மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-4

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

எதற்கும் எல்லையுண்டு என்பார்கள். ஆனால் மத்ஹபு நூலான ஹிதாயாவில் நபி மீது புனையப்பட்ட பொய்களோ எல்லைகள் கடந்து தம் பயணத்தைத் தொடர்கின்றன. அப்பயணத் தொடர்ச்சியில் மற்றுமொரு செய்தியைத் தான் இப்போது நாம் அறியப் போகிறோம்.

திருமணம் என்பது…?

சிறுவர் சிறுமியருக்குப் பொறுப்பாளர் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறிவிட்டு அஸபாக்கள் தான் பொறுப்பாளர்களாவர் என்கிறார்.

(சிறார் திருமணத்தை இஸ்லாம் தடை செய்துவிட்டது)

வாரிசுரிமையில் பங்கு சொல்லப்பட்டவர்கள் தங்கள் பங்கை எடுத்தது போக மீதமுள்ளவற்றை எடுக்கும் உரிமை கொண்ட நெருங்கிய உறவுகளே அஸபாக்கள் ஆவர். தந்தை, பாட்டன், மகன், சகோதரர்கள் ஆகியோர் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பங்கீடு போக மீதமுள்ளவற்றை எடுக்கும் உரிமை படைத்தோர் ஆவர்.

இந்த அஸபாக்களில் ஒருவர் திருமணத்திற்கு வலீயாக – பொறுப்பாளராக இருக்கலாம் என்பது தான் இவர் சொல்ல வரும் கருத்து. பொறுப்பாளராகத் தந்தை இல்லாத பட்சத்தில் பெண்ணின் முக்கிய – நெருங்கிய உறவினர் வலீயாக இருக்கலாம் என்பதில் நாம் உடன்படுகிறோம்.

ஆனால் இதிலே மத்ஹபு செய்வதென்ன? இக்கருத்தை நிலைநாட்ட தவறான முறையில் நபிகள் நாயகம் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.

الهداية شرح البداية – (1 / 198)

قوله عليه الصلاة والسلام النكاح إلى العصبات

திருமணம் என்பது அஸபாக்களின் வசமுள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198

அஸபாக்களில் யார் வேண்டுமானாலும் பெண்ணின் வலீயாக இருக்கலாம் என்று ஒரு கருத்தை உதித்து விட்டு இதை நபிகள் நாயகமே சொல்லியுள்ளார்கள் என்கிறார். நபிகளார் இச்செய்தியைச் சொன்னார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

இந்தச் செய்தி எந்த நூலில் உள்ளது? புகாரியிலா? முஸ்லிமிலா? திர்மிதியிலா? நஸயீயிலா? அபூதாவூதிலா?

இப்படிப் பட்டியலிட்டு, ஆதங்கப்பட்டு என்ன பலன்? யார் பதிலளிக்கப் போகிறார்கள். எனவே அடுத்த செய்தியைப் பார்ப்போம்.

சிறுவன் – பைத்தியக்காரனின் தலாக் செல்லாது

இஸ்லாத்தில் சிறார் திருமணத்திற்கு அனுமதி கிடையாது என்பதை முன்னரே நினைவுபடுத்தியுள்ளோம். இது அதற்குரிய ஆதாரங்களைப் பதிவிடும் களமல்ல. எனவே நபி பெயரைப் பயன்படுத்தி இதில் என்ன திருகுதாளம் செய்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்போம்.

சிறுவன் – பைத்தியக்காரன் தலாக் கூறினால் அது செல்லாது என்று கூறிவிட்டு அது பற்றி நபிகள் நாயகம் கூறியதாகப் பொய்யாக ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்.

الهداية شرح البداية (1/ 229)

ولا يقع طلاق الصبي والمجنون والنائم لقوله عليه الصلاة والسلام كل طلاق جائز إلا طلاق الصبي والمجنون

சிறுவன், பைத்தியக்காரன், தூங்குபவன் ஆகியோரது தலாக் செல்லாது. ஏனெனில் சிறுவன் பைத்தியக்காரனின் தலாக்கைத் தவிர அனைத்து தலாக்கும் செல்லுபடியாகும் என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 229

இப்படி நபிகளார் நவின்றுள்ளார்களா? என்று தேடினால் நமக்கு கிடைக்கும் விடை என்ன தெரியுமா?

