மார்க்கச் சட்டங்களில் தவறிழைத்த நபித்தோழர்கள்
மார்க்கச் சட்டங்களில் தவறிழைத்த நபித்தோழர்கள்
நபித்தோழர்களில் பலருக்குக் குர்ஆன் மற்றும் ஹதீஸ் விஷயங்களில் பல செய்திகள் தெரியாமல் இருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. ஏனெனில் வியாபார ரீதியில் பொருளாதாரத்தைக் கவனிப்பதில் ஈடுபட்டதும், பலர் ஆரம்ப காலத்திலேயே இறந்ததும், பலர் பிற்காலத்தில் தான் இஸ்லாத்தை ஏற்றதும், மக்காவில் வைத்து நடந்த சம்பவங்கள் மதீனாவில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் போனதும், சம்பவ இடத்தில் நபித்தோழர்கள் இல்லாமல் போவதும், செய்தியின் சாராம்சத்தை விளங்காமல் வேறொரு அர்த்தத்தில் புரிவதும், அவர்களின் வீடு மஸ்ஜிதுன் நபவியை விட்டும் தூரமாக இருந்ததும் இதுபோன்ற பல காரணங்களால் பல செய்திகள் நபித்தோழர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) தவறிழைத்த மார்க்கச் சட்டங்கள்:
கல்விக்கடல் என்று மக்களால் பாராட்டப்பட்ட, குர்ஆன் ஞானத்தில் மேதையாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே மார்க்கச் சட்டங்கள் சிலவற்றில் தடுமாறத்தான் செய்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்க்கண்ட செய்திகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி ஹிஜ்ரி 7-ல் உம்ரா செய்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் அவர்களுடன் வீடு கூடினார்கள். பிறகு மைமூனா (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள) ‘சரிஃப்’ என்னுமிடத்தில் இறந்தார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் நபிகளார் இஹ்ராமில் இருக்கும் நிலையில் திருமணம் செய்துள்ளார்கள் என்று கூறுகிறது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) கூறிய செய்தியைப் பாருங்கள்.
மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே என்னைத் திருமணம் செய்தார்கள்.
இஹ்ராமின் போது நபியவர்கள் தன்னைத் திருமணம் செய்யவில்லை என்று மைமூனா (ரலி) கூறுவதால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியது தவறான செய்தி என்பது உறுதியாகின்றது.
இப்னு அப்பாஸ் தவறிழைத்த மற்றொரு சட்டம்
அம்ர் இப்னு தீனார் (ரஹ்) கூறினார். நான் ஜாபிர் இப்னு ஸைத் (ரஹ்) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளை உண்ணக் கூடாதெனத் தடை செய்திருப்பதாக (மக்கள்) கருதுகிறார்களே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஹகம் இப்னு அம்ர் அல்கிஃபாரி (ரலி) பஸராவில் வைத்து எம்மிடம் இதைச் சொல்லி வந்தார்கள். ஆனால் (கல்விக்) கடலான இப்னு அப்பாஸ் (ரலி) அதை மறுத்து, ‘‘தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி,அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை’ என்று கூறுவீராக!’’ எனும்(அல்குர்ஆன்: 6:145) ➚வது வசனத்தை ஒதிக்காட்டினார்கள்.
நாட்டுக்கழுதை சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு(அல்குர்ஆன்: 6:145) ➚வது வசனத்தில் குறிப்பிடப்பட்டதைத் தவிர வேறெதுவும் தடையில்லை என்று குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டி இப்னு அப்பாஸ் (ரலி) கூறினாலும் இது தவறான கருத்தாகும். குர்ஆனில் கூறப்பட்டதற்கு ஏற்ப அவர்கள் விளக்கம் கொடுக்க நினைத்தது வரவேற்கத்தக்கது என்றாலும் மேற்கண்ட வசனம் அருளப்பட்ட நேரத்தில் அவ்வசனத்தில், கூறப்படுபவை மட்டும் தான் ஹராமாக்கப்பட்டு இருந்தன.
திருக்குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் அருளப்படவில்லை. மாறாகச் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப அருளப்பட்டதாகும். ஒரு காலத்தில் மதுபானம் தடை செய்யப்படாமல் இருந்தது. பின்னர் அது தடை செய்யப்பட்டது. அது போல் ஒரு கால கட்டத்தில் இந்த நான்கு உணவுகள் மட்டும் தடை செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் இந்தப் பட்டியல் அதிகரிப்பது இவ்வசனங்களுக்கு முரணாகாது.
இதைப் பின்வரும் வசனம் தெள்ளத் தெளிவாக்குகிறது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.)
இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
ஏற்கனவே கூறப்பட்ட நான்குடன் கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, மேட்டிலிருந்து உருண்டு விழுந்தவை, தமக்கிடையே மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றை இவ்வசனத்தில் அல்லாஹ் மேலதிகமாகக் கூறுகிறான்.
ஆரம்ப காலத்தில் நான்கு மட்டுமே ஹராமாக இருந்தன என்பதும், பின்னர் 5:3 வசனத்தில் கூறப்பட்டவைகளும் ஹராமாக்கப்பட்டன என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலை என இதிலிருந்து விளங்கலாம்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (கைபரின் போது) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, கழுதைகள் உண்ணப்பட்டன என்று கூறினார். பிறகு ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, கழுதைகள் உண்ணப்பட்டுவிட்டன என்று கூறினார். மீண்டும் ஒருவர் வந்து, கழுதை இறைச்சி (உண்டு) தீர்க்கப்பட்டுவிட்டது என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்பு செய்பவர் ஒருவருக்கு (மக்களிடையே அறிவிப்புச் செய்யும் படி) கட்டளையிட அவரும் மக்களிடையே ‘‘அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களை நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்கிறார்கள். ஏனெனில் அவை அசுத்தமானவையாகும்’’ என்று பொது அறிவிப்புச் செய்தார். உடனே இறைச்சி வெந்து கொதித்துக் கொண்டிருந்த பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டு (அதிலிருந்த இறைச்சி கொட்டப்பட்டு)விட்டது.
