மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!

வாழ்வாதாரம் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு விட்டான்.

கார் டிரைவர் வேலைக்கு வந்தேன்; ஆனால் எனது கஃபீல் என்னை காட்டில் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலையில் தூக்கிப் போட்டு விட்டான். கம்பெனியில் மேனேஜர் என்று சொல்லி என் ஏஜண்ட் என்னை அனுப்பி வைத்தான்; இங்கு என்னை சமையல் வேலையில் தள்ளி விட்டான்.

எட்டு மணி நேர டூட்டி, இரண்டு மணி நேரம் ஓட்டி (ஓவர் டைம்) என்றார்கள்; ஆனால் இங்கு 18 மணி நேர டூட்டி; உண்ண உணவில்லை; உறங்க நேரமில்லை. பகல் நேரத்தில் கடுமையான வெயில்! இரவு நேரத்தில் தாங்க முடியாத குளிர்!

அதனால் இங்கிருந்து தப்பிப்பதற்கும் தாயகம் திரும்புவதற்கும் என்ன வழி? ஏது வழி? இந்த வேதனையிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா? இந்தச் சோதனையிலிருந்து விமோசனம் கிடைக்குமா என்று அழுது புலம்புவான். தன் சொந்தபந்தம், தனது ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்று ஒவ்வொரு வட்டமாக உதவி தேடி அணுகுவான். தன்னை விடுவிக்கவும் அந்த வெளிநாட்டிலிருந்து வெளியேற்றவும் முயற்சி செய்வான்.

இப்படித் தனக்கு வாய்க்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்துவான். தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் தப்பவித்துக் கொள்ளவும் அத்தனை வாசல்களிலும் போய் கதவை தட்டுவான். வேறு எந்த வழியும் இல்லையென்றால் இதற்கு அரபகங்களில் இருக்கின்ற ஒரே வழி சிறையில் மாட்டுவது தான். அப்படி சிறையில் மாட்டி தாயகத்திற்குத் திரும்பி விடுவான்.

இப்படி மானத்தை, மரியாதையை இழந்தேனும் அடுத்தவர் கையைப் பிடித்து காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்டாவது அரபு நாட்டிலிருந்து தப்பி, தாயகம் திரும்பி விடுவான். இது இம்மையில் ஏற்படும் ஒரு சோதனை. இப்போது இந்த நிலையை மறுமையோடு சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

மனிதனின் மறுமை நோக்கிய பயணத்தில் முதன் முதலில் அவன் சந்திப்பது மரணவேளை தான். அந்த மரணவேளையில், உயிர் கைப்பற்றப்படும் போது மறுமை என்றால் என்னவென்று கண்ணெதிரே பார்த்து விடுகின்றான். அப்போது அவன் வைக்கின்ற கோரிக்கை இது தான்.

حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ
لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99,100)

மரணத் தறுவாயிலேயே ஊருக்கு, உலகுக்குத் திரும்ப அனுப்பி வையுங்கள் என்று கேட்கவும் கெஞ்சவும் ஆரம்பித்து விடுவான். ஆனால் அவனது இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விடும்.

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُولَٰئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا

தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் “நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்’’ எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

(அல்குர்ஆன்: 4:18)

மறுமையில் எழுப்பப்பட்டவுடன், நரகத்தைப் பார்த்தவுடன் அந்தக் காட்சியை திருக்குர்ஆன் இதோ படம் பிடித்துக் காட்டுகின்றது.

يُّبَصَّرُوْنَهُمْ‌ؕ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ‏
وَ صَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ‏
وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ

وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ

அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.

(அல்குர்ஆன்: 70:11-14)

وَلَوْ تَرَىٰ إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُو رُءُوسِهِمْ عِنْدَ رَبِّهِمْ رَبَّنَا أَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ

குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலை குனிந்து, “எங்கள் இறைவா! பார்த்து விட்டோம். கேட்டு விட்டோம். எனவே எங்களைத் திருப்பி அனுப்பு! நல்லறம் செய்கிறோம். நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்’’ என்று கூறுவதை நீர் காண வேண்டுமே!

