116. மினாவில் 8ஆம் எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

மினாவில் 8ஆம் நாளன்று எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா?

முஸ்தலிபாவில் படுத்து உறங்கிய பிறகு அன்றைய ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல் ஃபர்ளை மட்டும்தான் தொழ வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் அங்கு கடமையான தொழுகைகளை மட்டுமே தொழுததாக ஹதீஸில் (முஸ்லிம்: 2137) வருகின்றது. இந்த ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை என்று வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.

“நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதார்கள்’ என்று ஜாபிர் (ரலி) குறிப்பிட்டுச் சொல்லாததால் அன்று இரவு அவர்கள் வித்ரு தொழவில்லை என்றாகிவிடாது. மாறாக, நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதது, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதது அவர்களது பார்வையில் படாமல் கூட இருந்திருக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு சாப்பிட்டார்கள், சிறுநீர் கழித்தார்கள் போன்ற பல விஷயங்களை அறிவிப்பாளர் சொல்லாமல் விட்டிருக்கலாம். அதனால் அவற்றை நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்றாகி விடாது.

“நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால் கூட மினா, முஸ்தலிஃபாவில் இந்தத் தொழுகைகள் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜாபிர் (ரலி) இவ்வாறு குறிப்பிட்டுக் கூறவில்லை. எனவே அந்தத் தொழுகைகளைப் பற்றி அவர் அறிவிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவில் உங்களுடைய தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்லிம்: 1245)

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பொதுவாகக் கட்டளையிட்ட பின், அவர்கள் வித்ரு தொழுகையை விட்டதாகவோ அல்லது குறிப்பிட்ட வேளையில் தொழ வேண்டாம் என்று தடுத்ததாகவோ எந்த ஹதீசும் வராத வரை வித்ரு தொழ வேண்டும் என்பது தான் அடிப்படையாகும். மேலும் வித்ரு தொடர்பான ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் உத்தரவும் இருப்பதால் மினாவில் நாம் வித்ரு தொழுவது தான் நபிவழி.

ஃபஜ்ருடைய முன்சுன்னத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் வழமையாகக் கடைப்பிடித்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத் அளவிற்கு வேறு எந்த கூடுதல் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

(புகாரி: 1169)

வித்ருக்கு நாம் கூறிய வாதங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும் என்பதால் ஃபஜ்ருடைய முன் சுன்னத்தை முஸ்தலிஃபாவில் தொழுவது தான் நபிவழியாகும்.