137. மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியதா?
மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியது என்று சொல்கிறார்களே, அது எந்த இடம்?
இல்லை
மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்தபடியாக, மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது சிறப்புக்குரியதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி: 1190),(அஹ்மத்: 14167)
மஸ்ஜிதுந்நபவீக்குப் பயணம் மேற்கொள்வதும் இந்த அடிப்படையில் தான் அமைய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
இவ்வாறு மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்பவர்கள் அங்கு எந்த இடத்திலும் தொழுது கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த இடத்திற்கு மேற்கண்ட சிறப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் ஆயிரம் மடங்கு சிறந்தது என்ற அந்தஸ்து மஸ்ஜிதுந்நபவீ முழுமைக்கும் உரியதாகும்.