மஹ்ஷரில் மனிதனின் நிலை-2

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

  1. கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை
  2. முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை
  3. நல்லவர்களின் நிலைகள் இஹ்ராமோடு இறந்தவர்களின் நிலை
  4. ஷஹீதானவர்களின் நிலை
  5. பாங்கு சொல்பவர்களின் நிலை
  6. அங்கத்தூய்மை செய்தவர்களின் நிலை

முன்னுரை

குறிப்பிட்ட தீமைகளைச் செய்தவர்கள் மஹ்ஷரில் என்ன நிலையை அடைவார்கள் என்பது பற்றிப் பல்வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றையும், மஹ்ஷரில் நல்லவர்களின் நிலை எப்படியிருக்கும் என்பதையும் இந்த உரையில் பார்ப்போம்.

கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை

ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான். எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களது செல்வத்தில் இருந்து கொஞ்சமாவது ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். ஒருபோதும் கஞ்சத்தனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இதற்கு நேர்மாற்றமாகவே பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள்.

தீமையான வீணான காரியங்களுக்கு செலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் நல்ல காரியங்களுக்குச் செலவு செய்ய கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். இத்தகைய மக்கள் மறுமை நாளிலே மற்றவர்கள் கண் முன்னால் தங்களது செல்வத்தின் மூலம் கழுத்து நெறிக்கப்படுவார்கள். கருமியாக இருந்தது எந்தளவிற்குக் குற்றம் என்று உணரும் விதத்தில் நடத்தப்படுவார்கள்.

 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْـرًا لَّهُمْ‌ؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ‌ؕ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்குச் சிறந்தது‘ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். 

(அல்குர்ஆன்: 3:180)

முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை

நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதை விடுத்து, அடுத்தவர் மெய்சிலிர்க்க வேண்டும்; பாராட்டிப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தோடு அமல் செய்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. இவ்வாறு மற்றவர்களின் கைத்தட்டல்களுக்காக செயல்படுவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியைத் தரமாட்டான்.

மேலும் இவர்களை மறுமை நாளில் மற்ற மக்களுக்கு மத்தியில் அல்லாஹ் அடையாளப்படுத்துவான். மஹ்ஷரில் நம்பிக்கை கொண்ட மக்கள் படைத்தவனுக்கு ஸஜ்தா செய்யும் போது இவர்களால் மட்டும் ஸஜ்தா செய்ய முடியாது. இவர்களின் முதுகுகள் கட்டை போன்று மாற்றப்பட்டுவிடும். இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.

يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள்.

முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),
(புகாரி: 4919)

நல்லவர்களின் நிலைகள்

இஹ்ராமோடு இறந்தவர்களின் நிலை

 

நாடு, நிறம், மொழி, இனம் என்று பல வகையில் மனிதர்கள் வேறுபட்டு இருந்தாலும் அனைவரும் சமமானவர்கள்; இறைவனின் அடிமைகள்; அவர்களுக்கு மத்தியில் எந்தவொரு உயர்வு தாழ்வும் கிடையாது என்று பாடம் புகட்டும் சமத்துவத்தைப் போதிக்கும் புனித இடம் மக்காவில் இருக்கும் கஅபா ஆலயமாகும். தீண்டாமையை உடைத்து மனித ஒற்றுமையை உயிர்ப்பிக்கும் இந்த ஆலயத்தில் உலகெங்கும் இருந்து வரும் மக்கள் பலர் இஹ்ராம் கட்டிய நிலையில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுகிறார்கள்.

