மஹ்தீ என்பவர் யார்
மஹ்தீ என்பவர் யார்
எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சில போலிகள் முஸ்லிம் சமுதாயத்தை ஒவ்வொரு காலத்திலும் வழி கெடுத்து வருகின்றனர்.
முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் ஆன்மீக குருவாகவோ மார்க்கச் சட்ட நிபுணராகவோ திகழ்வார் என்றோ ஆதாரப்பூர்வமான எந்த முன்னறிவிப்பும் இல்லை. அவர் வலிமை மிக்க மன்னராக இருப்பார் என்பது தான் முன்னறிவிப்பின் முக்கிய சாரம். அவரது ஆட்சி பரந்து விரிந்து இருக்கும். அவரது ஆட்சியில் செல்வம் செழித்து ஓடும். நீதியும் நேர்மையும் கோலோச்சும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும்.
மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்
நூல் அபூதாவூத்
பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் அபூதாவூத்
அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் திர்மிதி
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மஹ்தீ என்ற பெயரில் ஒரு மன்னர் வருவார் என்று முன்னறிவிப்புச் செய்கின்றன. இந்த முன்னறிவிப்பில் நாம் செயல்படுத்துவதற்கு ஒரு விஷயமும் இல்லை. நமது காலத்தில் அப்படி ஒருவர் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிபு நிறைவேறி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அப்படி வராவிட்டால் எதிர்காலத்தில் அவர் வருவார் என்று கருதிக் கொள்ள வேண்டும். இதைத் தவிர மார்கக் ரீதியாக மஹ்திக்கு எந்த முக்கியத்துவமும் இல்ல.
மிர்சா குலாம் காதியானி என்பவன் தன்னை மஹ்தீ என்று சொல்லிக் கொண்டான். வாக்களிக்கப்பட்ட மஹ்தீ என்று வாதிட்டான். அவன் பொய்யன் என்பதற்கு மேறகண்ட நபி மொழிகள் போதுமான ஆதாரமாகும். அவனுடைய பெயர் முஹம்மத் அல்ல. அஹ்மதும் அல்ல. அவனுடைய பெயர் குலாம் அஹ்மத் (அதாவது அஹ்மதின் அடிமை.) நபிகள் நாயகத்தின் அடிமை என்பது தான் இவனது பெயர் என்பதால் இவன் நிச்சயம் மஹ்தீ அல்ல. மேலும் இவனது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் அல்ல.
எனவே இவன் மஹ்தீ கிடையாது என்பது தெளிவாகி விட்டது. மேலும் இவன் அரபு நாட்டை ஆளவும் இல்லை. நீதியால் பூமியை நிரப்பவும் இல்லை. இவன் பாகிஸ்தானில் கூட ஆளவில்லை. முஸ்லிமல்லாத சிறுபான்மை பிரிவாகத் தான் இவனும் இவனைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். எனவே இவன் மஹ்தீ அல்ல என்பது நூறு சதவீதம் உண்மை.
இது போல் ஷியாக்கள் முஹம்மத் பின் அல்ஹசன் அலஸ்கரீ என்பவர் தான் மஹ்தீ என்று கூறுகின்றனர். இவர் அல்காயின் எனவும் குறிப்பிடப்படுவார். இவரது பெயர் நபிகள் நாய்கத்தின் பெயராக இருந்தாலும் இவரது தந்தை பெயர் ஹசன் என்பதாகும். அப்துல்லாஹ் அல்ல. எனவே இவர் மஹ்தீ அல்ல என்பது உறுதி. மேலும் அவர் பூமியை ஆளவுமில்லை; நீதியால் நிரப்பவுமில்லை.
இது போல் நம் தமிழகத்தில் கூட கிருஷ்னகிரி மாவட்டம் பாலக்கோட்டிலும் ஈரோட்டிலும் மஹ்தியாக்கள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர். யாரோ ஒருவர் ஒரு காலத்தில் தன்னை மஹ்தீ எனக் கூற அதை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதுவும் கட்டுக்கதையாகும் இவர் ஃபாத்திமாவின் வழித்தோன்றல் என்பதற்கு ஆதாரம் இல்லை. இவரும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது அல்ல.
மேலும் இவர் பாலக்கோட்டைக் கூட ஆட்சி செய்யவில்லை.
மஹ்தீ என்பவர் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு மன்னரே தவிர முரீது கொடுத்து மக்களை வழி கெடுப்பவர் அல்ல. இந்த உண்மை விளங்காத மக்களிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் தான் மஹ்தீ என்று வாதிட்டு மக்களை வழிகெடுத்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.