மீண்டும் தலைதூக்கும் மதவாதம்
மீண்டும் தலைதூக்கும் மதவாதம்
பீஹார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட முஹம்மது பர்கர் ஆலம் (வயது 25) எனும் முஸ்லிம் இளைஞர், ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் ஜேக்கப் புரா பகுதியில் வசித்து வருகிறார். அந்தப் பகுதியிலுள்ள சர்தார் பஜாரில் தையல் கடையில் வேலை செய்யும் இவர், கடந்த மே மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு அருகில் இருந்த பள்ளிவாசலில் தொழுது விட்டு கடைக்குத் திரும்பும் போது அவரை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்துள்ளனர்.
தலையில் அணிந்திருக்கும் தொப்பியை கழற்றும் படி தாக்கியதோடு, ஜெய் ஸ்ரீராம் என்றும் பாரத மாதாக்கீ ஜே என்றும் சொல்லுமாறு அடித்தும் காலால் உதைத்தும் துன்புறுத்தி உள்ளனர். மேலும் பன்றி இறைச்சியை வாயில் திணித்து சாப்பிட வைத்திடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் போது அவருடைய சட்டையைக் கிழித்துத் தள்ளி விட்டுள்ளனர். அவருடைய அலறல் சத்தம் கேட்டு பள்ளிவாசலில் இருந்தும் அக்கம் பக்கத்தில் இருந்தும் ஆட்கள் வரவே அந்தக் குண்டர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.
இதில் படும்காயம் அடைந்த அந்த முஸ்லிம் இளைஞர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. மத வெறுப்புகளை தூண்டுவது, அச்சுறுத்தல் செய்வது போன்ற பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா மூலமாக குற்றவாளிகளைக் கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை துணை ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
Source:unarvu(7/6/19)