இங்கே வரும் மக்கள்வெள்ளம் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்நேரத்தில் சிலர் எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசலில் சிக்குவதன் மூலம் அல்லது அங்கே இருக்கும்  சூழ்நிலை சமாளிக்க முடியாததன் மூலம் இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்து விடுகிறார்கள். இவ்வாறு இறந்து போன மக்கள், மஹ்ஷர் மைதானத்தில் சிறப்பான நிலையில் இருப்பார்கள். இவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ بِعَرَفَةَ ، إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ – أَوْ قَالَ: فَأَوْقَصَتْهُ – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ القِيَامَةِ مُلَبِّيًا»

(இஹ்ராம் கட்டிய) ஒருவர் அரஃபா மைதானத்தில் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தனது வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் நீராட்டி இரு ஆடைகளால் பிரேத உடை (கஃபன்) அணிவியுங்கள்; அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் கட்டியிருந்த) அவர் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்..) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூற்கள்:(புகாரி: 1265),(திர்மிதீ: 937, 874)

ஷஹீதானவர்களின் நிலை

சத்திய மார்க்கத்தின் பாதையில் அநீதிகளை, அக்கிரமங்களை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைபவர்கள் இருக்கிறார்கள். மறுமை வெற்றிக்காக நற்காரியங்களில் ஈடுபடும் வேளையில் உயிரிழந்து விடுபவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இறைவழியில் இருக்கும் போது இறந்துப் போகும் உயிர்த் தியாகிகளை, மக்களெல்லாம் ஒன்று திரண்டு நிற்கும் மறுமை நாளில் வல்ல இறைவன் கண்ணியப்படுத்துவான்.

மறுமைப் பேறுக்காக உயிரையே தியாகம் செய்த அவர்களின் அரிய காரியத்திற்காக அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் அந்தஸ்தை அங்கிருப்பவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் அவர்களை அல்லாஹ் நடத்துவான்.

عَجِبَ اللَّهُ مِنْ قَوْمٍ يَدْخُلُونَ الجَنَّةَ فِي السَّلاَسِلِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 3010)

كُلُّ كَلْمٍ يُكْلَمُهُ  المُسْلِمُ فِي سَبِيلِ اللَّهِ، يَكُونُ يَوْمَ القِيَامَةِ كَهَيْئَتِهَا، إِذْ طُعِنَتْ، تَفَجَّرُ دَمًا، اللَّوْنُ لَوْنُ الدَّمِ، وَالعَرْفُ عَرْفُ المِسْكِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயமும் தாக்கப்பட்ட போது, இருந்ததுபோன்றே இரத்தம் பீறிட்ட நிலையில் இருக்கும். அந்த நிறம் இரத்தத்தின் நிறத்தில் இருக்கும்; அதன் வாடையோ கஸ்தூரி வாடையாக இருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 237) 

பாங்கு சொல்பவர்களின் நிலை

படைத்தவனை வணங்குவதற்காகவே நாமெல்லாம் படைக்கப் பட்டிருக்கிறோம். அவ்வாறு அவனை வணங்குவதற்காக அனைத்து மக்களையும் அழைக்கும் அழகிய செயலே பாங்கு சொல்வதாகும். இக்காரியத்தில் ஆர்வம் காட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும். பெரும்பாலான முஸ்லிம்கள் பாங்கின் வாசகங்களைத் தெரியாதவர்களாக அல்லது தெரிந்தாலும் சொல்வதற்கு வெட்கப்படுவர்களாக, தயங்குபவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.

பாங்கு சொல்வதால் கிடைக்கும் சிறப்பை அறிந்தால் இவ்வாறு இருக்க மாட்டார்கள். பாங்கு சொல்லும் இறைப்பணியை மேற்கொள்ளும் மக்கள் மற்ற மக்களிலிருந்து வேறுபடும் விதத்தில் கழுத்து உயர்ந்து, கண்ணியமான தோற்றத்தில் இருப்பார்கள். எல்லா மனிதர்களும் சங்கமித்து நிற்கும் போது இவர்கள் தனித்தன்மையோடு, தனித்துத் தென்படுவார்கள். இந்தத் தகுதி பாங்கு சொல்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

كُنْتُ عِنْدَ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَجَاءَهُ الْمُؤَذِّنُ يَدْعُوهُ إِلَى الصَّلَاةِ فَقَالَ مُعَاوِيَةُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ»

(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், “மறுமைநாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ்
நூல்: (முஸ்லிம்: 631)

