மறுமையை நாசமாக்கும் கடன்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கடன் கொடுக்கக் கூடியவர்களாகவோ, கடன் வாங்கக் கூடியவர்களாகவோ இருப்போம். கடன் பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் நடந்துக் கொள்ள வேண்டிய முறைகளை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. கடன் வாங்குவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. எனினும், கடன் வாங்குபவர், தான் பெற்ற கடனை அமானிதமாக நினைத்து சரியான முறையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

கடன் ஓர் அமானிதம்

நிச்சயமாகக் கடன் நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட  அமானிதம். அதை கண்டிப்பாக சரியான முறையில் திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:58)

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۙ‏

அமானிதங்களை ஒப்படைத்து விட வேண்டும் என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகின்றான். (அல்குர்ஆன்: 23:8, 70:32) ஆகிய வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அமானிதங்களை நிறைவேற்றுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அமானிதங்களை நிறைவேற்றுவது ஈமானிய பண்புகளில் உள்ளதாகும்.

நம்மில் பெரும்பாலோர் கடனை ஓர் அமானிதமாகவே கருதுவது கிடையாது. அதனால் அதைத் திரும்பக் கொடுப்பதைப் பற்றிக் கவலைப்படுவதும் கிடையாது. கவலைப்படுவது ஒருபுறம் இருக்கட்டும். அலட்டிக் கொள்வது கூட கிடையாது. இன்னும் சொல்லப் போனால் கடன் வாங்கியவர் தான் கடன் கொடுத்தவர் போல் நடந்து கொள்வார். வாங்கிய கடனைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், காலரை உயர்த்தி விட்டு நடமாடுவார். கடன் கொடுத்தவன் உள்ளம் பதறும். இந்த நம்பிக்கை துரோகம் யாருடைய குணம் தெரியுமா?

நம்பிக்கைத் துரோகம் செய்வது நயவஞ்சகனின் பண்பு

அமானிதத்தை நிறைவேற்றாமல் நம்பிக்கைத் துரோகம் செய்வதை முனாஃபிக்குகளின் பண்புகளில் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ.

“நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று.

  • பேசினால் பொய்யே பேசுவான்.
  • வாக்களித்தால் மீறுவான்.
  • நம்பினால் துரோகம் செய்வான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 33) 

மேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றுள்ள நயவஞ்சகரின் பண்புகளில் மூன்று பண்புமே கடன் வாங்கியவரிடம் குடி கொண்டு விடுகின்றன. கடன் வாங்கியவர்களின் இந்தப் போக்கால் வசதியானவர்கள் கடன் எனும் இந்த வாசலையே அடைத்து விட்டார்கள். கையில் பணம் வந்தவுடன், கடனை உடனேயே அடைக்கும் குணம் நம்மிடம் இருந்தால், கடன் என்பது எளிதான ஒன்றாக இருக்காதா? நாம் நிறைவேற்றுகிறோமா?

கடனை உடனே நிறைவேற்றுதல்

கடன் வாங்கியவருக்குக் கொஞ்ச நாளில் ஒரு வசதி வந்து விடும். அப்படி ஒரு வசதி வந்ததும், அவர் வாங்கிய கடனை மருந்துக்குக் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. அவசியம், கட்டாயம், இன்றியமையாத செலவு என்றிருந்தால் அதை நிறைவேற்றுவதில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் அவசியமில்லாத ஒரு செலவைச் செய்து விட்டு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தாமதப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்.

عَنْ أَبِي ذَرٍّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ :
كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا أَبْصَرَ ، يَعْنِي أُحُدًا- قَالَ مَا أُحِبُّ أَنَّهُ يُحَوَّلُ لِي ذَهَبًا يَمْكُثُ عِنْدِي مِنْهُ دِينَارٌ فَوْقَ ثَلاَثٍ إِلاَّ دِينَارًا أَرْصِدُهُ لِدَيْنٍ

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹது மலையைப் பார்த்த போது, “இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரைக் கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன். கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற ஒரு தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். 

அறி : அபூதர் (ரலி),
நூல் : (புகாரி: 2388) ,(முஸ்லிம்: 1654)

தன்னிடம் உஹது மலை அளவுக்குத் தங்கம் கிடைத்தால் அதில் கடனை அடைப்பதற்காக மட்டும் ஒரு தீனாரை எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள அனைத்தையும் தர்மம் செய்து விடுவேன் என்று கூறுகின்றார்கள். இதன் மூலம் வசதி வரும் போது கடனுக்கு என்றுள்ள தொகையை ஒதுக்கி வைத்து விட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழி காட்டுகின்றார்கள். அதே சமயம் எவ்வளவு முயற்சி செய்தாலும் பெற்ற கடனை குறிப்பிட்ட நாளில் செலுத்த முடியாத சூழல் ஏற்படலாம். அப்போது கடன் கொடுத்தவர் கடுமையாக பேசினால், அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

கடனை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டால்
عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ،
أَنَّ رَجُلاً تَقَاضَى رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَأَغْلَظَ لَهُ فَهَمَّ أَصْحَابُهُ فَقَالَ دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً وَاشْتَرُوا لَهُ بَعِيرًا فَأَعْطُوهُ إِيَّاهُ وَقَالُوا لاَ نَجِدُ إِلاَّ أَفْضَلَ مِنْ سِنِّهِ قَالَ اشْتَرُوهُ فَأَعْطُوهُ إِيَّاهُ فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களை நோக்கி, “விட்டு விடுங்கள். ஏனெனில் ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், “அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள். 

