மருத்துவர் கஃபீல்கானின் உருக்கமான கடிதம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

மருத்துவர் கஃபீல்கானின் உருக்கமான கடிதம்

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்த சிலிண்டர் கம்பெனி, ஆள்வோருக்கும், அரசு மருத்துவர்களுக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. அதனால் சிலிண்டருக்கான பணத்தை கோரக்பூர் அரசு மருத்துவமனை விடுவிக்கவில்லை. ஏற்கெனவே ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்ததற்கான பணத்தைத் தராததால் சிலிண்டர் கம்பெனி ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்ய மறுத்து விட்டது. இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 72 பச்சிளம் குழந்தைகள் இறந்து போனார்கள்.

அந்தச் சமயத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்த மனிதநேய மிக்க கஃபீல்கான் என்ற முஸ்லிம் மருத்துவர், தனது சொந்தச் செலவில் வேறு நிறுவனங்களிடமிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி, நிறைய பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து, அவர்களின் உயிர்களைக் காப்பாற்றினார். 72 குழந்தைகளின் உயிரிழப்பு சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த குழந்தைகளைப் பார்வையிட அரசு மருத்துவமனைக்கு வந்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத். அதற்குப் பிறகு நடந்ததை மனிதநேய முஸ்லிம் மருத்துவர் கஃபீல்கானே விவரிக்கிறார்.

படியுங்கள். ‘13.08.17 அன்று காலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகிஜி மஹராஜ் வந்த போது என் வாழ்க்கை தலைகீழாக மாறியது. அவர் என்னிடம் கேட்டார். நீ தான் அந்த கஃபீல்கானா? நீ தான் அந்த சிலிண்டர்களை ஏற்பாடு செய்தாயா? என்று கேட்டார். ஆமாம் சார் என்றேன். அவர் மிகுந்த கோபத்துடன் என்னைப் பார்த்து கேட்டார். சிலிண்டரை ஏற்பாடு செஞ்சுட்டா……..நீ ஹீரோ ஆயிருவியா? இரு இரு நான் கவனிக்கிறேன். யோகிஜி கோபமாக இருந்ததற்கு காரணம் இந்தச் சம்பவம் ஊடகங்களில் எப்படி வெளியானது? என்பது தான்.

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். அந்த இரவில் எந்த ஊடகவியலாளருக்கும் நான் இது குறித்த செய்தியைத் தெரிவிக்கவே இல்லை. முந்தைய நாள் இரவிலிருந்தே அவர்கள் மருத்துவமனையில் இருந்தனர். அதன் பிறகு காவல்துறையினர் என் வீட்டுக்கு வரத் துவங்கினர். கத்தி, அச்சுறுத்தி எனது குடும்பத்தினரை சித்ரவதை செய்தனர். அவர்கள் என்னை போலி என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என பலரும் எச்சரித்தனர். என் அம்மா, என் மனைவி, என் குழந்தைகள், என் குடும்பம் மிகவும் அச்சத்தில் இருந்தது. அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அவமானம், துன்பத்திலிருந்து என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நான் சரணடைந்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் நிச்சயம் நான் நீதியைப் பெற்றாக வேண்டும். ஆனால் டிசம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் என்னை பிணையில் விடுவார்கள் என நம்பியே கழிந்தன. பின்னர் நீதித்துறையும் நெருக்கடியின் கீழ் செயல்படுகிறது என்பதை நான் உணர்ந்தேன். ஒரு தடுப்பு முகாமின் கட்டாந்தரையில் 150க்கும் மேற்பட்ட சிறைவாசிகளுடன் இரவில் லட்சக்கணக்கான கொசுக்களுடனும், பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுடனும் தூங்கினேன்.

உயிர் வாழ, உணவை விழுங்க, வயலில் அறை நிர்வாணமாகக் குளிக்க, உடைந்த கதவு கொண்ட கழிப்பறைக்குள் உட்கார நான் முயற்சிக்கிறேன். ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் என் குடும்பத்தை சந்திக்கக் காத்திருக்கிறேன். எனக்கும், என் குடும்பத்துக்கும் வாழ்க்கை என்பதே நரகமாகி விட்டது. அது துன்பகரமாக அமைந்து விட்டது. காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் வரை, கோரக்பூரில் இருந்து அலகாபாத் வரை என நிதியைப் பெற்று விடும் நம்பிக்கையில் என் குடும்பத்தினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அனைத்தும் வீண். உண்மையிலேயே நான் குற்றவாளியா? இல்லவே இல்லை. இது சிறையிலிருந்து டாக்டர். கஃபீல்கான் எழுதிய கடிதம்.

மனதை உருக்கும் இந்தக் கடிதம் வெளியான பிறகு தான் அவருக்குப் பிணை கிடைத்துள்ளது. காவிகளின் ஆட்சி நடைபெறும் உ.பி.யில் சொந்தச் செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி, பச்சிளம் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றியது ஒரு பெருங்குற்றம். இந்த பெருங்குற்றத்தைச் செய்த மனிதநேய முஸ்லிம் மருத்துவருக்கு பல மாதங்கள் சிறை. உயிர்ப்பலி ஏற்படக் காரணமாக இருந்த யோகி ஆதித்யநாத் போன்றவர்களுக்கு உயர்தர சொகுசு வாழ்க்கை.

இதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவ்வுலக வாழ்க்கை இறை நம்பிக்கையாளர்களுக்கு சிறை போன்றது. இறை நம்பிக்கையற்றவர்களுக்கு இது சுவனமாகும்’ என்றார்கள்.

மருத்துவர் கஃபீல்கான் ஒரு இறை நம்பிக்கையாளர். அதனால் அவருக்கு சிறை வாழ்க்கை. இந்த சிறை வாழ்க்கை அவருக்கு மறுமையில் சுவர்க்கம் என்ற மகத்தான பரிசை பெற்றுத் தரும். இதனால் அவர் கலங்க வேண்டியதில்லை. கவலைப்பட வேண்டியதில்லை. இப்படிப்பட்ட சோதனைகள் இறை நம்பிக்கையாளர்களுக்கு வருவது இயல்பானது. கஃபீல்கான் மட்டுமல்ல ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே இது மாதிரியான ஏதாவது ஒரு சோதனையில் சுழற்றியடிக்கப்படுகிறது. இதை மனித நேய முஸ்லிம் மருத்துவர் கஃபீல்கான் அறிவாரா..?

Source : உணர்வு ( 04 / 05 / 18 )