1) முன்னுரை
பீ.ஜைனுல் ஆபிதீன்
- அமீருக்குக் கட்டுப்படுவதன் அவசியம்
- அமீர் என்றால் யார்
- ஒரு நாட்டில் பல அமீர்கள் இருக்க முடியுமா
- அதிகாரமில்லாதவர் அமீர் என்று அழைக்கப்படலாமா
- இந்திய முஸ்லிம்களுக்கு அல்லது தமிழக மூஸ்லிம்களுக்கு அமீர் யார்
- தலமைப் பதவியின் வகைகள்
- இயக்கங்களின் தலைவர்கள் அமீர்கள் அல்லர்
- இந்தியாவில் யாரும் அமீர்கள் அல்லர்
என்பன போன்ற விஷயங்கள் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன
இஸ்லாத்தின் பெயரால் உலகில் ஏராளமான இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்களில் பெரும்பாலானவை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானவையாக இருந்த போதும் அந்த இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அந்த இயக்கங்களில் இருந்து விடுபடுவதற்கும், விலகுவதற்கும் தயங்குகின்றனர்.break]
காரணம் இயக்கத்தின் தலைவர் அமீர் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இஸ்லாத்தில் அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளதால் தான் சார்ந்துள்ள இயக்கம் தவறான இயக்கம் என்பது தெரிந்த பின்னும், தன் தலைவர் தவறான தலைவர் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னும் அதில் இருந்து விலக ஒருவர் தயங்குகிறார். இது அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற மார்க்கக் கடமையை மீறியதாக ஆகி அல்லாஹ்விடம் நாம் குற்றவாளியாக நேருமோ என்று அவர் அஞ்சுகிறார்.
மக்களிடம் காணப்படும் அமீர் பற்றிய இந்த அறியாமை தான் இஸ்லாத்தின் பெயரில் இயக்கம் நடத்துவோரின் ஒரே மூலதனமாக உள்ளது. தங்களின் தவறான கொள்கை குறித்து தங்களின் தொண்டர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு கேள்வி கேட்கும் நிலையோ எதிர் விமர்சனம் செய்யும் நிலையோ ஏற்படும் போதெல்லாம் அவர்களை வாயடைக்கச் செய்ய இவர்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது தான். நான் அமீர் ஆக இருக்கிறேன். அமீருக்குக் கட்டுப்படுவது மார்க்கக் கடமை. எனவே என்னை எதிர்ப்பதோ, கேள்வி கேட்பதோ என்னை விட்டு விலகுவதோ மாபெரும் பாவம் என்று தொண்டன் மிரட்டப்படுகிறான்.
அமீரிடம் எத்தகைய தவறுகளைக் கண்டாலும் அமீரிடம் இருந்து ஒருவன் விலகுவதற்கு அனுமதி இல்லை என்று மூளைச் சலவை செய்யப்படுகிறான். இதனால் தான் தவறான பல இயக்கங்கள் உயிர் பிழைத்துள்ளன.
தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, அஹ்லே ஹதீஸ், ஜிஹாத் என்ற பெயரில் ரகசிய இயக்கம் நடத்தும் விடியல் கும்பல், கிலாஃபத் என்ற பெயரில் கள்ள இயக்கம் நடத்துவோர் ஆகிய அனைவரும் அமீருக்குக் கட்டுப்படுதல் என்பதைத் தான் கவசமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
நாங்கள் உருவாக்கிய ஜாக் என்ற அமைப்பிலும் அமீர் என்ற சித்தாந்தம் உள்ளது. அதை நாமும் ஏற்றிருந்தோம். அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் எனக் கூறி தலைமைக்கு எதிராக நடப்பவர்களை நாமும் எச்சரித்தது உண்டு. காரணம் நாமும் அமீருக்குக் கட்டுப்படுவதைப் பற்றி இவர்கள் விளங்கியது போல் தான் விளங்கி இருந்தோம்.
இந்த நிலையில் ஜாக் இயக்கம் குர்ஆன் ஹதீஸுக்கு முரணாக பல நிலைபாட்டை எடுத்த போது தான் எங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான கருத்தைச் சொல்லும் போது கூட எதிர்க்கக் கூடாது என்று மார்க்கம் சொல்லுமா? அமீருக்குக் கட்டுப்படுதல் எனக் கூறி தீமையையும் அநியாயத்தையும் தட்டிக் கேட்பதை இஸ்லாம் தடுக்காது என்று எங்கள் மனசாட்சிக்கு தெரிந்தாலும் அமீருக்குக் கட்டுப்படுவது குறித்த ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானவையாகவும் இருந்தன.
எனவே நாம் புரிந்து கொண்டதில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது.
எனவே அமீருக்குக் கட்டுப்படுதல் குறித்து இன்றைக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள மூத்த அறிஞர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் கூடி அமீர் குறித்து பல ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினோம்.
அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அது போல் இந்த நாட்டில் உள்ள எந்தத் தலைவரும் அமீர் கிடையாது என்பதும் உண்மையை என்பதை அப்போது தான் நாங்கள் அறிந்து கொண்டோம்.
அமீருக்குக் கட்டுப்படுவதற்கு மட்டும் அமீர் குறித்த ஆதாரங்களைத் தேடும் நாம் அமீர் என்றால் யார் என்பதற்கும் குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரத்தைத் தேடி இருந்தால் இது போன்ற மோசடி அமீர்களின் பிடியில் இருந்து விடுபட்டிருக்கலாமே என்றும் மக்களையும் விடுவிக்கலாமே என்றும் அப்போது தான் எங்களுக்குப் புரிந்தது.
எனவே இது குறித்து விரிவாக அய்வு நூல் எழுத வேண்டும் என்று அந்த அறிஞர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமீர் ஓர் ஆய்வு என்ற நூலை எழுதி வெளியிட்டோம்.
அந்த நூல் வெளியான பின்னர் தான் ஜாக் இயக்கத்தின் தீய கொள்கைகளால் மனம் வெறுத்து அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற காரணத்தால் அமைதி காத்தவர்களும் சகித்துக் கொண்டு மன வெறுப்புடன் அந்த இயக்கத்தில் ஒட்டிக் கொண்டிருந்தவர்களும் அதில் இருந்து பெருமளவில் விடுபட்டனர்.
அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற போர்வையில் தலைவர்களின் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயங்கிய பல சகோதரர்கள் அநியாயத்துக்கு எதிராகக் களம் இறங்கினார்கள். ஜாக் போதையில் இருந்து விடுபடலானார்கள்.
ஆனாலும் மற்ற இயக்கங்களில் அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது, தலைவர்களின் தவறுகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க நினைப்பவர்களுக்கு இன்றும் தடையாக இருக்கத் தான் செய்கிறது.
எனவே ஏற்கனவே வெளியிட்ட அமீர் ஓர் ஆய்வு எனும் நூலை அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு என்று பெயர் மாற்றம் செய்து தேவையான பல விஷயங்களைச் சேர்த்தும் தேவையில்லாதவற்றை நீக்கியும் இந்த நூலை மீண்டும் வெளியிடுகிறோம். அன்புடன். பீ.ஜைனுல் ஆபிதீன்
இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் ஏராளமான கட்சிகள், இயக்கங்கள், அமைப்புக்கள், கழகங்கள், மற்றும் சங்கங்கள் எனப் பல்வேறு பெயர்களில் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் இன்றைய ஜனநாயக மரபுப்படி தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற அடிப்படையில் செயல் படக்கூடிய அமைப்புக்களும் உள்ளன. வெறும் தலைவரை மட்டும் வைத்துச் செயல்படும் அமைப்புக்களும் உள்ளன.
இந்த அமைப்புக்களில் ஒரு உறுப்பினர் தங்கள் தலைவருக்குக் கட்டுப்பட மறுத்து விட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள். அதைச் சகித்துக் கொண்டு அந்த உறுப்பினர் அந்த அமைப்பில் நீடிப்பார், அல்லது விலகி விடுவார். ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் ஒருவர் திருந்தவில்லை என்றால் அவர் அந்த அமைப்பில் இருந்து நீக்கப்படுவார். இவையெல்லாம் அந்தந்த அமைப்புக்கள் கொண்டிருக்கும் நிர்வாக சுதந்திரம். இத்தகைய இயக்கங்கள் தங்களுக்குக் கட்டுப்படுவது மார்க்கக் கடமை எனக் கூறுவதில்லை. இதன் தலைவர்கள் அமீர் என்று அழைக்கப்படுவதும் இல்லை. ஆகவே இந்த அமைப்புகள் இந்த ஆய்வுக்குள் அடங்காது.
வேறு சில அமைப்புக்கள் உள்ளன. இந்த அமைப்புக்கள் தம்மை இஸ்லாமிய அமைப்புக்கள் என வாதிடுகின்றன. இவ்வமைப்புக்களின் தலைவருக்குக் கட்டுப்படுதலை மார்க்கத்தின் கடமைகளில் ஒன்று எனவும், அவ்வாறு கட்டுப்படாதவர் மார்க்கத்தை விட்டே வெளியேறி விடுவார் எனவும் கூறுகின்றன.
அமீருக்குக் கட்டுப்படுதலை வலியுறுத்துகின்ற குர்ஆன் வசனங்களையும், நபி மொழிகளையும் இவ்வமைப்புக்கள் தங்களின் வாதத்திற்குச் சான்றாக எடுத்து வைக்கின்றன. எனவே திருக்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் அமீர் மற்றும் அமீருக்குக் கட்டுப்படுதல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் முழுமையாக நாம் ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். எனவே அமீர் பற்றிய எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.