மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹப் நூற்கள்-1
மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹப் நூற்கள்-1
அல்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் தான் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரத் தூண்களாகும். ஒரு முஸ்லிமின் ஈடேற்றத்திற்கும், மறுவுலக வெற்றிக்கும் இவ்விரண்டைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்று இஸ்லாம் பறைசாற்றுகின்றது. ஆனால் சில முஸ்லிம்கள் இதை மறுக்கும் விதமாக எங்களுக்குக் குர்ஆன் ஹதீஸ் போதாது; எங்கள் இமாம்கள் எவ்வழி நடந்தார்களோ அதுவும் எங்களுக்குத் தேவை என்று செயல்படுகிறார்கள்.
அதுமட்டுமின்றி இமாம்கள் எழுதி வைத்த மற்றும் இமாம்களின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட தத்தமது மத்ஹபு சட்டநூல்களுக்கு குர்ஆன் – ஹதீஸிற்கு நிகரான, அதைவிட அதிகமான மதிப்பை இவர்கள் வழங்கி வருவதோடு மத்ஹபு நூல்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவும் செய்கிறார்கள். இவர்களது இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
உண்மையில் மத்ஹபு நூல்கள் என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா? என்பதைக் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்பவர், நிச்சயமாக இல்லை என்ற முடிவிற்கே வருவார். அதற்குக் காரணம் மத்ஹபு நூற்களில் மலிந்து கிடக்கின்ற ஆபாசமான கற்பனைகளும் அறிவுக்கு ஒவ்வாத உளறல்களும் தான்.
இதை விஞ்சும் விதமாக சில மத்ஹபு நூற்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது துணிந்து பொய் சொல்லும் மகா அநியாயமும் சர்வ சாதாரணமாக அரங்கேற்றம் செய்யப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்தி இருந்தாக வேண்டும். ஆதாரமில்லாத செய்தியை அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று அவிழ்த்து விடுவது அறவே ஆகாத பொய்யாகும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.
இத்தகைய கொடுஞ்செயலை குற்றவுணர்ச்சியில்லாமல் குதூகலமாக செய்யும் நூலாக நமக்கு காட்சியளிக்கின்றது ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயா.
இந்நூலை ஹிஜ்ரி 511ஆம் ஆண்டு பிறந்து 593ஆம் ஆண்டு இறந்து போன புர்ஹானுத்தீன் என்றழைக்கப்படுகின்ற அபுல் ஹசன் அலி பின் அபீபக்கர் அல்மர்கீனானி என்பவர் தொகுத்துள்ளார்.
இந்நூலில் நபிகள் நாயகம் சொன்னதாக, செய்ததாகப் பல செய்திகளைப் போகிற போக்கில் பதிவு செய்கிறார் நூலாசிரியர். உண்மையில் அந்தச் செய்திகளை நபியவர்கள் சொன்னார்களா? என்று நம் சக்திக்கு உட்பட்டு ஹதீஸ் நூல்களில் தேடிப்பார்த்தால் அவற்றில் பலவற்றுக்கு எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை என்ற பதில் தான் கிடைக்கின்றது.
இவ்வாறு அடிப்படை ஆதாரமின்றி ஹிதாயாவின் நூலாசிரியர் நபியின் பெயரால் பதிவு செய்துள்ள செய்திகளின் தொகுப்பைத் தான் அறிய இருக்கிறோம்.
ஹிதாயாவில் நபியின் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ள பல ஹதீஸ்கள் எந்த ஹதீஸ் நூற்களிலும் இல்லை என்பதை நமக்கு முன்பே பல அறிஞர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள். அவர்களில் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
அலட்சியம்
நபி பெயரில் ஒன்றை எழுதும் போது அது எந்த ஹதீஸ் நூலில் பதிவாகியுள்ளது? அது சரியான செய்திதானா? என்றெல்லாம் ஆராய்ந்து மிகுந்த கவனத்துடன் எழுத வேண்டும். ஏனெனில் எழுத்து வேறு, பேச்சு வேறு. பேச்சில் கூட கவனத்துடன் இருந்தும் சில செய்திகள் தவறுதலாக வந்து விட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எழுத்து அப்படியல்ல.
