மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-6
மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்
நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.
ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.
முஸ்லிம்கள் தீர்மானிப்பது நல்லதாகுமா?
முஸ்லிம்கள் எதை நல்லதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடத்திலும் நல்லதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹிதாயா, பாகம் 3 ,பக்கம் 239
இப்படி ஒரு செய்தியை நபிகளார் கூறியதாக ஹிதாயா எனும் ஹனபி மத்ஹபு நூல் பச்சையாகப் புளுகுகிறது. நபிகளார் இவ்வாறு கூறியதற்கு எந்த ஹதீஸ் நூற்களிலும் ஆதாரம் இல்லை. நாமறிந்தவரை நபி இதைச் சொன்னார்கள் என்பதற்கு ஒரு பலவீனமான செய்தி கூட இல்லை என்பதே உண்மை.
எது நல்லது? எது கெட்டது? என்பதை கற்றுத் தரவே குர்ஆன் அருளப்பட்டது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் இறைத்தூதராக அனுப்பியதன் நோக்கமும் கூட எல்லாவற்றிலுமுள்ள நல்லதையும், கெட்டதையும் இனங்காட்டுவதற்கே! நல்லவற்றைக் கண்டறிந்து அதை நபிகளார் சமுதாயத்திற்கு அனுமதிப்பார்கள். தீயனவற்றைத் தடை செய்வார்கள். இது தான் இறைத்தூதரின் பணி என திருக்குர்ஆன் தெளிவுபடச் சொல்கின்றது.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.
நல்லது கெட்டதைக் குர்ஆன் ஹதீஸ் தான் தீர்மானிக்குமே தவிர முஸ்லிம்கள் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். மேலும் முஸ்லிம்கள் நல்லது என தீர்ப்பளிப்பதால் அது அல்லாஹ்விடத்திலும் நல்லதே எனும் இச்செய்தியின் கருத்து ஏற்புடையதல்ல.
எத்தனையோ முஸ்லிம்கள் சினிமா, வட்டி, போன்ற மார்க்கத்தில் பாவம் என்று உறுதி செய்யப்பட்டவைகளை நல்லதாகக் கருதுகிறார்கள். அவ்வளவு ஏன் தர்கா வழிபாடு, மவ்லித், தாயத்து போன்ற இணைவைப்புச் செயல்களையும் நல்லதாகக் கருதும் முஸ்லிம்கள் கணிசமாக இருக்கின்றனர்.
இந்த முஸ்லிம்கள் இவைகளை நல்லதாகக் கருதியதால் அல்லாஹ்விடத்திலும் இவை நல்லவையாகி விடுமா? இதைச் செய்பவர்கள் அல்லாஹ்விடத்தில் நல்லவர்களாகி விடுவார்களா? நபி மீது மத்ஹப் விட்டு அடித்த மேற்கண்ட பொய்க்கு மாற்றமாகப் பின்வரும் வசனமும் அமைந்துள்ளது.
முஸ்லிம்கள் நல்லது என நினைப்பது உண்மையில் கெட்டதாகவும், கெட்டது என தீர்மானிப்பது நல்லவையாகவும் இருக்கும் என திருக்குர்ஆன் தெளிவாகவே கூறுகிறது.
உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
மனிதன் ஒன்றை நல்லதாக நினைப்பான். ஆனால் அது கெட்டதாக இருக்கும் என இவ்வசனம் சொல்கிறது. மனித சமுதாயத்திற்கு எது நல்லது, எது கெட்டது என அல்லாஹ்வே அறிவான். மனிதர்கள் சரியாகக் கணிக்க முடியாது என்பது இவ்வசனத்தின் கருத்து. மேலும் பின்வரும் செய்தி, மனிதர்களின் கணிப்பு தவறாகி விடவே வாய்ப்பு அதிகம் என்பதை சந்தேகமற உணர்த்துகின்றது.
நபி (ஸல்) அவர்களும், இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.
(அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை’’ என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்’’ என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)’’ என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார்.
அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்’’ என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?’’ என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்’’ என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன்.
அவர் கடுமையாக காயப் படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’’ என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ(ரலி)
இப்படியிருக்க முஸ்லிம்கள் எதை நல்லது என தீர்மானிக்கிறார்களோ அது அல்லாஹ்விடத்திலும் நல்லதே என நபி சொல்லாத, குர்ஆனுக்கு எதிரான, பிற நபிமொழிகளுக்கும் முரணான கருத்து நபியின் மீது துணிந்து பொய்யாக இட்டுக் கட்டிக் கூறப்படுகிறது.
மத்ஹப் என்றாலே கழிவறை என்றாகி விட்ட போது அதில் நபி மீது பொய் எனும் அசுத்தம் நிறைந்திருப்பதில் வியப்பென்ன உள்ளது?
இப்படி இப்னு மஸ்வூது அவர்கள் தமது கருத்தாகக் கூறியதாக ஆதாரம் உள்ளது. குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் முரணாக அது உள்ளதாலும் இது வஹீ செய்தி அல்ல என்பதாலும் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
குபைப் (ரலி) ஷுஹதாக்களின் தலைவரா?
நபித்தோழர்களில் பலருக்கும் அவர்களின் பண்புகளுக்கேற்ப நபிகளார் பட்டப் பெயர்களை வழங்கி கௌரவித்து இருக்கிறார்கள்.
அபூபக்கர் (ரலி) அவர்களை சித்தீக் உண்மையாளர் என்றும்
காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் போர்வாள் எனவும்
ஃபாத்திமா (ரலி) அவர்களை சொர்க்கத்துப் பெண்களின் தலைவி என வர்ணித்தும்
ஜுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களை ஹவாரிய்யு என்று சிறப்பித்தும் இதுபோன்ற பல செய்திகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஒரு நபித்தோழரை, நபிகள் நாயகம் இவ்வாறு பட்டப்பெயர் வழங்கி அழைத்தார்கள், சிறப்பித்தார்கள் எனக் குறிப்பிடுவதாக இருந்தால் தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிட வேண்டும். பொய்யாக, நாமாகக் கற்பனை செய்து நபிகளாரின் பெயரில் கதை விடக்கூடாது; அது மகா பெரிய பாவமாகும்.
