1) முன்னுரை
அறிமுகம்
தொப்பி அணிவது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடையாளம் என இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.
தொழுகை நோன்பு போன்ற வணக்கம் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ தாடி போன்ற வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ அதைப் பெரிதுபடுத்தாத முஸ்லிம்கள், ஒருவர் தொப்பி அணியத் தவறினால் அதைப் பெரிதுபடுத்துவதைக் காண முடிகிறது. தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில் தொப்பி அணியாதவர் பள்ளிவாசலில் தொழ அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிப்பு பலகையே வைத்துள்ளதைக் காண முடிகிறது.
எல்லா நேரத்திலும் தொப்பி அணியாவிட்டாலும் தொழுகை, திருமணம், மற்றும் இஸ்லாமியப் பொது நிகழ்ச்சிகளில் கட்டாயம் தொப்பி அவசியம் என்று கருதப்படுகிறது. சில ஊர்களில் சினிமாவுக்குச் சென்றாலும் சூதாட்டத்தில் இறங்கினாலும் கூட தொப்பி அணிந்தே காட்சி தருவதையும் காண முடிகிறது.
இஸ்லாத்தின் முதன்மையான அடையாளமாக இந்திய முஸ்லிம்களால் கருதப்படும் தொப்பி குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கூறுகிறார்கள்? தொப்பிக்கு இந்திய முஸ்லிம்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு ஆதாரம் உள்ளதா? என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூலை வெளியிடுகிறோம்.
தொப்பி அவசியம் எனக் கூறுவோரும் அவசியம் இல்லை எனக் கூறுவோரும் தமது வாதத்தை நிலை நாட்ட எடுத்து வைக்கும் ஆதாரங்கள் யாவை? இவற்றில் எந்தக் கருத்து சரியானது? என்பதை முழுமையாக விளக்கும் ஆய்வு நூலாக இது அமைந்துள்ளது.
தொப்பி குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை தக்க சான்றுகளுடன் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இது போதுமான நூலாகும் என்பது எங்களின் நம்பிக்கை. – நபீலா பதிப்பகம்
நூல் ஆசிரியர் : பீ.ஜெய்னுல் ஆபிதீன்
தொப்பி ஓர் ஆய்வு
முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்வதற்கு தொப்பி முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. தொப்பியே இஸ்லாத்தின் அடையாளம் என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிச் செயல்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை விட தொப்பி முஸ்லிம்களிடம் முதலிடம் பெற்று வருகிறது.
முஸ்லிம்கள் நடத்தும் நிழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முஸ்லிமல்லாத அரசியல் தலைவர்களும் தொப்பி அணிந்து முஸ்லிம்களைக் கவர முயற்சிப்பதையும் நாம் பார்க்கிறோம். முஸ்லிமல்லாதவர்கள் கூட தொப்பி தான் இஸ்லாத்தின் அடையாளம் என்று கருதும் அளவுக்கு இந்தக் கருத்து ஆழமாக வேரூன்றி விட்டது.
குறிப்பாக தொழுகை நேரங்களில் ஒருவரிடம் தொப்பி இல்லையென்றால் அவர் தொழுவதற்குத் தகுதியற்றவர் என்று பொது மக்களும் ஆலிம்களும் எண்ணுகின்றனர். எனவே பல பள்ளிவாசல்களில் “தொப்பி அணியாமல் தொழக் கூடாது!’ என்ற கடுமையான வாசகம் பள்ளிவாசலின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் சில பள்ளிவாசல்களில் ரெடிமேட் தொப்பிகள் வாங்கி வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொப்பிக்கு அல்லாஹ் முக்கியத்துவம் கொடுத்துள்ளானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? இதற்கு ஆதாரங்கள் உண்டா? என்பதைக் காண்போம்.