மறுமையிலும் தனக்கே செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறிய போது

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறயதாவது :

நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்து கொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. ஆகவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனது கடனைச் செலுத்தமாட்டேன் என்று சொன்னார்.

நான், நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒரு போதும் நிராகரிக்க மாட்டேன் என்று சொன்னேன்.

அதற்கவர் இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா? அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும் போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன் என்று சொன்னார்.

அப்போது தான் ”நம் வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவானவற்றை அறிந்து கொண்டானா? அல்லது, கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? இல்லை; அவன் சொல்வதை நாம் எழுதிவைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம். அவன் (தன் உடைமைகள் எனப் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியனவாகிவிடும். அவன் (செல்வம் சந்ததி எதுவுமின்றி) தனியாகவே நம்மிடம் வருவான்” எனும் (19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன.

(புகாரி: 4735)