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 2390) ,(முஸ்லிம்: 3003)

நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவருக்குரிய அந்த உரிமையை வழங்கிவிட்டு, வாங்கிய கடனைத் திரும்ப வழங்குகின்றார்கள். அதையும் திருப்தியாக நிரம்பவே வழங்குகின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதரின் இந்தச் செயலில் ஒவ்வொரு கடனாளிக்கும் அழகிய முன்மாதிரியும், உரிய பாடமும், படிப்பினையும் இருக்கின்றன. கையில் காசை வைத்துக்கொண்டு தாமதப்படுத்துவது ஒரு துரோகம்!

கால தாமதம் ஒரு துரோகம்

கடன் வாங்கியவருக்கு என்றைக்கு வசதி வந்து விடுகின்றதோ அன்றைக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவது கடமையாகி விடுகின்றது. அப்படி வசதி வந்த பின்பும் செலுத்தவில்லை என்றால் அவர் ஒரு துரோகியாகி விடுகின்றார்.

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:

مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ فَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتْبَعْ.

“செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல்) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 2287) , 2288, 2400,(முஸ்லிம்: 2924)

கையில் வசதி வந்த பின்பும் கடனை அடைக்க முன் வராதது கடன்பட்டவர், கடன் கொடுத்தவருக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

கடன் கொடுத்தவருக்கு முக்கிய தேவை இருக்கலாம்!
الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ ، وَلاَ يُسْلِمُهُ ،

“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான். கைவிட்டு விடவும்மாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். 

நூல் : (புகாரி: 2442)

ஆனால் இன்று கடன் தந்தவருக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். இது மாபெரும் அநியாயமும், அக்கிரமும் ஆகும். இன்று முஸ்லிம் வியாபாரிகள் இந்தப் போக்கை, அலட்டிக் கொள்ளாமல் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பல மைல்கள் மண்டையைப் பிளக்கும் வெயிலில் சைக்கிள் அழுத்தி வந்து சரக்கு போடும் வியாபாரியிடம் கடையில் அமர்ந்திருக்கும் வியாபாரி, கல்லாவில் காசிருந்தாலும், நாளைக்கு வாருங்கள் என்று அலைக்கழிப்பது கொடுமையிலும் கொடுமையில்லையா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள்

இன்று கடன் என்ற பெயரில் யாசக வேட்டை நடக்கின்றது. இவர்கள் அகராதியில் கடன் வாசகம் என்பது யாசகம் என்ற பெயரைக் கொண்டதாகும். வாங்கும் போதே இவர்கள் யாரிடம் வாங்குகின்றார்களோ, அவர்களை ஒரு வகையாக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டியே களத்தில் இறங்குகின்றனர். இப்படிப் பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள் ஏமாற்றுவதற்காகவே இந்தக் காரியத்தை செய்து வாங்கிய கடனை திரும்பக் கொடுப்பதில்லை. அவர்களுடைய எண்ணத்திற்குத் தக்க அல்லாஹ்வும் அவர்களுக்கு உதவுவதில்லை.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ.

யார் மக்களின் பொருளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கடன் வாங்குகின்றாரோ, அவர் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். யார் அதை அழித்து விட வேண்டும் என்று எண்ணி (ஏமாற்றி) கடன் வாங்குகின்றாரோ அதை அல்லாஹ் அழித்தே விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 2387) 

எவ்வளவு பொருத்தமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்று பாருங்கள். இவர்கள் கடனை வாங்கி ஆட்டையை போடுவதால் உண்மையில் கடன் வாங்கி திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தில் கேட்பவர்களும் பாதிக்கப்பட்டு விடுகின்றார்கள். அவர்கள் இந்த ஏய்ப்பு ஏமாற்று வேலையால், ஏமாற்றிப் பிழைக்கும் சித்து வேலையால் வளர் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள சுத்தமான தொழில் முனைவோர்கள் ஈடுசெய்ய முடியாத இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

திரும்பக் கொடுக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டே ஒரு பொருளை வாங்குவதற்குப் பெயர் கடன் அல்ல! அது மோசடியாகும்.

மறுமையை நாசமாக்கும் கடன்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
« يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلاَّ الدَّيْنَ ».

“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 3832) (3498)

கடன் வாங்கி மோசடி செய்பவர்களுக்கு இந்த ஹதீஸ் ஓர் எச்சரிக்கையாகும். ஷஹீதை விட உயர்ந்த அந்தஸ்து கொண்டவர் யாரும் இருக்க முடியாது. இத்தகைய பெரிய தகுதியைப் பெற்றவருக்கும் கடன் வாங்கியதன் காரணத்தால் அல்லாஹ் பாவத்தை மன்னிக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். அதாவது கடன் கொடுத்தவர் மன்னிக்காத வரை சுவர்க்கத்தில் ஷஹீது, தன்னுடைய பூதஉடலுடன் நுழைய முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு கடன் விஷயத்தில் நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

மறுமையில் மனிதனுக்கு உள்ள ஒரே ஒரு செலவாணி அமல் என்ற செலவாணி தான். இந்த உலகில் கடன் வாங்கியவர் அதை அடைக்காமல் இருந்தால் மறுமையில் அவருடைய அமல்கள் கடன் கொடுத்தவருக்கு வழங்கப்பட்டு விடும். இறுதியில் இவர் நரகம் போய்ச் சேர வேண்டியவராகி விடுவார்.

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
« أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ». قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ. فَقَالَ « إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِى يَأْتِى يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِى قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِى النَّارِ ».

“திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, “யாரிடத்தில் பணமும் பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார்.

எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்” என்று சொன்னார்கள். 

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5037) (4678)

நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப கால கட்டங்களில் கடன் பட்டவரின் ஜனாஸாவுக்குத் தொழுவிப்பது கிடையாது. கடன்பட்ட ஒருவரின் ஜனாஸாவுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க மறுத்து விடுகின்றார்கள். உடனே அபூகதாதா (ரலி) பொறுப்பேற்றதும் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள் என்ற செய்தியை புகாரியில் காண முடிகின்றது. (நூல்: (புகாரி: 2289)

 أَنَّ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِن الْمَأْثَمِ وَالْمَغْرَمِ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللهِ مِنَ الْمَغْرَمِ قَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும்போது “யா அல்லாஹ்! உன்னிடம் பாவத்தை விட்டும், கடனை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்” என்று தொழுகையில் கூறுவார்கள். (இதையறிந்த) ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் கடன்படும் போது பொய் பேசுகின்றான். வாக்குறுதி அளித்து அதற்கு மாறு செய்கின்றான் என்று பதிலளித்தார்கள். 

அறி : ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 2397) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கடன் வாங்கியவனின் உண்மை நிலைமையை எடுத்துக் காட்டுகின்றார்கள். அதனால் கடன் என்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் அதைவிட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பாதுகாப்பு தேடியதால் நாமும் அந்த கடனை விட்டு பாதுகாப்பு தேடுவதன் மூலம் கடன் வாங்கும் அந்தப் பாதையை நம்மால் முடிந்த வரை அடைத்து விட வேண்டும்.

இன்று சமுதாயத்தில் மார்க்கம் அனுமதிக்காத பல விருந்துகளை பல லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். உதாரணமாக பெண் வீட்டு தரப்பில் எந்த விருந்தையும் மார்க்கம் அனுமதிக்கவில்லை. பெண் வீட்டுக்காரர்கள் நகையை – பெருந்தொகையை – வரதட்சணையாக மாப்பிள்ளைக்குக் கொடுப்பதுடன் பெரும் விருந்தும் படைக்கின்றனர். சொந்தப் பணத்திலா? இல்லை. கடன் வாங்கியே செய்கின்றனர். இதுபோன்று கச்சேரி, கொட்டு, மேளதாளம் என்ற வகைக்காகவும் பெண் வீட்டார் செலவு செய்கின்றனர்.

பொதுவாக கத்னா, குழந்தையின் காது குத்துவிழா, சடங்கு விழா போன்ற காரியங்களுக்கு கடன் வாங்கி எல்லோரும் செலவு செய்கின்றனர். இதுபோன்ற காரியங்களுக்கு சொந்தக் காசில் செலவு செய்வதே கூடாது எனும்போது கடன் வாங்கி செலவு செய்வது பெருங்குற்றமல்லவா? இந்த வகைக்கு ஒருவர் கடன் கேட்பது ஹராம். இந்த வகைக்கு ஒருவர் கடன் கொடுப்பதும் ஹராம். இவர்கள் அல்லாஹ்விடத்தில் மாபெரும் விசாரணைக்கும் தண்டணைக்கும் உரியவர்கள் ஆவார்கள்.

எனவே கடன் வாங்குபவர்கள் இது போன்ற காரியங்களுக்காக கடனை வாங்கி இம்மையில் ஓட்டாண்டியாகி விடக் கூடாது. அது போல் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் இருந்து மறுமையிலும் ஓட்டாண்டியாகி விடக் கூடாது. அப்படிப்பட்ட பாவிகள் கூட்டத்தை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.