(அல்குர்ஆன்: 32:12)

وَلَوْ تَرَىٰ إِذْ وُقِفُوا عَلَى النَّارِ فَقَالُوا يَا لَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِآيَاتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
بَلْ بَدَا لَهُمْ مَا كَانُوا يُخْفُونَ مِنْ قَبْلُ ۖ وَلَوْ رُدُّوا لَعَادُوا لِمَا نُهُوا عَنْهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ

நரகின் முன்னே அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீராயின் “நாங்கள் திரும்ப அனுப்பப்படலாகாதா? எங்கள் இறைவனின் வசனங்களைப் பொய்யெனக் கருதாமல், நம்பிக்கை கொண்டோராக ஆவோமே’’ என்று கூறுவார்கள். மாறாக, இதற்கு முன் அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது. அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்டதையே மீண்டும் செய்வார்கள். அவர்கள் பொய்யர்களே.

(அல்குர்ஆன்: 6:27,28)

வெளிநாட்டு வாழ்க்கையையும், மறுமையில் ஏற்படும் நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த உலகிற்குத் திருப்பி அனுப்புமாறு கெஞ்சுகின்றான். ஆனால் அவனது கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது.

ஒருவன் தனது மரண வேளையின் போது துவங்கும் இந்தக் கெஞ்சல் அடுத்தடுத்து அவன் சந்திக்கின்ற ஒவ்வொரு கட்ட வேதனையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும்.

பணமும் பந்தமும் பயனளிக்காத நாள்

நரகத்தின் காட்சி அப்படி ஒரு காட்சி. அது ஓர் அகோரக் காட்சி. மனிதனை ஆட்டங்காணவும் அதிரவும் வைக்கின்ற காட்சி. அவன் காண்கின்ற அந்த நரகத்தின் அகோரமும் ஆர்ப்பரிப்பும் அது எழுப்புகின்ற அபாயகரமான ஒலியும் அதற்கு ஈடாகப் பூமி நிறைய பொன்னும் பொருளும் இருந்தாலும் அவற்றைக் கொடுத்து, தன்னை காப்பாற்றிக் கொள்ள நினைப்பான். ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.

وَلَوْ أَنَّ لِلَّذِينَ ظَلَمُوا مَا فِي الْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لَافْتَدَوْا بِهِ مِنْ سُوءِ الْعَذَابِ يَوْمَ الْقِيَامَةِ ۚ وَبَدَا لَهُمْ مِنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ

அநீதி இழைத்தோருக்கு பூமியில் உள்ளவை அனைத்தும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கும் இருக்குமானால் கியாமத் நாளில் தீய வேதனைக்கு ஈடாகக் கொடுப்பார்கள். அவர்கள் எண்ணிப் பார்க்காதவை அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளிப்படும்.

(அல்குர்ஆன்: 39:47)

அப்போது அவர்கள் தங்கள் வாழ்நாளில் பேசியதை எடுத்துக் கூறி நரகத்தின் வேதனையை அனுபவியுங்கள் என்று இறைவன் பதில் அளிப்பான். இதற்கு முன் அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது. அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்டதையே மீண்டும் செய்வார்கள். அவர்கள் பொய்யர்களே.

وَقَالُوا إِنْ هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ
وَلَوْ تَرَىٰ إِذْ وُقِفُوا عَلَىٰ رَبِّهِمْ ۚ قَالَ أَلَيْسَ هَٰذَا بِالْحَقِّ ۚ قَالُوا بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ

“நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

தமது இறைவன் முன் அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீராயின் “இது உண்மையல்லவா?’’  என்று இறைவன் கேட்பான். “ஆம். எங்கள் இறைவன் மீது ஆணையாக! (உண்மையே)’’ எனக் கூறுவார்கள். “நீங்கள் (என்னை) மறுத்துக் கொண்டிருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்!’’ என்று (இறைவன்) கூறுவான்.

(அல்குர்ஆன்: 6:29-30)

இப்போது அவன் நரகத்தில் தூக்கி வீசப்படுவான். அப்போது அவனிடம் மலக்குகள் எழுப்புகின்ற கேள்வியும் அவன் அளிக்கின்ற பதிலையும் பாருங்கள். அதில் அவர்கள் போடப்படும்போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கடும் இரைச்சலைச் செவியுறுவார்கள்.