மத்ஹபு தான் அப்பாவத்தை துணிந்து செய்யுமே! இதிலும் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டத் தவறவில்லை.
குபைப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் ஷஹீத்களின் தலைவர் என்று கூறி சிறப்பித்ததாக ஹிதாயா நூலாசிரியர் கூறுகிறார்.
குபைப் (ரலி) அவர்கள் கொல்லப்படுமளவு துன்பத்தைப் பொறுத்துக் கொண்டார்கள். எனவே அவர்களை ஷுஹதாக்களின் தலைவர் என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டார்கள்.
ஹிதாயா, பாகம் 3, பக்கம் 277
இதுவும் வழக்கம் போல நூலாசிரியரின் கைவண்ணமே!
குபைப் (ரலி) அவர்கள் சத்தியத்திற்காகக் கொல்லப்படும் அளவு கடும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தான் கொல்லப்படும் சந்தர்ப்பத்தின் போது கூட இறைவனுக்காக இரண்டு ரக்அத் தொழ விரும்பி அதற்கு அனுமதி கேட்டு, தொழுகையையும் நிறைவேற்றினார்கள்.
இதைப் பின்வரும் சம்பவத்திலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்றை (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமின் பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (‘ஹத்தா’ என்ற) இடத்தில் இருந்த போது ‘ஹுதைல்’ குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி, உளவுப்படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின் தொடர்ந்து வந்தனர்.
உளவுப்படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது “இது ‘யஸ்ரிப்’ (மதீனா நகரின்) பேரீச்சம் பழம்’’ என்று சொல்லிக் கொண்டனர். எனவே, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின் தொடர்ந்து வந்து, இறுதியில் அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம் (ரலி) அவர்களும், அவர்களுடைய நண்பர்களும் இதை அறிந்த போது (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எங்களிடம் இறங்கிவந்து விட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்ய மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும், வாக்குறுதியும் தருகிறோம்’’ என்று கூறினர். அப்போது ஆஸிம் பின் சாபித் (ரலி) அவர்கள், “நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பி அவனது) பாதுகாப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு’’ என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப்படையினருடன் சண்டையிட்டு ஆஸிம் (ரலி) அவர்கள் உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர்.
இறுதியில் குபைப், ஸைத் (ரலி), மற்றொருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதிமொழியும், வாக்குறுதியும் (எதிரிகள்) அளித்தனர். அவர்களது உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) தங்கள் கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தங்களது அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், “இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்.’’ என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார், எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர். ஆனால், அவர் உடன்படவில்லை. எனவே, அவரை அவர்கள் கொலை செய்து விட்டனர்.
பிறகு, குபைப் (ரலி) அவர்களையும், ஸைத் பின் தஸினா (ரலி) அவர்களையும் கொண்டு சென்று மக்காவில் விலைக்கு விற்று விட்டனர். ஹாரிஸ் பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப் (ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்,) குபைப் (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஆமிரை பத்ருப் போரின் போது கொன்றிருந்தார்.
ஹாரிஸின் மக்களிடத்தில் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதங்கள் முடிந்து) அவரைக் கொல்ல, அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும்) வரையில் கைதியாக இருந்து வந்தார். (கொல்லப்படும் நாள் நெருங்கிய போது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் (ரலி) அவர்கள் இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள்.
(அதற்குப் பின் நடந்ததை அப் பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்கள்:
நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தமது மடியில் வைத்துக் கொண்டார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்த போது பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்து கொண்டார். அவரது கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், “இவனை நான் கொன்று விடுவேன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்’’ என்று கூறினார்.
குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்.
(பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து) ‘‘அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு’’ என்று அந்தப் பெண் கூறிவந்தார். (அவரைக் கொல்வதற்காக – மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டு வந்த போது, “இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்’’ என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.)
பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, “நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கி யிருப்பேன்’’ என்று கூறினார். அவர் தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் ஆவார்.
பிறகு “இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வாயாக!’’ என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு, “நான் முஸ்லிமாகக் கொல்லப்படும் போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும் போது, அவன் நாடினால் எனது துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான்’’ என்று (கவிபாடிக்) கூறினார்கள்.
பிறகு, உக்பா பின் ஹாரிஸ் என்பவன் குபைப் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் குபைப் (ரலி) அவர்களை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக!
இதுவே குபைப் (ரலி) அவர்களின் தியாகத்திற்கும் ஈமானிய உறுதிக்கும் ஆகச் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கும் போது. இதைச் சொல்லி குபைப் (ரலி) அவர்களை சமுதாயத்திற்கு நினைவுபடுத்தலாமே! அதை விட்டு ‘ஷுஹதாக்களின் தலைவர் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்’ என இல்லாததை, நபி சொல்லாததை ஏன் நபியின் பெயரால் அள்ளிவிட வேண்டும்?
குபைப் (ரலி) யை உயிர்த்தியாகிகளின் தலைவர் என்ற அடைமொழியைக் கொண்டு நபிகள் நாயகம் அழைத்ததாக எந்த ஆதாரப்பூர்வமான குறிப்பும் இல்லை. நபிகளார் இவ்வாறு அழைத்ததற்கு ஹதீஸ் ஆதாரம் எதுவுமில்லை என்றால் அது பொய் என்று தானே அர்த்தம். ஹிதாயா நூலில் அது தான் பக்கத்திற்குப் பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.