4) மற்ற ஒழுங்குகள்
எளிமையான திருமணம்
திருமணங்கள் மிகவும் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. பிறர் மெச்ச வேண்டுமென்ப தற்காகவும், தம்முடைய செல்வச் செழிப்பு உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் திருமணங்கள் நடத்தப்படக் கூடாது.
வீண் விரயத்தையும், பிறர் மெச்ச வேண்டும் என்று காரியங் கள் செய்வதையும் திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது. வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன்: 6:141) ➚
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
(அல்குர்ஆன்: 7:31) ➚
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 17:26) ➚, 27)
குறிப்பாக திருமணங்கள் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(அஹ்மத்: 23388)
திருமண விருந்து
திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.
பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.
மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 371, 2893)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 டீ லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
(புகாரி: 5172)
ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 5168, 5171, 7421)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய வலீமா விருந்தில் ஒரு ஆட்டை வலீமாவாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும். எனவே விருந்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களையும் தவிர்க்க வேண்டும்.
வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது.
செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 5177)
வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸின் தொடரில் யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.
விருந்தை ஏற்பது அவசியமென்றாலும் விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடந்தால், அல்லது தீய நடத்தை உடையவரால் விருந்து வழங்கப்பட்டால் அதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும்.
நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்று விட்டார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸயீ 5256
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழியைப் பின்பற்றி நபித்தோழர்களும் இந்த விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொண்டுள்ளனர்.
அபூமஸ்வூத்(ரலி) அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா? எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டு, உடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள்.
நூல்: பைஹகீ பாகம்:7, பக்கம் : 268
என் தந்தை காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். என் தந்தை மக்களை அழைத்தார். அழைக்கப் பட்டவர்களில் அபூ அய்யூப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த போது பட்டுத் துணியால் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டதைக் கண்டார்கள். என்னைக் கண்டதும் அப்துல்லாஹ்வே! நீங்கள் சுவர்களுக்கு பட்டால் அலங்காரம் செய்கிறீர்களா? எனக் கேட்டார்கள். பெண்கள் எங்களை மிகைத்து விட்டனர் என்று என் தந்தை கூறினார். அதற்கு அபூ அய்யூப் (ரலி) அவர்கள் உம்மை பெண்கள் மிஞ்சி விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லை என்றார்கள். மேலும் உங்கள் உணவைச் சாப்பிடவும் மாட்டேன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்டேன் என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றார்கள்.
தப்ரானியின் கபீர் பாகம்: 4, பக்கம்: 118
மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.
இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் மலிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
நாள் நட்சத்திரம் இல்லை
திருமணத்தை நடத்துவதற்கு நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. அவரவரின் விதிப்படி நடக்க வேண்டியவை யாவும் நடக்கும் என்ற நம்பிக்கையுடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் நல்லது ஏற்படும் என்றோ, குறிப்பிட்ட இன்னொரு நாளில் கெட்டது ஏற்படும் என்றோ நம்ப முடியாது.
வளர்பிறையில் திருமணம் நடத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்றோ, தேய் பிறையில் நடத்தினால் தேய்ந்து விடும் என்றோ கிடையாது. இப்படியெல்லாம் நம்புவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
வளர்பிறை பார்த்து, நல்ல நாள் பார்த்து செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் முறிந்து விடுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதிலிருந்தும் இது மூட நம்பிக்கை என்பதை உணரலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த அரபியர் ஷவ்வால் மாதத்தை பீடை மாதம் என நம்பி அந்த மாதத்தில் நல்ல நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.
இதுபற்றி ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்திலேயே திருமணம் செய்தார்கள். ஷவ்வால் மாதத்திலேயே உறவும் கொண்டார்கள். அவர்களின் மனைவியரில் என்னை விட அவர் களுக்கு விருப்பமானவர் எவர் இருந்தார்? என்று குறிப்பிட்டார்கள்.
(முஸ்லிம்: 2551), நஸயீ 3184
எனவே திருமணத்தை எந்த மாதத்திலும் நடத்தலாம். எந்த நாளிலும் நடத்திலாம். எந்த நேரத்திலும் நடத்தலாம். குறிப்பிட்ட நாளையோ, நேரத்தையோ கெட்டது என்று ஒதுக்குவது கடுமையான குற்றமாகும்.
ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 4826, 6181, 7491)
எனவே ஒரு நாளை கெட்ட நாள் என்று கூறினால், நம்பினால் அல்லாஹ்வையே கெட்டவன் எனக் கூறிய, நம்பிய குற்றம் நம்மைச் சேரும்.
திருமண துஆ
நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா….. என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை. தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.
ஆதம்-ஹவ்வா போல் வாழ்க! அய்யூப்-ரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.
அந்த நபிமார்களும் அவர்களின் மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது. அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக் கேட்பது அர்த்தமற்றதாகும்.
உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ பின்பற்ற வேண்டாம் என்று அல்குர்ஆன் கூறுகிறது.
(அல்குர்ஆன்: 7:38) ➚
எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக வேறு துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.
மணமக்களுக்கு நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச் செய்துள்ளனர்.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது பாரகல்லாஹு லக (அல்லாஹ் உனக்கு பரகத் – புலனுக்கு எட்டாத பேரருள் – செய்வானாக) எனக் கூறினார்கள்.
(புகாரி: 5155, 6386).)
இதை ஆதாரமாகக் கொண்டு பாரகல்லாஹு லக என்று கூறி வாழ்த்தலாம்.
பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும் என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத்: 15181)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(திர்மிதீ: 1011),(அபூதாவூத்: 1819),(அஹ்மத்: 8599)
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக என்பது இதன் பொருள். ஒவ்வொருவரும் இந்த துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.