அதில் தவறுகள் நிகழ்ந்திடாத வண்ணம் சரிபார்த்து எழுதவும் பிறரால் சுட்டிக்காட்டி திருத்தவும் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இதையும் மீறி ஒன்றிரண்டு செய்திகளில் மனிதன் என்ற முறையில் பிழை வரலாம் என்றாலும் ஹிதாயாவில் உள்ளதை அந்தக் கணக்கில் சேர்க்க முடியாது.
ஏனெனில் ஹிதாயாவில் நபியின் மீது பொய்யுரைக்கும் வகையில் பதிவான செய்திகள் ஒன்றிரண்டல்ல! கணக்கின்றி கட்டுப்பாடின்றி சென்று கொண்டே இருக்கின்றது. இறைவன் அந்த வாய்ப்பை நல்க வேண்டும் என்ற வாஞ்சையோடு ஹிதாயாவில் உள்ள நபி மீது அவிழ்த்து விடப்பட்ட பொய் செய்திகளை அறியத்தருகிறோம்.
சுன்னத்தை விட்டவருக்கு பரிந்துரை இல்லையா?
லுஹருக்கு முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒருவர் தொழாமல் விட்டுவிட்டால் அவருக்கு தனது பரிந்துரை கிடைக்காது என்று நபிகள் நாயகம் சொன்னதாக நூலாசிரியர் கூறுகிறார்.
லுஹருக்கு முன் நான்கு ரக்அத் சுன்னத் தொழுவதை யார் விடுவாரோ அவருக்கு எனது பரிந்துரை கிடைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹிதாயா 1/72
இந்தச் செய்தி எந்த நூலில் உள்ளது? யார் இதை அறிவித்தது உள்ளிட்ட எந்த விபரங்களையும் குறிப்பிடாமல் தேமே என்று அடுத்த சட்டத்திற்குத் தாவி விடுகிறார். லுஹர் தொழுகையின் முன் சுன்னத் நான்கு ரக்அத்கள் சிறப்பிற்குரியது, முக்கியத்துவம் வழங்கப்படத் தகுதியானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நபிகள் நாயகம் இதற்குக் கொடுத்த முக்கியத்துவத்திலிருந்து இதனை அறிந்து கொள்ளமுடிகிறது.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும் சுப்ஹ் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்களும் தொழாமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
இங்கே நாம் கேட்பது லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களைத் தொழாமல் போனால் நபியின் பரிந்துரை கிடைக்காது என்பதற்கு என்ன ஆதாரம்? இச்செய்தி எந்த நூலில் உள்ளது என்பதை மத்ஹபை ஆதரிப்பவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?
பட்டு விரிப்பில் அமர்ந்தார்களா பண்பான நபி?
பட்டாடையைப் பயன் படுத்தலாமா என்ற சட்டத்தை விளக்கும் போது, இமாம் அபூஹனிஃபா பட்டு விரிப்பைப் பயன்படுத்தலாம், அதில் உறங்கலாம் என்று கூறுவதாக ஹிதாயா நூலாசிரியர் கருத்து தெரிவிக்கிறார். அதைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களே பட்டு விரிப்பில் அமர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற பச்சைப் பொய்யை பரப்பிச் செல்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் பட்டு விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள் என்று ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிதாயா 4/81
நபிகளார் பட்டு விரிப்பில் அமர்ந்துள்ளதாக எங்கே அறிவிக்கப்பட்டுள்ளது? புகாரியிலா? முஸ்லிமிலா? அல்லது திர்மிதி, நஸாயி போன்றவற்றிலா? எதில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்ல வேண்டாமா? நாம் இப்படி அழுத்தமாகக் கேட்கக் காரணம் நபி (ஸல்) அவர்கள் பட்டின் மீது அமர்வதைத் தடுத்த ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன என்பதேயாகும்.
நபி (ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும், அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹூதைஃபா பின் யமான்(ரலி)
பட்டின் மீது அமரக் கூடாது என்று மற்ற நபித்தோழர்களைத் தடுத்த நபிகளார் தாமே அதைச் செய்தார்கள் என்று சொன்னால் இதைப் படிக்கின்ற யாரும் இதற்கான ஆதாரம் என்ன? என்று கேட்கவே செய்வார்கள். அதைத் தான் நாம் கேட்கிறோம். மத்ஹபு அபிமானிகள் இதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளார்கள். செய்வார்களா?
இறையச்சமுள்ள இமாம் இறைத்தூதருக்குச் சமமானவரா?
