்.

நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தைக் கூறாத சில வசனங்களுக்கு தவறான விளக்கம் கூறியும், இட்டுக்கட்டப்பட்ட அல்லது பலவீனமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டியும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது கட்டாயக் கடமை என்பது போல் பிரச்சாரம் செய்து மக்களை வழிகெடுத்து வருகின்றனர்.

நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தையும் ஏற்பது அவசியம் இல்லை என்று இது வரை உலகில் யாரும் சொல்லவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் இக்கருத்தை முதன் முதலாகக் கூற ஆரம்பித்துள்ளனர் எனவும் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

எனவே இவர்களுக்கும், இவர்களின் பிரச்சாரத்தை உண்மையென நம்பும் மக்களுக்கும் இது பற்றி தெளிவான விளக்கம் அளிக்கும் அவசியம் நமக்கு ஏற்பட்டது.

* நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தையும் வணக்க வழிபாடுகளுக்கு ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்பதற்கான ஆதாரங்கள். மற்றவர்களைப் போலவே நபித்தோழர்களும் பல சந்தர்ப்பங்களில் தவறான முடிவுகள் எடுத்துள்ளனர் என்பதற்கான சான்றுகள்.

* நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவது அவர்களை அவமதிப்பதாக ஆகாது என்பதற்கான காரணங்கள்.

* நபித்தோழர்கள் தவறான முடிவுகள் எடுத்தார்கள் என்று கூறுவதால் அவர்களைப் பற்றி அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய சிறப்புகளைப் பாதிக்காது என்பதற்குரிய விளக்கம்.

* நமக்கு முன்னரே மதிப்புமிக்க அறிஞர்கள் இக்கொள்கையை மிகவும் உறுதியாக முழங்கியுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள்.

ஆகியவற்றைத் திரட்டி இந்நூலைத் தயாரித்துள்ளோம்.

பாரமட்சமற்ற பார்வையுடன் இந்நூலை வாசிப்பவர்கள் இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆனும், நபிவழியும் மட்டுமே என்பதை இன்ஷா அல்லாஹ் சந்தேகமற அறிந்து கொள்வார்கள் என்பது எனது நம்பிக்கை.

இந்த நம்பிக்கையை இறைவன் உண்மையாக்கிட அவனிடமே இறைஞ்சுகிறேன்.

அன்புடன் பீ. ஜைனுல் ஆபிதீன்