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஏற்பட்ட தவறுகள்
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யார் ஜனாஸாவைப் பின் தொடர்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் இப்னு உமர் (ரலி), “அபூஹுரைரா (ரலி) அவர்கள் மிகைப்படுத்துகிறார்கள்’’ என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தியதுடன், “நானும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்’ என்றும் கூறினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே’’ என்றார்கள்.
வணக்க வழிபாடுகளில் தவறிழைத்த அபூதல்ஹா (ரலி)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் கலந்து கொண்ட காரணத்தால் நோன்பு நோற்காதவராக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் (இஸ்லாம் பலம் பெற்று விட்ட நிலையில்), நான் அபூதல்ஹா (ரலி) அவர்களை ஈதுல் ஃபித்ருடைய நாளிலும் மற்றும் ஈதுல் அள்ஹாவுடைய நாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காதவராகக் கண்டதில்லை.
நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய அபூதல்ஹா (ரலி) அவர்கள் ‘காலமெல்லாம் நோன்பு நோற்பது கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த தடையில் கவனம் செலுத்தத் தவறிவிட்டார்கள்.
இதிலிருந்து நமக்கு ஒரு சில கேள்விகள் எழுகின்றன.
ஸஹாபாக்கள் வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறியுள்ளனரா?
அல்லது அவர்கள் இதுபோன்ற சில ஹதீஸ்களை அறியவில்லையா?
அறிந்தே செய்தனர் என்றால் அவர்களிடத்திலும் தவறுகள் நிகழ்ந்துள்ளது தானே?
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்.
அப்படியானால் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தாலும் அது தவறு தான் என்பதை நபித்தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறுபவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
காலமெல்லாம் நோன்பு நோற்கத் தடை விதிக்கும் இறைத்தூதரின் கூற்றைக் கவனியுங்கள்:
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!’’ என்று கேட்டார்கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!’’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’’ என்று கூறினார்கள்.
‘‘நான் சிரமத்தை வலிரிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!’’ என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!’’ என்றார்கள். “தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன். “வருடத்தில் பாதி நாட்கள்!’’ என்றார்கள். “அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் “நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!’’ என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
கவ்ஸர் தடாகத்தில் விரட்டப்படும் நபித்தோழர்கள்:
கவ்ஸர் என்ற சிறப்பு வழங்கப்பட்ட சமுதாயம் இறுதித்தூதரைப் பின்பற்றிய நமது சமுதாயம் தான். அதன் சிறப்புகளைக் கேள்விப்பட்டால் அதனை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (‘அல்கவ்ஸர்’) எனும் எனது தடாகம் (பரப்பளவில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவு கொண்டதாகும். அதன் அனைத்து மூலைகளும் சம அளவு கொண்டவையாகும். அதன் நீர் வெள்ளியை விட வெண்மையானதாகும். அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்ததாகும். அதன் (விளிம்பிலிருக்கும்) கூஜாக்கள், (எண்ணிக்கையில்) விண்மீன்கள் போன்றவையாகும். யார் அதன் நீரை அருந்து கிறாரோ அவர் அதன்பின் ஒருபோதும் தாகமடையமாட்டார்.
ஆனால் அப்பாக்கியம் நபிகளார் வாழ்ந்த காலகட்டத்தில் உள்ள சிலருக்கே கிடைக்காது என்றால் அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்கான காரணத்தையும் நபிகளார் தெளிவுபடுத்தத் தவறவில்லை.
சஹல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன். யார் (என்னிடம்) வருகிறாரோ அவர் (அத்தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (அத்தடாகத்தினருகில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்படும்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் (என் தோழர்கள்)’’ என்று சொல்வார்கள். அப்போது “உங்களுக்குப் பின்னால் அவர்கள் செய்ததை நீங்கள் அறியமாட்டீர்கள்’’ என்று கூறப்படும். “அப்போது நான், எனக்குப் பின்னர் (தமது மார்க்கத்தை) மாற்றிக்கொண்டவர்கள் தொலைந்து போகட்டும்; தொலைந்து போகட்டும்’’ என்று கூறுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்களில் நபித்தோழர்களில் சிலரும் அடங்குவார்கள் என்று நபிகளார் தமது நாவினாலே பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடனிருந்த என் தோழர்களில் சிலர் (மறுமையில் “அல்கவ்ஸர்’) தடாகத்துக்கு என்னிடம் வருவார்கள். நான் அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் (நானிருக்கும் பகுதிக்கு) ஏறி வருவர். அப்போது என்னைவிட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். அப்போது நான், “இறைவா! (இவர்கள்) என் அருமைத் தோழர்கள்; என் அருமைத் தோழர்கள்’’ என்பேன். அதற்கு, “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்’’ என்று என்னிடம் கூறப்படும்.
தூதர் காட்டிய தூய வழியைப் பின்பற்றுமாறு கட்டளை
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ் விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.
இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.
எனவே தூதர் காட்டிய தூய வழியையே நாம் பின்பற்ற வேண்டும். மார்க்கம் என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்தது தானே தவிர மூன்றாவது பாதையான ஸஹாபாக்களையும் பின்பற்றலாம் என்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை; புதுமைகளுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்பதை விளங்கிச் செயல்படுவோம்.