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ
قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ

கோபத்தால் அது வெடித்திட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் “எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?’’ என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

அதற்கவர்கள் “ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்’’ எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 67:8-9)

مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ
وَأَنْذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ نُجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُمْ مِنْ قَبْلُ مَا لَكُمْ مِنْ زَوَالٍ

(அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராகத் தறிகெட்டு ஓடுவார்கள். (நிலைகுத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.

மனிதர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) “எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்’’ என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன் நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?

(அல்குர்ஆன்: 14:43,44)

அரபு நாட்டிலிருந்து தப்பி வர முனைந்தது போன்றும், முயற்சித்தது போன்றும் இப்போது நரகத்திலிருந்து தப்பி வர நினைக்கின்றான். ஆனால் நரகத்திற்குத் திரும்ப அனுப்பப்பட்டு விடுகின்றான்.

ஒரு நாள் விடுமுறை வேண்டி விண்ணப்பம்

வேதனையிலிருந்து ஒரு நாள் விடுமுறைக் கோரி நரகத்தின் அதிகாரிகளிடம் விண்ண்ப்பிக்கின்றனர்.

وَقَالَ الَّذِينَ فِي النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِنَ الْعَذَابِ

“உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்’’ என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 40:49)

அதற்கு நரகத்தின் அதிகாரிகள் சொல்கின்ற பதில் இதோ:

قَالُوا أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنَاتِ ۖ قَالُوا بَلَىٰ ۚ قَالُوا فَادْعُوا ۗ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ

“உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?’’ என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ‘‘ஆம்’’ என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.

(அல்குர்ஆன்: 40:50)

எரியும் நெருப்பில் எறியப்பட்டதும் அங்கும் அவன் ஊருக்கு, உலகுக்கு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சுவான்.

قَالُوا رَبَّنَا أَمَتَّنَا اثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَىٰ خُرُوجٍ مِنْ سَبِيلٍ

“எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?’’ என்று அவர்கள் கேட்பார்கள்.

(அல்குர்ஆன்: 40:11)

மரணத்தைக் கேட்டு மன்றாடும் அவலம்

தப்பிக்க வழியில்லை எனும் போது மரணத்தைக் கேட்டு மன்றாடுவார்கள். அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்படுகின்றது.

وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ ۖ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ

“(நரகக் காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்களுக்கு எதிராக (மரணத்தை)த் தீர்ப்பளிக்கட்டும்’’ எனக் கேட்பார்கள். “நீங்கள் (இங்கேயே) இருப்பீர்கள்’’ என்று அவர் கூறுவார்.

(அல்குர்ஆன்: 43:77)

இவை அத்தனை வசனங்களுமே ஒருவன் நரகில் கிடந்து கொண்டு ஊருக்கு, உலகுக்குத் திரும்ப அனுப்புங்கள் என்று கெஞ்சிக் கேட்கின்ற புலம்பல்களாகும்.

இறுதியாக இவர்களிடம் அல்லாஹ் சொல்கின்ற வார்த்தையைக் கேளுங்கள்.

وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ ۖ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ

“எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்’’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)

(அல்குர்ஆன்: 35:37)

இவை அனைத்தும் உணர்த்தும் உண்மை ஒன்றே ஒன்றைத் தான்.

உலகில் வாழும் போது வெளிநாட்டு வேலைக்குச் சென்று, அங்கு வேலை சரியில்லை என்றதும் தப்பித்து வந்தது போல் மறுமை வாழ்க்கையிலிருந்து தப்பி வரவே முடியாது என்பதை உணர்த்துகின்றன. முஸ்லிம்களும் சரி! முஸ்லிம் அல்லாதவர்களும் சரி! இந்த நாளைப் பற்றிக் கடுகளவு கூட அச்சமற்று இருக்கின்றனர்.

மறுமை உலகம் என்பது திரும்ப வர முடியாத ஒரு வழிப்பாதையும் ஒரு வழிப் பயணமும் ஆகும். அப்படிப்பட்ட ஒரு வழிப்பாதையில் வெற்றி பெற்று சுவனம் அடையும் நன்மக்களாய் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!