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 56-ல் இமாமத் பற்றிய பாடத்தில் மக்களுக்கு முன்னின்று தொழுகை நடத்தும் இமாமிற்குத் தகுதியானவர் யார் என்பதை ஒவ்வொருவராக நபிமொழிகளின் துணை கொண்டு அலசுகிறார்.
குர்ஆனை நன்கு தெரிந்தவர் தொழவைக்க வேண்டும், இதில் அனைவரும் சமமாக இருந்தால் நபி மொழிகளை நன்கு தெரிந்தவர் இமாமாக நிற்க வேண்டும் என்று துவக்கமாகக் கூறி அதற்கான ஆதாரமாக நபிமொழியையும் குறிப்பிடுகிறார். இதில் யாரும் ஆட்சேபணை செய்ய முடியாது. ஆனால் அதையடுத்து அவர் குறிப்பிடும் விஷயம் ஹதீஸ்களில் ஆதாரமற்றதாகும்.
என்ன சொல்கிறார் எனில் மேற்கண்ட தகுதிகளில் அனைவரும் சமமாக இருந்தால் அவர்களில் மிகப் பேணுதலுடையவர் தொழுவிக்க வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் எனப் புழுகுகிறார்.
இறையச்சமுள்ள ஆலிமுக்குப் பின்னால் தொழுதவர் நபிக்குப் பின்னால் தொழுதவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 56
தொழுவிக்கும் இமாம் இறை பயமுள்ளவரா இல்லையா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இறையச்சம் உள்ளம் சம்மந்தப்பட்டதாகும். அதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்ற அடிப்படை கூடத் தெரியாமல் இட்டுக்கட்டியுள்ளார். நபிகளார் சொல்லாத ஒன்றை நபியின் பெயரால் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதைச் சொல்லும் முன் அதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டாமா?
பிற மனிதர்கள் விஷயத்திலேயே ஊர்ஜிதம் செய்யாமல் எதையும் சொல்லக் கூடாது எனும் போது இறைத்தூதர் விஷயத்திலும், இறைத்தூது விஷயத்திலும் எத்தகைய பேணுதலைக் கடைப் பிடித்திருக்க வேண்டும். நூலாசிரியர் பேணுதலை வலியுறுத்திக் கொண்டே தாம் அதைத் தவற விட்டுவிட்டாரே!
ஹனஃபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.
தொழுகையில் சந்தேகம் வந்தால்…?
எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று ஒருவருக்குச் சந்தேகம் எழுமேயானால் இந்தச் சந்தேகம் துவக்கமாக வருகிறதா? அல்லது அதிமான முறை வந்துள்ளதா? என்றெல்லாம் வகை வகையாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்குமான தீர்வு ஹிதாயாவில் முன்வைக்கப்படுகின்றது.
ஒருவர், தாம் தொழுதது மூன்றா? அல்லது நான்கா எனத் தெரியாமல் குழம்பி நின்றால் இக்குழப்பம் முதல் முறையாக ஏற்பட்டிருக்குமெனில் அவர் தொழுகையைப் புதிதாக மறுபடியும் தொழ வேண்டும் எனவும், இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.
ஒருவர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் வந்தால் அவர் தொழுகையை மீண்டும் தொழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 76
இவர் குறிப்பிடும் இந்தச் செய்தியை நபிகளார் எங்கே சொன்னார்கள்? யாரிடத்தில் சொன்னார்கள்? என்பதற்கு மத்ஹபு ஆதரவாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இவர் குறிப்பிடும் இதே பிரச்சனைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அழகிய தீர்வு நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.
உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நபிகளாரின் இந்தத் தீர்வையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் அதிகமான முறை சந்தேகம் வந்தால் அப்போது தான் இதை அமல்படுத்த வேண்டும் என்கிறார். தொழுகையில் சந்தேகம் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நபிகளார் பொதுவாக வழிகாட்டியிருக்க, நூலாசிரியரோ அந்தச் சந்தேகம் முதல் தடவை வருகிறதா? அதிகமான முறை வந்துள்ளதா என்று ஆதாரமின்றி பிரிக்கிறார்.
இது இவர் செய்யும் முதல் தவறு. அதையடுத்து முதல் தடவை வந்தால் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் இதை நபியின் பெயரால் சொல்லியது அவர் செய்த மிகப்பெரிய பிழையாகும்.
