முகஸ்துதி ஒரு புற்று நோய்
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
மனிதர்களுடைய மறுமை வாழ்வின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதற்கான பரீட்சைக் கூடமே இவ்வுலக வாழ்க்கை.. இவ்வுலகில் இறைவன் வகுத்துத் தந்த வழியில் செயல்பட்டு அவன் சொன்ன நற்காரியங்களைப் புரிந்து நன்மைகளை அவர்கள் சேகரிக்க வேண்டும்.
அவர்கள் சேகரிக்கும் நன்மையினால் கிடைக்கப் பெறும் இறையருளால் மட்டுமே வெற்றிக்கனியான சுவனத்தைப் பெற இயலும். அத்தகைய நன்மையான காரியங்களைப் புரிவதற்கு முன்னால் நாம் நம்முடைய மனதில் அடித்தளமிட வேண்டிய இக்லாஸ் எனும் அஸ்திவாரத்தைச் சரியாக அமைக்க வேண்டும்.
அவ்வாறு அமைக்கவில்லையென்றால், உடலில் புற்று ஏற்பட்டால் அது எப்படி செல்களை அழித்து ஒழித்துவிடுகிறதோ அது போன்று உள்ளத்தில் முகஸ்துதி எனும் புற்று நோய் ஏற்பட்டு நமது நன்மைகளை அரித்து விடும்.
அவற்றிலிருந்து நம்மை நாம் பாத்துக்கொள்ள இஸ்லாம் சில வழிமுறைகளை நமக்கு எடுத்துரைக்கின்றது. அவற்றை இந்த உரையில் நாம் காண்போம்.
இஸ்லாத்தில் நாம் எந்த நற்காரியத்தைப் புரிவதாக இருந்தாலும் “இதை நான் என் இறைவனுக்காக, அவனிடம் கூலி பெறுவதற்காகவே புரிகிறேன்’’ என்ற உறுதியான எண்ணம் கொள்வதே இக்லாஸ் ஆகும்.
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
நாம் நற்காரியங்களைப் புரிகின்ற போது நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வை மட்டும் முன்னிறுத்த வேண்டும். அதில் எந்தக் கலப்படமோ கலங்கலோ இருக்கக் கூடாது. ஏனெனில், நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அந்தக் காரியத்தின் உடல் உழைப்பையோ பொருளாதார இழப்பையோ அல்லாஹ் பார்ப்பது கிடையாது. உள்ளத்தையே பார்க்கின்றான்.
உள்ளத்தில் கொண்டிருக்கின்ற தூய எண்ணத்திற்குத் தான் இறைவனிடத்தில் கூலி வழங்கப்படுகிறதே தவிர வெளித்தோற்றத்திற்கு வழங்கப்படுவதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும், செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 5012)
மேலும், ஹிஜ்ரத் – நாடு துறத்தல் – போன்ற இஸ்லாத்தின் தலைசிறந்த காரியங்களைச் செய்தாலும் கூட அதைச் செய்கின்ற போது நாம் அல்லாஹ்விற்காக அக்காரியத்தைச் செய்திருந்தால் அல்லாஹ்விடத்தில் அதற்கான கூலி கிடைக்கும். அவ்வாறில்லாமல் உலக நோக்கத்திற்காக நமது செயல் அமைந்திருந்தால் நாம் நாடியது மட்டுமே கிடைக்குமே தவிர இறையருள் கிடைக்கப்பெறாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடுதுறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
(புகாரி: 1)
ஆக, நாம் என்ன காரியத்தைச் செய்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல; நாம் கொண்டிருக்கிற எண்ணம் எப்படி அமைந்துள்ளது என்பது அதைவிட முக்கியமான அம்சமாக இருக்கிறது. உதாரணமாக, ஒருவர் கோடி ரூபாயை தர்மம் செய்கிறார். ஆனால் அவரது உள்ளத்தில் பெருமையும், பகட்டும் கலந்து இக்லாஸிற்கு வேட்டு வைத்திருக்கிறது.
மற்றொருவர், வெறும் ஒரு ரூபாய் மட்டும் தர்மம் செய்கிறார். இவரது உள்ளமோ இக்லாஸை ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறது. இப்போது, இறைவனிடத்தில் இந்த ஒரு ரூபாய்க்கு அந்த ஒரு கோடி ரூபாய் சமமாகாது.
நற்காரியத்தைப் புரிபவர்களின் எண்ணத்தின் தூய்மைதான் முக்கியமே தவிர எண்ணிக்கை முக்கியமல்ல. எனவே, இக்லாஸ் எனும் அஸ்திவாரத்தை நம்முடைய உள்ளத்தில் ஆழப் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
ரியா – முகஸ்துதி – என்பது இக்லாஸிற்கு நேர் எதிரான எண்ணமாகும்.
நற்காரியங்கள் புரிகின்ற போது எண்ணத்தில் அல்லாஹ்வை மட்டும் முன்னிறுத்துவது இக்லாஸ் என்றால், நான் ஒரு காரியத்தைச் செய்ததற்காக மக்கள் என்னைப் புகழ வேண்டும் என்றும், அனைவரின் கவனமும் என்னை நோக்கித் திரும்ப வேண்டும், என் பெயர் மக்களின் நாவில் ஒலிக்க வேண்டும் என்றும் ஒருவன் விரும்புகிறான் எனில் அதுவே முகஸ்துதியாகும்.
நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்விற்காக மட்டும் செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் அதில் மற்றவர்களைக் கூட்டாக்கினால் அது அல்லாஹ்விற்கு இணைவைக்கின்ற காரியமாகிவிடும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.
அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் முகஸ்துதியை சிறிய இணைவைப்பு என்று குறிப்பிட்டார்கள்.
“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)
(அஹ்மத்: 23630, 22528)
உடலில் ஏற்படும் கேன்சர் எனும் புற்றுநோய் அதன் செல்களை அழித்து மரணம் எனும் படுகுழியில் தள்ளுகிறது. அதுபோல், எண்ணத்தில் ஏற்படும் குறையினால் முகஸ்துதி எனும் புற்றுநோய் ஏற்பட்டு நன்மைகளை அழித்து நரகம் எனும் படுகுழியில் நம்மை வீழ்த்திவிடும்.
ஒருவர் முகஸ்துதிக்காக ஒரு காரியத்தைச் செய்கிறபோது அவருக்கு இறைவனிடத்தில் எந்தக் கூலியும் கிடைக்காது. முகஸ்துதி அவரது நன்மைகளை அழித்துவிடும் என்பது மேற்கூறிய அஹ்மத் ஹதீஸின் மூலம் தெளிவாகிறது.
நாம் ஒரு முதலாளியிடம் தொழிலாளியாக வேலை செய்கிறோம் என்றால் நாம் அவருக்காக வேலை செய்தால்தான் அவர் நமக்குக் கூலி கொடுப்பார். நாம் அவருக்காகச் செய்ய வேண்டிய வேலையை வேறொருவனுக்குச் செய்து முடித்துவிட்டு, எனக்கான கூலியை கொடுங்கள் என்று கேட்டால் நம்மை இந்த உலகம் பைத்தியக்காரன் என்றே அழைக்கும்.
அது போன்றே இவ்வுலகில் முகஸ்துதிக்காக நற்காரியத்தைப் புரிந்தவர்கள், எங்களுக்கான கூலி கொடு இறைவா! என்று அல்லாஹ்விடம் வந்து நிற்கும் போது நீ யாருக்காக உனது காரியத்தைச் செய்து முடித்தாயோ அவனிடம் சென்று கூலி பெற்றுக் கொள் என்று இறைவன் விரட்டிவிடுவான்.
அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர யாரிடம் சென்று கூலி பெற முடியும்??
இவ்வாறு எவ்வளவு நற்காரியம் புரிந்திருந்தாலும் முகஸ்துதி என்ற புற்றுக்கு இடம் கொடுத்துவிட்டால் அது அனைத்தையும் அரித்து நாசம் செய்துவிடும்.
தர்மம் என்பது அல்லாஹ்வினால் அதிகம் சிலாகித்துச் சொல்லப்பட்ட ஒரு நற்காரியம். தர்மம் செய்வோருக்கு அவர்கள் செய்த தர்மத்தை விடப் பன்மடங்கு கூலி உயர்த்தித் தரப்படும் என்று வாக்களிக்கின்றான்.
அதே காரியத்தை முகஸ்துதிக்காகப் புரிகின்ற போது வளர வேண்டிய தர்மம் வீழ்ந்துவிடும்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!
இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
தொழுகை என்பது இஸ்லாத்தின் ஐந்து அடிப்படையான காரியங்களில் ஒன்றாகும். தொழுகை, மறுமை வெற்றிக்கு நம்மை நெருக்கி அழைத்துச் செல்லக்கூடிய காரியங்களில் முதலாவது காரியமாகும்.
மேலும், தொழுகையினால் ஒரு புறம் நன்மையின் படித்தரம் உயரும். மறுபுறம் தீமைகளின் படித்தரம் குறையும்.
இத்தகைய சிறப்பு மிக்க இஸ்லாத்தின் முதன்மையான வணக்கத்தை ஒருவன் பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகச் செய்கிறான் எனில் அத்தொழுகை நம்மை நரகத்தின் அடித்தட்டுக்குச் சொந்தக்காரர்களான நயவஞ்சகர்களுக்கு ஒப்பாக்கி விடும்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்ற உள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.
தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தின் தகவல் பரிமாற்ற சாதனங்களில் ஒன்றாக விளங்குவது ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்கள். ஒரு தகவலை ஒரு நொடியில் உலகின் மூலை முடுக்கிற்கு எடுத்துச் செல்லும் இந்த வலைச் செயலிகளை வைத்து ஏகத்துவப் பிரச்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இத்தகைய அழைப்பு பணி காரியத்தைக் கூட முகஸ்துதிக்காக சிலர் முன்னெடுத்துச் செல்லும் நடைமுறையைப் பார்க்க முடிகிறது. மார்க்கம் தொடர்பான ஒரு பதிவைப் பதிந்து விட்டு, அதை எத்தனை நபர்கள் லைக் செய்கின்றனர், எத்தனை நபர்கள் பகிர்கின்றார்கள், எத்தனை பேர் நம்மைப் பாராட்டுகின்றனர் என்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு பார்க்கின்ற போது தான் பதிந்த பதிவை யாரும் லைக் செய்யவில்லையென்றால் உடனே அதை நீக்கியும் விடுகின்றனர். உண்மையில் மார்க்கப் பிரச்சாரத்திற்காகப் பதிந்திருந்தால் நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், சிலர் தன்னைப் பாராட்ட வேண்டும், “முகநூல் போராளி’’ என்று தன்னை மெச்ச வேண்டும், தான் பதியும் மார்க்கப் பதிவின் மூலம் தனது அறிவைப் புகழ வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் உலா வரக்கூடிய நபர்களை நாம் பார்க்கின்றோம்.
இப்படி அளவில்லா நன்மையைப் பெற்றுத் தரும் தஃவாவை முகஸ்துதிக்காகவும், தன் முகம் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கு மத்தியில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவும் முன்னெடுத்துச் சென்றால் அது நமது மறுமை இலக்கை அழித்து ஒழித்துவிடும்.
இவ்வாறு முகஸ்துதி என்பது பல பரிமாணங்களில் நமக்கு மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புற்றுநோய்க்கு உள்ளத்தில் இடமளித்தால் நமது நல்லறங்களை அது இல்லாமலாக்கிவிடும்.
இவ்வுலகில் யார் முகஸ்துதிக்காக நற்காரியங்கள் புரிந்தார்களோ அவர்களை இறைவன் மறுமை நாளில் அம்பலப்படுத்துவான்; அடையாளப்படுத்துவான்.
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி),
(புகாரி: 6499)
உலகில் வணக்கசாலி, அறிவுஜீவி, கொடை வள்ளல் என்பது போன்ற புகழுக்கு ஆசைப்பட்டு யார் நற்காரியம் புரிந்தார்களோ அவர்கள் இந்த அற்பப் புகழுக்கு ஆசைப்பட்டுத்தான் செய்தார்கள் என்று ஒட்டுமொத்த மக்களுக்கு முன்னிலையிலும் இறைவன் அம்பலப்படுத்தும் இழிநிலை தேவையா?
மேலும், முஃமின்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரும் பாக்கியம் என்னவென்றால், மறுமை நாளில் இறைவனின் கரண்டைக் கால் திறக்கப்பட்டு சிரம் பணிவதாகும். அப்போது முகஸ்துதிக்காக இவ்வுலகில் செயல்பட்டவர்களால் பணிய முடியாத இழிநிலை உருவாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்.
முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),
(புகாரி: 4919)
மேலும், ஒருவன் எத்தகைய உயரிய நற்காரியம் புரிந்திருந்தாலும் அதை முகஸ்துதிக்காக அவன் செய்திருந்தால் நரகில் முகம் குப்புற அவன் தள்ளப்படுவான்.
அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான்.
அதற்கு அவர் “நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன்” என்று கூறுவார். “நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப்படவேண்டும்” என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது’’ என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.
அடுத்து தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் “இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான்.
அதற்கு அவர் “நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன்’’ என்று பதில் சொல்வார். ‘‘நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது” என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.
அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், “நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய்?” என்று கேட்பான்.
அதற்கு அவர், ‘‘நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை’’ என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், “நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 3865, 3537)
ஷஹீத் என்பது இஸ்லாத்தில் ஆக உயர்ந்த நற்செயலாகும். கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும். மேலும், நேரடியாக சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் காரியம். மார்க்கக் கல்வி கற்பது சுவனத்தின் பாதையை லேசாக்கும் காரியம். தர்மங்கள் செய்வது நிலையான நன்மையைப் பெற்றுதரும் காரியம்.
இப்படி இஸ்லாத்தில் தலைசிறந்த மூன்று காரியங்களை இவர்கள் செய்திருந்தாலும் இவர்களின் நோக்கம் முகஸ்துதிக்காக இருந்தமையினால் நரகத்தில் தள்ளப்படுகின்றனர். எனவே, மறுமையை இலக்காகக் கொண்டு செயல்படும் நாம் இந்த உலகின் அற்பப் புகழ்ச்சிக்காக செயல்பட்டு நமது நன்மைகளை இழந்துவிடாமல் உளத்தூய்மையுடன் மட்டும் செயல்பட வேண்டும்.
குறிப்பாக, நிர்வாகிகளாகவும், தாயீக்களாகவும் இருப்பவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். நாம் நிர்வாகியாக இருந்து ஒரு பிரச்சனையைத் தீர்க்கும் போது நாம் தீர்த்த விதத்தைப் பார்த்து நம்மைப் புகழ்வர். அல்லது தாயீயாக இருந்து பிரச்சாரம் செய்யும் போது நமது பிரச்சாரத்தின் திறனைப் பார்த்துப் புகழ்வார்கள். அப்போது ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி நம்முடைய மறுமை வாழ்வை இழந்துவிடாமல் அல்ஹம்துலில்லாஹ் என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு பணிவுடன் செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அணைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.