மாதவிடாய் நின்றபின் குளிக்காமல் கணவனுடன் சேரலாமா?
மாதவிடாய் நின்றபின் குளிக்காமல் கணவனுடன் சேரலாமா?
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த பிறகே அவர்களுடன் கணவன்மார்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222) 2
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் (2 : 222)
தூய்மையாகும் வரை அவர்களை நெருங்க வேண்டாம் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. மாதவிடாய் நின்ற பின் தூய்மையாகிறார்களா? அல்லது மாதவிடாய் நின்று குளித்த பின் தூய்மையாகிறார்களா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. மிக அதிகமான அறிஞர்கள் குளித்த பின்னர் தான் தூய்மை அடைகிறார்கள் என்று கூறுகின்றனர். மிகச் சில அறிஞர்கள் மாதவிடாய் முழுமையாக நின்று விட்டால் அவர்கள் தூய்மையடைந்து விட்டார்கள் எனக் கூறுகின்றனர்.
இது குறித்து ஹதீஸ்களின் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விதமாகப் பொருள் கொள்வதற்கும் இவ்வசனம் இடம் தருகிறது என்றாலும் பேணுதலான வழிமுறையை எடுத்துக் கொள்வதே பாதுகாப்பானது. குளித்து விட்டுத் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற கருத்து தான் பேணுதலானதாகும்.