அறிஞர்கள் மக்களிடையே உரையாற்றிடும் போது அறியாமல் ஹதீஸ்களைத் தவறுதலாகக் கூறி விட்டால் கூட அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்து எக்காளமிடும் மத்ஹபுக்கூட்டம் நபி சொல்லாததை நபி சொன்னதாக தாங்கள் போற்றும் மத்ஹபு அறிஞர்கள் சொல்லியமைக்கு மௌனம் காப்பதேன்? அவமானகரமான மௌனமிது என்பதில் அறிவுடையோர் சந்தேகிக்க மாட்டார்கள்.
கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் உண்டா?
ஸகாத் பற்றிய பாடத்தில் எவை எவைகளுக்கு ஸகாத் வழங்க வேண்டும் என்பதை விலாவரியாக விளக்கிக் கொண்டு வரும் போது நபியின் பெயரால் ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. கருத்து சரியா தவறா என்பதை ஆராயாமல் இப்படி எங்கேனும் நபிகளார் சொல்லியுள்ளார்களா? என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.
கர்ப்பத்தில் உள்ளவைகள், நீர் இறைக்கப் பயன்படும் மாடுகள், உழவு மாடுகள் ஆகியவற்றில் ஸகாத் வழங்கத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கு ஆதாரமாகும்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 102
கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று சட்டம் கூறி விட்டு இவ்வாறு நபி கூறியுள்ளார்கள் என்று இந்த நூலாசிரியர் பதிகிறார்.
கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் வழங்கத் தேவையில்லை தானே? சரியாகத்தானே சொல்கிறார் என்று நாம் கருதி விடக்கூடாது. ஏனெனில் நபியின் பெயரால் ஒரு கருத்தைச் சொல்வதாக இருந்தால் அப்படி ஒரு செய்தியை நபி சொன்னதாக அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஆதாரப்பூர்வமான செய்தி இருந்தாக வேண்டும். அப்படி இல்லாமல் வாயில் வந்ததை நல்ல கருத்து தானே என்று என்றெண்ணி நபியின் பெயரால் அள்ளி விடக் கூடாது. அது மோசமான செயலுடன் நபியின் மீது பொய்யுரைப்பதாக ஆகி விடும்.
காரட், பப்பாளி சாப்பிடுவது இரத்த சுத்திகரிப்புக்கு நல்லது என்று நபி சொன்னார்கள் என ஒருவர் எழுதினால், பேசினால் ஆஹா என்னவொரு நல்ல கருத்தை நபி பெயரில் புனைந்து சொல்கிறார் என்று பாராட்டுவோமா? அல்லது ஆதாரமற்றதை நபியுடன் இணைக்காதீர்கள் என்று அவ்வாறு சொல்பவரை கடிந்து கொள்வோமா?
இந்த வேலையைத்தான், கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் இல்லை என நபி சொன்னார்கள் என்ற இந்த விவகாரத்திலும் மேற்கண்ட நூலாசிரியர் செய்துள்ளார்.
(குறிப்பு: மற்ற இரண்டிற்கும் பலவீனமான செய்திகள் உள்ளன)
பொறுப்பாளர் நோன்பு நோற்கக் கூடாது?
நோன்பு தொடர்பான பாடத்தில் ஒருவர் மற்றொருவருக்காக நோன்பு நோற்கவோ, தொழவோ கூடாது என்று சட்டம் கூறிவிட்டு இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார்.
யாரும் யாருக்காகவும் நோன்பு நோற்கக் கூடாது, யாரும் யாருக்காகவும் தொழவும் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 127
நபிகள் நாயகம் இவ்வாறு கூறினார்கள் என்றால் அது நபித்தோழர்கள் எனும் சமுதாயத்தின் வழியாகவே நம்மை வந்து சேரும். இதை அறிவித்த நபித்தோழர் யார்? அவரிடமிருந்து கேட்டறிவித்த தாபிஈ யார்? இந்தச் செய்தி எந்த ஹதீஸ் நூலில் பதிவாகியுள்ளது? இவற்றுக்கு விடை தெரிந்தோர் உண்டா? மத்ஹபின் தீவிர ஆதரவாளர்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்.
மேலும் இவற்றுக்கு மாற்றமாக இறந்த பெற்றோர் சார்பில் அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்கலாம் என்று நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளார்கள் என்பதற்கு நேரடியான ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.
நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இந்த நபிமொழிகளுக்கு முரணாக நபியவர்கள் பேசியதாக ஹிதாயா நூலாசிரியர் கூறுகிறார். இதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை.