மருத்துவக் காப்பீட்டில் சேரலாம் என்பது சரியா?

கேள்வி-பதில்: வியாபாரம்

மருத்துவக் காப்பீட்டில் சேரலாம் என்பது சரியா?

மருத்துவக் காப்பீடு கூடாது என்பதற்கு நீங்கள் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.

காய்கள் பழுப்பதற்கு முன்பாக அவை மரத்தில் இருக்கும் நிலையில் அவற்றுக்காக விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். நீங்கள் இதை சுட்டிக்காட்டி மருத்துவ காப்பீடும் இதைப் போன்றது எனக் கூறுகிறீர்கள்.

காய்கள் கனிந்து பறிக்கப்படுவதற்கு முன்பாக விலை பேசினால் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகக் கனிகளை குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் விற்றவர் நஷ்டப்படுவார். விலை பேசப்பட்ட காய்கள் முறையாகக் கனியாமல் அழிந்து விட்டால் வாங்கியவர் நஷ்டப்படுவார்.

இந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட கனிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. அதனடிப்படையில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகின்றது. இந்த ஒப்பந்தத்திற்கு மாற்றமாக முடிவு ஏற்பட்டால் விற்பவரோ வாங்குபவரோ ஏமாற்றப்பட்டு விடுகின்றார்.

செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவு அமையவில்லை. இதில் ஒப்பந்த மீறல் இருக்கின்றது. இதன் காரணத்தால் இதை மார்க்கம் தடை செய்கின்றது.

ஆனால் மருத்துவ காப்பீடு என்பது மேற்கண்ட வியாபாரத்தைப் போன்று ஏமாறுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதல்ல. செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாற்றமாக நடக்கும் எந்த அம்சமும் இம்முறையில் இல்லை.

இதில் இணையும் அனைவரும் இந்தத் திட்டத்தால் தனக்கு பயன் கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம் என்பதை அறிந்து கொண்டு தான் இணைகிறார்கள். இவர்கள் ஒப்பந்தம் செய்தபடி நோய் ஏற்பட்டவர்கள் பலனடைகிறார்கள். நோய் ஏற்படாதவர்கள் தங்கள் பணத்தை விட்டுத் தருகின்றனர். செய்யப்பட்ட ஒப்பந்தம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனவே இதை மேற்கண்ட தடை செய்யப்பட்ட வியாபாரத்துடன் ஒப்பிடக் கூடாது.

அடுத்து மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் இதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவதாகக் கூறியுள்ளீர்கள். ஒரு வியாபாரத்தில் அதிக லாபம் வருவதால் அது கூடாத வியாபாரமாகி விடாது. இஸ்லாம் தடை செய்யாத வியாபாரத்தில் எவ்வளவு அதிகமாக லாபம் வந்தாலும் அது தவறல்ல.

மேலும் இந்த நிறுவனங்கள் வட்டித் தொழிலில் ஈடுபடாமல் இருப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்விஷயத்தில் மருத்துவக் காப்பீடு செய்பவருக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் வட்டி அம்சம் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

அவர்கள் நம்மிடம் ஒப்பந்தம் செய்யும் போது நோய் ஏற்படாதவர்கள் கொடுத்த பணத்திலிருந்தே நோய் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தில் வட்டி இல்லையென்பதால் இது அனுமதிக்கப்பட்ட வியாபாரம். இதன் பிறகு அவர்கள் நமது பணத்தை வாங்கி என்ன செய்தாலும் அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம்.

மேலும் இந்த முறை சூதாட்டத்தைப் போன்று உள்ளது என்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். மருத்துவ காப்பீடு செய்வதும் சூதாட்டமும் ஒரே மாதியானதல்ல. இரண்டிற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.

சூதாட்டத்தில் பங்குகொண்டவர்கள் ஒவ்வொருவரும்., தானே வெற்றி பெற்று அனைவரின் பொருளையும் பெற வேண்டும் என்று பேராசைப்படுவார்கள். தோல்வியுற்றவர்கள் தங்களுடைய பொருள் தவறிவிட்டதே என வயிற்றெரிச்சல் படுவார்கள். வெற்றி பெற்றவன் மீது பொறாமைப்படுவார்கள்.

அடுத்தவன் பொருளை எடுக்க வேண்டும் என்ற பேராசையினாலும் இழந்த தன்னுடைய பொருளை மீட்க வேண்டும் என்ற வெறியினாலும் எதை வேண்டுமானாலும் வைத்து சூதாட முன்வருவார்கள். இறுதியில் அனைத்தையும் இழந்து மன உளைச்சலுடனும் ஏமாற்றத்துடனும் வெறுங்கையோடு திரும்புவார்கள். இதனால் தான் சூதாட்டத்தில் பிரச்சனைகளும் சண்டைகளும் எழுகின்றன. இதனால் இது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவக் காப்பீடு என்பது இது போன்றதல்ல. இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் நோயுற்றால் தான் இதன் மூலம் பலனடைய முடியும். இந்தப் பலனை அடைவதற்காக தான் நோயுற வேண்டும் என யாரும் விரும்ப மாட்டார்கள். நோயுற்றவர் பலனடைந்தால் அவரைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட மாட்டார்கள்.

மனிதாபிமான அடிப்படையில் அனைவரின் ஒப்புதலுடனும் நோயுற்றவருக்காக மற்றவர்களின் பணம் செலவிடப்படுகின்றது. இதில் போட்டி பொறாமை ஏமாற்றம் வயிற்றெரிச்சல் ஆகிய அம்சங்கள் எதுவுமில்லை. எனவே மருத்துவக் காப்பீடு செய்வது தவறான ஒன்றல்ல.