மவ்வலிது ஓதாத உணவு ஏன் ஹராம்?
பூஜை செய்தவைகளும் மவ்லிது பாத்திஹா சாப்பாடும் ஓன்றா?
? ஆகஸ்ட் 2004 இதழில், தீபாவளியன்று பூஜை செய்யாத பொருட்களை மாற்று மதத்தினர் தந்தால் சாப்பிடலாம் என்று கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் மவ்லிது, ஃபாத்திஹா, கந்தூரி போன்றவற்றில் வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிடலாமா? இரண்டு தரப்பினரின் நோக்கமும் ஒன்று தானே? என்று என் நண்பர் வினவுகின்றார். விளக்கவும்.
பதில்
மாற்று மதத்தினர் பண்டிகையின் போது படைப்பதற்கும், நம்மவர்கள் மவ்லிதுக்குப் படைப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மாற்று மதத்தினர் உணவைத் தயாரிக்கும் போதே சாமிக்குப் படைக்கும் நோக்கத்தில் மட்டும் தயாரிப்பதில்லை.
இதில் படைக்காமல் தனியாக எடுத்து முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றார்கள். அந்த நோக்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தவும் செய்கின்றார்கள்.
ஆனால் மவ்லிது, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்லிது ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள்.
அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். இரண்டு தரப்பினரின் நோக்கத்திற்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. எனவே முழு உணவையும் எடுத்து வைத்து மவ்லிது ஓதாவிட்டாலும் அது நேர்ச்சையாக எண்ணியே தயாரிக்கப்படுவதால் அதைச் சாப்பிடக் கூடாது.