மிருகவதைத் தடைச் சட்டம் திருத்தமா? திருட்டுத் தனமா?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

மிருகவதைத் தடைச் சட்டம் திருத்தமா? திருட்டுத் தனமா?

மத்திய பாஜகவின் நான்காம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு வன்கொடுமைச் சட்டமொன்றை நாட்டு மக்களுக்கு பரிசளித்திருக்கிறது மத்திய அரசு. 1960 ஆம் ஆண்டு மிருகவதைத் தடைச் சட்டத்தைத் திருத்தி பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக் கூடாது. விவசாய நோக்கங்களுக்காக, விவசாயிகள் என அரசால் சான்றளிக்கப்பட்டவர்கள் மட்டுமே சந்தைகளைப் பயன்படுத்த வேண்டும். விற்பவர் பெயர், முகவரி மற்றும் அடையாளச் சான்று வைத்திருக்க வேண்டும்.

விலங்கின் அங்க அடையாளங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். விவசாயத்திற்காகத் தான் விற்கப்படுகிறது என்பதை எழுத்தில் உறுதி செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கிடையில் மறு விற்பனைக்கு அனுமதி கிடையாது. கொம்புகளில் வர்ணம் பூசக் கூடாது. மூக்கணாங்கயிறு அணிவிக்கக் கூடாது. வெளி மாநிலத்தவர்க்கு விற்கக் கூடாது. நீண்டு செல்லும் இவ்விதிகள் யாவும் விவசாயிகளின் நன்மைக்காகவும், விலங்குகளைக் காப்பதற்காகவுமே போடப்பட்டிருப்பதாக மத்திய அரசும் அதன் பரிவாரப் படைகளும் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. பாலுக்கோ, விவசாயத்திற்கோ பயன்படாத கால்நடைகளை விற்காதே என்பது விவசாயிகளுக்கு எப்படி நன்மையாக இருக்க முடியும்?

வாங்கிய கடனுக்கு வழி தெரியாமல், விதை நெல் வாங்கவும் வழியில்லாமல், அரை வயிற்று கஞ்சிக்கே அல்லாடும் ஒருவனால் பயன் தராத மாட்டை எப்படி பராமரிக்க முடியும்? கொடும் சுமையைத் தூக்கி தலையில் வைத்து விட்டு, கொடுத்து வைத்தவன் நீயெனப் பாராட்டுவதை விடக் கொடுமை வேறென்ன இருக்க முடியும்? தனக்கான மாடுகளை தன் விருப்பம் போல் விற்றவனை, இனி அதிகாரியின் ஆர்டருக்காக அலைய விட்டு, வேட்டியில் முடிந்து வைத்த அஞ்சையும், பத்தையும் அவர் கையில் கொடுத்து அழுது விட்டு, அரைஞான் கயிற்றையாவது அறுக்காமல் இருப்பார்களா என அச்சப்படப் போவதைத் தவிர இந்த விதிகள் வேறெதையும் கிழித்து விடப் போவதில்லை.

விவசாயிகள் சந்தைக்குக் கொண்டு செல்லும் இரண்டொரு மாடுகளை கசாப்புக்குச் செல்லாமல் காப்பதே மாடுகளைக் காக்கும் என்றால் தினம் தினம் டன் கணக்கில் ஏற்றுமதிக்கு செல்லும் மாடுகளை தடுத்து விட்டால் இலட்சோப இலட்ச மாடுகளைக் காப்பாற்றலாமே செய்தார்களா? மாட்டிறைச்சி ஏற்றுமதிக்குத் தடையென்று அறிவித்தார்களா? ஏன் செய்யவில்லை? கிராமத்துச் சந்தைகளை இழுத்து மூடி விட்டால், கொள்ளைப் புறமாக எக்ஸ்போர்ட் வியாபாரத்தை ஏகபோகமாக நடத்திக் கொள்ளலாம். அதற்குத் தானே இந்த ஏற்பாடு. மாடுகளையும், இன்னபிற விலங்குகளையும் காப்பதற்கு அல்ல,

களவாடுவதற்காகக் கொண்டு வரப்பட்ட திருத்தம் இது. எளிய மக்களின் குறைந்த விலையிலான ஆரோக்கிய உணவைப் பற்றி கவலைப்படாமல் கொண்டு வரப்பட்ட சட்டம் இது. மாடுகளையும், ஒட்டகங்களையும் காக்க அவதாரம் எடுத்த ஜீவகாருண்யர்கள் ஆடுகளையும் கோழிகளையும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் கண்டு கொள்ள மறுப்பது ஏன்? மிருகவதைச் சட்டம் மத்தியப் பட்டியல் என்றாலும் மாடு வளர்ப்பு மாநிலப் பட்டியலில் உள்ளது. மாநில உரிமைகளைக் கருத்தில் கொள்ளாத சர்வாதிகார மனப்பான்மை கூட்டாட்சித் தத்துவத்தையே குழி தோண்டிப் புதைத்து விடும்.

ஆட்சியாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காகத் தான் சட்டமேயன்றி சட்டத்திற்காக மக்களல்ல. மக்களின் விருப்பத்திற்கும், உரிமைகளுக்கும் எதிராக சட்டம் கொண்டு வந்த சர்வாதிகாரிகள், உலக வரலாற்றிலே இடம்பெற முடியாதவாறு தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள். இந்திய சுதந்திரப் போரின் வரலாறு சொல்லும் பாடமும் இது தான். சூரியன் மறையா ஆட்சியென அகிலத்தையே கட்டி ஆண்ட ஆங்கிலேய அரசை கற்களையும், கம்புகளையும் கொண்டே கலங்க வைத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம். அதில் படித்த பாடத்தை எழுபது ஆண்டுகளுக்குள் மறப்பது யாருக்கும் நல்லதல்ல.

Source: unarvu (02/06/17)