அங்கத்தூய்மை செய்தவர்களின் நிலை

நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் பிரபஞ்சத்தின் இரட்சகனுக்கு நன்றி செலுத்துவதற்கு, அவனைத் துதிப்பதற்கு நாள்தோறும் ஐந்து நேரத் தொழுகையை முஸ்லிம்கள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இப்படி இறைவனைத் தொழுவதற்கு வேண்டி அங்கத்தூய்மை (உளூ) செய்பவர்கள் மறுமையில் சிறப்பான அடையாளத்துடன் தென்படுவார்கள். எல்லா மக்களும் ஒன்றுதிரண்டிருக்கும் அந்தப் பெருவெளியில் கை கால்கள் பிரகாசிக்கும் வகையில் இருப்பார்கள். பளிச்சென்று மின்னும் தோற்றத்தை வைத்து இவர்கள் உளூ செய்வதன் வாயிலாக தங்களது கை கால்களைக் கழுவி தூய்மையைப் பேணியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

“(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் “அல்கவ்ஸர்‘ எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) “அதன்‘ நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) “அய்லா‘ நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனை விட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை.

ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும்.

அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 416) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மறுமை நாளில்) எனது சமுதாயத்தார் எனது (அல்கவ்ஸர் எனும்) தடாகத்திற்கு வருவார்கள். ஒருவர் தமது ஒட்டகத்தை விட்டும் பிறரது ஒட்டகத்தை விரட்டிவிடுவதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் சிலரை விரட்டுவேன்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் நபியே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆம்; வேறெவருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். உங்களில் ஒரு குழுவினர் என்னைவிட்டுத் தடுக்கப்படுவர். அவர்களால் (என்னருகில்) வந்து சேரமுடியாது. அப்போது நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்” என்பேன்.

அப்போது  வானவர் ஒருவர் என்னிடம், “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாய் உங்களது மார்க்கத்தில்) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 417)

رَقِيتُ مَعَ أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ المَسْجِدِ، فَتَوَضَّأَ، فَقَالَ: إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ القِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الوُضُوءِ
فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ»

பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூவின் உறப்புகளிலுள்ள அடையாளங்களால் “(பிரதான) உறுப்புக்கள் பிரகாசிப்போரே!‘ என்று அழைக்கப்படுவார்கள்.

எனவே, உங்களில் எவருக்குத் (தமது உளூவில் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர் (ரஹ்)
நூல்: (புகாரி: 136) , (முஸ்லிம்: 415) 

இந்த உலகத்தில் இருந்த போது  ஒவ்வொருவரும் எந்த விதத்தில் வாழ்ந்தார்கள் என்பதை மஹ்ஷர் மைதானத்தில் அவர்களுக்கு இருக்கும் நிலையை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். நல்லவர்களாக வாழ்ந்தார்களா? கெட்டவர்களாக வாழ்ந்தார்களா? நிலையான மறுமை வாழ்க்கையில் எவ்வாறு இருப்பார்கள்? என்பதை அவர்களுக்கு அல்லாஹ் அளித்திருக்கும் அடையாளங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

எனவே, அனைவரும் எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் நாளில் நல்ல நிலையில், சிறப்பான தோற்றத்தில் இருப்பதற்காக நாம் படைத்தவனிடம் பிராத்திக்க வேண்டும். மேலும் மறுமையில் நல்லவர்களுடன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்; ஒருபோதும் கெட்டவர்களின் கூட்டத்தில் கெட்ட நிலையில் இருந்து விடக்கூடாது என்று எண்ணம் கொண்டு அதற்கேற்ப அமல் செய்ய வேண்டும். அந்த வகையில் மார்க்கம் தடுத்த காரியங்களை விட்டு விலகி, நற்காரியங்களில் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இதற்கு வல்ல இறைவன் நமக்கு துணை புரிந்து அருள்புரிவானாக!

ஆகவே மறுமையில் அல்லாஹ்விற்கு முன் நிற்கும் நாளை அஞ்சி பயந்து இவ்வுலக வாழ்கையில் நல்லடியார்களாக வாழ்ந்து மறையும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக.! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.