138. மாதவிலக்கை தள்ளிப் போடும் மாத்திரை பயன்படுத்தலாமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

ஹஜ், உம்ரா செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் அவர்கள் தவாஃப், ஸயீ போன்ற வணக்கங்களைச் செய்வதற்குத் தாமதமாகின்றது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இதைத் தவிர்ப்பதற்காக மாதவிலக்கைத் தள்ளிப் போடுகின்ற மாத்திரை, ஊசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா?

பதில்

இவ்வாறு ஊசி, மாத்திரை எடுத்துக் கொள்ளலாம் என்று சவூதி ஆலிம்கள் மார்க்கத் தீர்ப்பு அளிக்கின்றனர். இது தவறாகும்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 5:3)

இந்த வசனத்தில் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்கிறான். அதாவது ஹஜ்ஜின் போது பெண்களுக்கு ஏற்படுகின்ற இந்த மாதவிலக்குப் பிரச்சனைக்கும் உரிய தீர்வை மார்க்கம் தந்து விட்டது.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன்: 2:195)

நமக்கு நாமே நாசத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது, நாசத்தை விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான். மாதவிலக்கு என்பது இயற்கை! அதை மாற்றுவது உடலில் வேறுவிதமான நோயை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்படுத்திவிடும். அதனால் நமது உடலுக்கு நோயை விளைவிக்கின்ற இந்தக் காரியத்தைக் குர்ஆன் தடை செய்கின்றது. மாதவிலக்கு எனும் இயற்கை செயல்பாட்டை மாத்திரைகள் மூலம் மாற்றி உடலுக்குக் கேடு விளைவிப்பதால் இதைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடையாகும்.