மூளை குழம்பியவனின் தலாக்கைத் தவிர அனைத்து தலாக்கும் செல்லுபடியாகும் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி திர்மிதி 1191ல் பதிவாகியுள்ளது.

இது முற்றிலும் பலவீனமான செய்தி. இதில் இடம் பெறும் அதாஃ பின் அஜ்லான் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் திர்மிதி அவர்களே அச்செய்தியின் தொடர்ச்சியில் குறிப்பிடுகிறார். பலவீனமான இச்செய்தியைக் கணக்கில் சேர்த்தால் கூட நூலாசிரியரின் பொய்ச் செய்திக்கு விடை கிடைக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

நூலாசிரியர் என்ன சொன்னார்? சிறுவன், பைத்தியக்காரன் இருவரது தலாக்கைத் தவிர மற்ற தலாக் செல்லும் என்று நபிகள் நாயகம் கூறியதாகக் குறிப்பிட்டார். அப்படி எனில் நபிகளாரின் வார்த்தைகளில் இதைக் குறிப்பிட வேண்டுமா? இல்லையா? எங்கும் இவர் குறிப்பிட்ட வார்த்தைகளில் நபியின் செய்தி இல்லை. பலவீனமான செய்தியில் கூட மூளை குழம்பியவனைப் பற்றி மட்டும் தான் உள்ளது. அதில் இவர் சிறுவனையும் சேர்த்து ஒரு தனிச்செய்தியாக்கி நபி பெயரையும் இணைத்து புத்தகத்தின் பக்கத்தை நிரப்பிக் கொண்டார்.

சிறுபிள்ளைக்குச் சோறு ஊட்டும் தாய்மார்கள் கொஞ்சம் சோறு, கொஞ்சம் கதை என்ற பாணியில் ஊட்டுவார்கள். நூலாசிரியரும் அதே பாணியில் பயணிக்கிறார். கொஞ்சம் நபி சொன்னது – அதுவும் பலவீனம் – அத்துடன் தன் கருத்து என இரண்டையும் கலந்து கட்டி செய்தியாகத் தருவதில் ஹிதாயா நூலாசிரியர் தனித்துத் தெரிகிறார்.

இதோ தலாக்கிலும் கூட இதே போன்ற விஷமத்தைச் செய்துள்ளார்.

யார் சத்தியம் செய்து அதனுடன் இன்ஷா அல்லாஹ் கூறிவிட்டாரோ அவர் சத்தியத்தை முறித்தவராக மாட்டார் என்று நபி சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. (திர்மிதி 1532) அது பலமானதா? பலவீனமானதா? என்பது தனி.

ஆனால் இந்தச் செய்தியை ஹிதாயா நூலாசிரியர் எப்படி அழகு சேர்த்துக் கூறுகிறார் பாருங்கள்.

الهداية شرح البداية (1/ 254)

لقوله عليه الصلاة والسلام من حلف بطلاق أو عتاق وقال إن شاء الله تعالى متصلا به فلا حنث عليه

யார் தலாக் விடுவதாகவோ, விடுதலை செய்வதாகவோ சத்தியம் செய்து பிறகு இன்ஷா அல்லாஹ் என்று அதனுடன் இணைத்துக் கூறி விடுகிறாரோ அவர் சத்தியத்தை முறித்தவராக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 254

நபி சொன்ன செய்தியில் சத்தியம் செய்து அதனுடன் இன்ஷா அல்லாஹ் கூறினால் என்றுதான் வருகிறது. அதில் இவர் மனைவியை தலாக் விடுவதாக – அடிமையை விடுதலை செய்வதாக சத்தியம் செய்து என்று தனக்கு தோன்றுவதையும் தான் எழுதும் தலைப்புக்குத் தேவையானதையும் சேர்த்து, கோர்த்து, செருகிச் சொல்கிறார். அன்னாரது அலட்சியத்தில் நாம் கருத்துச் சொல்ல என்னவிருக்கிறது?

இதுபோன்ற பொய்களும் இடைச்செருகலும் நிறைந்தது தான் ஹிதாயா என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி!